நமது மாபெருந்தலைவர்களின் உருவப்படத் திறப்பு விழா தியாகராயர் ஞாபகக் கட்டிடத்தில் பெருங்கூட்டம்
தலைவரவர்களே! சகோதரர்களே! பெரியோர்களின் கட்டளையை ஏற்று கௌரவமடைய மனம் ஆசைப்படுகிறது. சர். தியாகராயருடன் நான் நட்பு பாராட்டியிருக்கவில்லை. ஆயினும் அவரையே தக்க பெரியார் எனக் கொண்டு அவர்பால் பக்தி கொண்டுள்ளேன். அவரை உண்மைத் தியாகி, வீரர் என்றே கூறுதல் பொருந்தும். உண்மையான தலைவர் என்று ஒருவரை குறிக்கவேண்டுமானால் அது செட்டியாரையே குறிக்கும் என்று நான் சொல்லுவேன். உண்மைத் தியாகி, தேசத் தொண்டர், தலைவர் என்று கூறுவதற்கு என்ன அடையாளம் என்றால், சாபங்களையும், வைதல்களையும், இழிவுரைகளையும் பார்த்து பயப்படாமலும் தங்கள் கொள்கைகளை வாபஸ் வாங்காமலும் தைரியத்துடன் தங்கள் காரியங்களை நடத்துபவர்களே உண்மைத் தலைவர்கள். சர். தியாகராயரை இங்கு தமிழ்நாட்டு ‘டயர்’ என்று கூட எதிரிகளால் கூறப்பட்டது. அவரை தேசத்துரோகி என்றெல்லாம் கூறினர். அவரின் வீடு புகுந்தும் அடிக்கத் தலைப்பட்டனர். இவ்வளவு கஷ்டங்களை யும் அவர் நேரில் அனுபவித்தனர். தேசத்துரோகி, டயர் என்ற இழிவுரை கட்கும், அடித்தல் போன்றவைகட்கும் சர். தியாகராயர் பயப்படாமல், பின் வாங்காமல், சிரித்துக் கொண்டே தம் காரியாதிகளை நடத்திக் கொண்டு போனார். இவ்வித தலைவர் தோன்றுவது அரிது. ஆனால் இப்படியில்லாமல் சமயத்துக்கேற்றபடி நடக்கும் தலைவர்களும் உண்டு. அவர்கள் தோன்றுவது சாதாரண இயற்கை. அவர்கள் வசவு வந்த காலத்தில் ஒளிவதும், புகழுரை வந்த காலத்தில் தலையை யசைத்தசைத்து அநுபவிப்பதும் சாதாரண இயற்கையே. இவர்களின் பேர் இவர்கள் காலமானதற்குள் காற்றோடு காற்றாகி விடும். ஆனால், மேற்கண்டபடி எதற்கும் பயப்படாமல் தான் கொண்ட கருமத்தை முடிக்கும் செயலானது இறந்த பின்னர் கூட இத்தகைய திறப்பு விழா போன்ற ஞாபகார்த் தக் காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது. மக்களின் முன்னேற்றத்திலும், நாட்டின் நலனிலுமே அவர் தன் காலத்தைக் கடத்தினார். எவரும் தமக்கு வரும் பிரதியுபகாரங்களை ஒதுக்கித் தள்ளுவது வெகு கடினம்; ஆனால், அவர் அத்தகைய பிரதியுபகாரங்களைத் தள்ளி அதையும் தம் நண்பர்கட்கே அளித்து வந்தார். பிரதியுபகாரங்களை அலட்சியம் செய்வதும் தியாக புத்தியேயாகும். தென்னாட்டு மக்களுக்கென எடுத்த முயற்சியில் அவரைப் போன்றவர்கள் எவருமேயில்லை. அத்தகைய பெரியாரின் உருவப் படத்தைத் திறந்து வைக்கக் காரணம் என்ன? கற்பூர தீபம் காட்டி பூஜை செய்வதற்காகவாகவோ, அவரின் நன்மைக்கென பிரார்த்தனை கள் செய்வதற்காகவாவோ அன்று. அதையும் மூட பழக்க வழக்கம் என்றே நான் கருதுகிறேன். அப்படியிருக்க இவ்விழா ஏன்? அவரை நினைப்பதற் கும், அவரைப் பார்த்து நாம் முன்னேறவும், அவரின் பெருந்தொண்டுகளை ஞாபகத்திற்குக் கொணர்ந்து அவரைப் பின்பற்றி பாக்கி விட்ட வேலைகளைச் செய்வதற்கு மேயாகும். எனவே அத்தகைய பெருந்தியாகியின் படத்தை திறந்து வைக்கின்றேன்.
குறிப்பு:- 24.09.1929 ஆம் நாள் தியாகராயர் ஞாபகக் கட்டிடத்தில் முப்பெருந் தலைவர்களாகிய சர்.தியாகராயர், பனகால் அரசர், நாயர் பெருமான் ஆகியவர்களின் உருவப்படத் திறப்புவிழாவில் சர்.தியாகராயர் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 29.09.1929