அரசியலும் சத்தியமும்
திரு. சீனிவாசய்யங்கார் அவர்களை திரு. லாலா லஜபதிராய் அவர்கள் “பூரண சுயேச்சையே வேண்டுமென்று கேட்பவர்களான தாங்கள் ராஜபக்திப் பிரமாணம் செய்யலாமா” என்று கேட்டபொழுது அதற்கு பதில் திரு. அய்யங்கார் “நான் அந்த பிரமாணத்தை மனதில் வேறு ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு கபடமாக பிரமாணம் செய்தேனே ஒழிய உண்மையாக செய்யவில்லை” என்று சொன்னாராம் இதை பச்சை தமிழில் சொல்வதானால் “பொய்ச்சத்தியம் செய்தேனே ஒழிய உண்மையாக சத்தியம் செய்யவில்லை” என்று சொன்னாராம். உடனே திரு. லாலாஜி “அப்படியானால் மற்றபடி நீர் இப்போது என்னிடம் பேசியதாவது உண்மைதானா அல்லது இதிலும் ஏதாவது ஒன்றை மனதில் நினைத்துக் கொண்டு, வேறு ஏதாவது வாயில் பேசுகிறீரா என்ன” வென்று கேட்டராம். திரு. அய்யங்கார் வெட்கித் தலைகுனிந்து கொண்டாராம்.
நமது தென்னாட்டுப் பார்ப்பனர்களின் தலைவர்களானவரிடத்தில் சத்தியத்திலேயே இரண்டு விதம். அதாவது பொய் சத்தியம் நிசமான சத்தியம் என்பதான வித்தியாசங்கள் இருந்தால் இனி சாதாரணமாக அதாவது சத்தியம் என்று எண்ணாமல் பேசும் விஷயங்களில் எத்தனை வித வித்தியாசங்கள் இருக்கும் என்பதை கண்டுபிடிக்க வல்லவர்கள் யார் என்பது நமக்கு விளங்கவில்லை. ஆனபோதிலும் இந்த பொய் சத்திய முறைகூட தற்காலத் தில் அனேக கனவான்களுக்கு மிகவும் யோக்கியமான முறை யென்றேற் பட்டு திரு. அய்யங்காருக்கு நற்சாட்சிப் பத்திரங்கள் கொடுக்க முன் வந்திருக் கின்றார்கள்.
அதாவது திருவாளர்கள் சத்தியமூர்த்தியும் வரதராஜுலுவும் முறை யே இந்தியாவின் அரசியலை நடத்த திரு. சீனிவாசய்யங்காரே தக்க பெரியாரென்றும் இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களும் இந்த திரு. சீனிவாசய்யங்காரையே நம்பி இருக்கின்றார்கள் என்றும் சொல்லி அய்யங் காரை குஷால் படுத்தினார்கள். போதாக்குறைக்கு திருவாளர் சி. ராஜகோபா லாச்சாரி என்கின்ற சத்தியகீர்த்தியும் “திரு. சீனிவாசய்யங்காரை விட்டால் சென்னை மாகாணத்தில் காங்கிரசை நிர்வகிக்க வேறு தக்க நபர் கிடையாது” என்று பம்பாயில் சொன்னார். இவர்களே இப்படி சொல்லியிருக்க மற்றபடி இதே கூட்டத்தில் இருக்கும் திருவாளர்கள் குழந்தை, குப்புசாமி, அண்ணா மலை, கந்தசாமி, அமித்கான் முதலிய தலைவர்கள் சொல்லுவதைப் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டுமா என்று கேட்கின்றோம். எனவே அரசியல் என்பது எவ்வளவு அயோக்கியத்தனம் என்பதையும் எந்த விதத்திலும் இந்த அரசியல் ஸ்தாபனங்கள் மானம் வெட்கம் ஒழுக்கம் நாணையம் முதலிய வைகள் இல்லாதவர்களுக்கே சொந்தமாக இருக்கின்றது என்பதையும் பொது ஜனங்கள் உணருவதற்காகவே இதை எழுதுகின்றோமேயல்லாமல் மேற் கண்ட கனவான்களின் யோக்கியதையை பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காக இதை எழுதவில்லை.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 18.11.1928