தலையங்கம் – விஷ்ணுபிரியாவின் விபரீத மரணம்!
நாமக்கல் மாவட்டத்தை கடந்த சில மாதங்களாகவே ஜாதிவெறி சக்திகள் தங்களின் மேலாதிக்கத்துக்குள் கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் இப்போது ஒரு காவல்துறை பெண் அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை வரை சென்றிருக்கிறது. தலித் சமூகத்திலிருந்து அதுவும் ஒரு பெண் டி.எஸ்.பி தேர்வு பெற்று காவல்துறையில் பணியாற்ற வருகிறார் என்றால், அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. அவர்,எத்தனையோ தடைகளை தனது கடும் முயற்சியாலும் திறமையாலும் வென்று, கடந்து வந்திருப்பார் என்பதில் இருவித கருத்துக்கு இடமிருக்க முடியாது.
கோகுல்ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரியும், உள்ளூர் ஆதிக்க ஜாதியைச் சார்ந்த பெண்ணும் சந்தித்தார்கள் என்ற ‘குற்ற’த்துக்காக ஜாதி வெறி கும்பல் ஒன்று கோகுல் ராஜ் தலையை துண்டித்து, தண்டவாளத்தில் வீசியது. இதில் தேடப்படும் முதன்மை குற்றவாளியான கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்த யுவராஜ் என்ற நபர், இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நபர் தலைமறைவாக இருந்து கொண்டு ‘வாட்ஸ்அப்’ வழியாக காவல்துறைக்கு சவால்விட்டு ஜாதி வெறியைத் தூண்டி, இதுவரை மூன்று முறை பேசியிருக்கிறார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மட்டும் அந்த வெறிப் பேச்சுகளை பதிவு செய்தது.
கடந்த ஆகஸ்டு 17ஆம் தேதி இந்தக் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜை கைது செய்யக் கோரி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், திருச்செங்கோடு காவல் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி 200 தோழர்கள் கைதானார்கள். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, காவல்துறையிடம் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தார். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 82ஆவது பிரிவின்படி யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது ஒன்று. அதே சட்டத்தின் 83ஆவது பிரிவின்படி அவரது சொத்துக்களை முடக்கி, உடனடியாக சரணடைய வைக்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை. கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட விஷ்ணுபிரியா, கழகம் வலியுறுத்தியவாறு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 83ஆவது பிரிவின் கீழ் யுவராஜ் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்பை யுவராஜின் வீட்டிலும் அவர் நடத்தி வரும் ஜாதி சங்கக் கட்டிடத்திலும் ஒட்டினார்.
காவல்துறைகளில் அந்தந்த மாவட்டத்தின் ஆதிக்க ஜாதியினரையே நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், திருச்செங்கோட்டில் இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட ஒரு காவல்துறை ஆய்வாளர் மதுவிலக்குப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அந்த இடத்தில் தலித் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். கிடப்பில் போடப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கு, கழகம் களமிறங்கிப் போராடியதைத் தொடர்ந்து, புதிய திசையில் வேகமெடுக்கத் தொடங்கிய நிலையில், அதிகாரி விஷ்ணுபிரியா, இப்படி ஒரு விபரீத முடிவுக்கு தள்ளப் பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழியும், இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளருமான (டி.எஸ்.பி.) மகேஸ்வரி, “கோகுல்ராஜ் கொலை வழக்கில், உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தமே விஷ்ணுபிரியா உயிரிழப்புக்குக் காரணம்” என்று விளைவுகளைப் பற்றி அஞ்சாமல், துணிவுடன் மனம் திறந்து பேசியிருக்கிறார். சி.பி.சி.அய்.டி. துறைக்கு விஷ்ணுபிரியா ‘தற்கொலை’ வழக்கும், கோகுல்ராஜ் கொலை வழக்கும் மாற்றப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே மாவட்ட காவல்துறை நிர்வாகம் நேர்மையாக செயல்படவில்லை என்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது சி.பி.சி.அய்.டி. விசாரணை நேர்மையுடன் நடக்குமா என்பதற்கு உறுதி ஏதும் கிடையாது. ஆனாலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜாதி வெறி சக்திகள் தலைதூக்கி, தமிழ்நாட்டை ‘பார்ப்பனிய வேட்டைக் காடாக்க’ நடத்தி வரும் வன்முறை கொலை வெறியாட்டங்களை ஒடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்பதும் நேர்மையாக செயல்பட விரும்பும் அதிகாரிகள், ‘ஜாதி-மத’ உணர்வுகளுக்குள் மூழ்கிக் கிடக்கும் காவல்துறை அமைப்புக்குள் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் என்பதும் வெட்டவெளிச்சமாகி வருகிறது. அரசியல் கட்சிகள்கூட இதை அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான ஒரு அரசியல் பிரச்சினையாக மட்டும் சித்தரிக்கின்றனவே தவிர, ஆழமாகப் புரையோடி நிற்கும் ஜாதி வெறியைப் பார்க்க மறுத்து முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்.
இதே திருச்செங்கோட்டில் பெருமாள் முருகன் என்ற படைப்பாளி, தனது படைப்பிலக்கியத்துக்கு ஜாதி வெறியர்கள் தந்த மிரட்டலால் ஊருக்கும் இலக்கியத்துக்குமே முழுக்குப் போட்டு வெளியேறி விட்டார். “பெருமாள் முருகன் என்ற இலக்கியவாதி இறந்து விட்டான்” என்று அறிவிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். அதே ஜாதி வெறிக்கு, தலித் சமூகத்திலிருந்து காவல்துறை அதிகாரியாக உயர்ந்த விஷ்ணுபிரியா, தனது உயிரை அர்ப்பணித்துவிட்டார். இளவரசன்களாக, கோகுல்ராஜ்களாக, விஷ்ணுபிரியாக்களாக – ஜாதிவெறி இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கேட்கப் போகிறதோ? நெஞ்சம் பதறுகிறது. தமிழ்நாட்டிலே இப்படி ஒரு அவல நிலை தொடர்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? ஜாதிவெறியை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் கட்சிகளையும் இயக்கங்களையும் நோக்கி திராவிடர் விடுதலைக் கழகம் இந்தக் கேள்வியை கவலையுடன் முன் வைக்கிறது
பெரியார் முழக்கம் 24092015 இதழ்