சுயமரியாதை மகாநாடு
சுயமரியாதை மாகாண மகாநாடு செங்கல்பட்டில் இந்த வாரம் இன்றைய தினம் நடைபெறுகின்றது. அதைப் பற்றிப் பலவாறாக பழிப்புரை களும் விஷமக் கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. அதாவது அரசாங்கத்தார் ஆதரவில் இம்மகாநாடு நடத்தப்படுவதாகவும் பார்ப்பன துவேஷத்தின் மீது நடத்தப்படுவதாகவும், மற்றும் போல்ஷ்விசம் பரப்ப அவர்கள் உதவிக் கொண்டு நடத்தப்படுவதாகவும், இதைப் பற்றி அரசாங்கத்திற்கும் சிலர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுவதுடன் சிலர் கவர்னரிடம் தூது சென்றதாகவும் தெரிகின்றது.
அரசாங்கத்தாரும் இவற்றிற்கு காது கொடுத்து சற்று துடிக்கின்ற தாகவும் தெரிய வருகின்றது. எப்படி இருந்தாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. நமக்கு வேண்டியது சுயமரியாதை என்பதுதான். உலகத் திலே உயிரையுங் கூட கொடுத்துப் பெற வேண்டியதாக அவ்வளவு மதிப்பும் விலையும் பெறுமானமுள்ளது சுயமரியாதையே ஆகும். என்றாலும் சிலர் தங்களுக்கு அவ்வார்த்தையே பிடிக்கவில்லை என்றும், சிலர் ஜஸ்டிஸ் கக்ஷி இருக்கும் போது சுயமரியாதை இயக்கம் ஒன்று தனியாக எதற்கென்றும் மதத்திலும் மனிதனுடைய நம்பிக்கை உணர்ச்சியிலும் கை வைப்பது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், சுயமரியாதை இயக்கத்தால் நாஸ்திகம் பரவுவதாகவும், அரசியல் கெட்டுப் போவதாகவும், தேசீயம் தடைப்படு வதாகவும் இன்னும் பல மாதிரியாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
இவற்றிற்கு நமக்குத் தோன்றிய பதில் சொல்ல ஆசைப்படுகின்றோம். ஒரு இயக்கத்திற்கு ஒரு பெயரை எதற்காக இடுவது என்றும் அது காதுக் கினிமையாக விருப்பதற்காகவா அல்லது இயக்கத்தின் தத்துவத்தையும் கொள்கைகளையும் உணர்த்துவதற்காகவா என்று கேட்கின்றோம். ‘சுய மரியாதை இயக்கம் என்றால், சுயமரியாதை இல்லாதவர்களின் இயக்கம் என்று பிறர் கருதமாட்டார்களா’ என்கின்றார்கள். அப்படியானால் நாம் அவர்களை “சன்மார்க்க இயக்கம் என்றால் அது துன்மார்க்கர்களுடைய இயக்கமாகிவிடுமா? ஜீவகாருண்ய இயக்கம் என்றால் அது ஜீவ காருண்யமில்லாத ‘கசாப்புக் கடைக்காரர்கள்’ இயக்கமென்றாகிவிடுமா? சைவ சித்தாந்த இயக்கம் என்பது ‘அசைவர்கள்’ கூட்டமாகிவிடுமா? அது போலவே ஜஸ்டிஸ் இயக்கம் என்பது இன்ஜஸ்டிஸ்காரர்கள் இயக்கம் என்றாகிவிடுமா?” என்று கேட்கின்றோம். ஒரு சமயம் அப்படியே அர்த்த மாகிவிடும் என்று சொல்வதானாலும் கூட சுயமரியாதை இயக்கம் என்பதற்கு பொருள் சுயமரியாதை இல்லாதவர்கள் அதை அடைய ஏற்படுத்திக் கொண்ட இயக்கம் என்பதில் நமக்கு ஆnக்ஷபனை இல்லை என்றே சொல்லுவோம். இதற்கு உதாரணம், முதலாவது சுயமரியாதை இயக்கம் என்கின்ற பெயர்கள் பிடிக்கவில்லை என்று சொல்லுகின்றவர்கள் தங்களையே அதாவது தங்கள் உருவத்தை கண்ணாடியில் பார்த்து ‘உனக்கு சுயமரியாதை இருக்கின்றதா’ என்பதாக ஒரு கேள்வி கேட்டுக் கொண்டு, தனது உருவம், நடை, உடை, குறி, கொள்கை இவைகளை வெளிப்பார்வையிலும் தனது எண்ணம், நம்பிக்கை, தான் நடந்து கொண்டமுறை, நடந்து கொள்ள இருக்கின்ற கருத்து ஆகிய வைகளை உள்ளுக்குள்ளாகவும் தான் கட்டுப்பட்டிருக்கும் ஆக்ஷி, தான் பின்பற்றிவரும் மதம், மத உணர்ச்சி, மதச் சடங்கு, மதக்கொள்கை ஆகிய வைகளை அனுபோகத்தைக் கொண்டும் மற்றும் தங்களைப் பற்றி மற்ற வர்கள் என்ன பேசிக் கொள்ளுகின்றார்கள் என்பதையும் சற்று யோசித்துப் பார்த்தால் எவ்வளவோ மோசமானவர்களாகவும் எவ்வளவோ சுயநலக் காரர்களாகவும் இருப்பவர்களுக்குங்கூட தங்களின் சுயமரியாதையற்ற தன்மை சூரிய வெளிச்சம் போல் விளங்காமற் போகாது என்றே நினைக் கின்றோம்.
மற்றும் ‘ஜஸ்டிஸ் கட்சி இருக்கும்போது இது எதற்கு’ என்பவர்கள், ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் 10 வருஷ காலமாய் விளைந்து வந்த உணர்ச்சிகளையும் சுயமரியாதைக் கிளர்ச்சியில் இந்த இரண்டு வருஷத்தில் விளைந்த உணர்ச்சியையும் கவனித்துப் பார்க்க வேண்டுகின்றோம். சமீப காலம் வரை ஜஸ்டிஸ் கக்ஷி அரசியலில் மாத்திரம் மிதவாதம் அமிதவாதம் என்கின்ற முறையில் மிதவாதிகளின் கொள்கைகள் என்பனவற்றைப் பின்பற்றிக் கொண்டு பார்ப்பனரிடமிருந்த உத்யோகங்களைப் பிடுங்கி எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் வேலையில் மாத்திரம் ஒருவாறு வெற்றிபெற்று வந்ததே ஒழிய மற்ற வகைகளில் தாராளமாய் முன்னேற முடியாதபடி தடைப்படுத்தப்பட்டே வந்திருந்தது. சுருக்கமாகச் சொல்வோ மானால் பார்ப்பனரல்லாதார் என்கின்ற ஒரு குறிப்பிடத்தகுந்த சமூகம் தமிழ் நாட்டில் இருக்கும் சங்கதியை வெளி மாகாணங்களுக்குத் தெரிய முடியாமல் இருந்தது என்றும், கொஞ்சநஞ்சம் தெரிந்தாலும் அது “தேசத்துரோகிகள், முட்டாள்கள், காட்டு மிராண்டிகள்” என்று பிறர் கருதும் படியாகச் செய்து வந்த எதிரிகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததும் யாரும் மறுக்க முடியாது. அன்றியும் அரசாங்கத்தாராலும் இது ஒரு தனி வகுப்புவாதக் கட்சியென்று மாத்திரம் மதிக்கப்பட்டு அவர்களால் தங்கள் சுய நலத்திற்காக இது உபயோகப்படுத்தப்பட்டு வருவதாகவே கருதியும் வந்திருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இதே ஜஸ்டிஸ் கட்சியை மதித்திருக்கின்றார்கள் என்பதற்கும், அதற்கு எவ்வளவு கட்டுப்பட்டு இருக்கின்றார்கள் என்பதற்கும், இது வெளி மாகாணங்களில் எவ்வளவு மதிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கும் இந்த வருஷத்திய அதாவது 27 – 28ஆம் வருஷத்திய இந்தியா கவர்மெண்ட் ரிப்போர்ட்டைப் பார்த்தால் விளங்காமல் போகாது. சமூக விஷயத்திலும் மக்களின் உணர்ச்சி எவ்வளவு முற்போக்கடைந்திருக்கின்றது என்பதற்கும் மதுரை மகாநாடு முதல் இதுவரை நடந்துவந்த பார்ப்பனரல்லாதார் மகாநாட்டு நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் கவனிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. அரசியலில் ஜஸ்டிஸ் கட்சியை சர்க்கார் தாசர்கள் என்று நமது எதிரிகள் சொல்லி வந்ததை கோயமுத்தூர் தீர்மானத்தின் மூலமாகவும் அதற்குப்பின் அரசாங்கத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ள மதிப்பின் மூலமாகவும்தான் பொது ஜனங்களுக்கு பொய்ப்பித்துக் காட்ட முடிந்தது. ஆகவே சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சிக்கு எவ்வளவு ஆதரவைத் தந்திருக்கின்றது என்பதைக் கவனித்தால் எந்த வகையிலும் அது அவசியமில்லாதது என்று சொல்ல முடியவே முடியாது என்று சொல்லுவோம்.
மத விஷயத்தில் பிரவேசிப்பதாய் சொல்லுவது:-
மதம் என்பது மனிதனின் வாழ்க்கை நலக் கூட்டுறவுக்கும் ஒழுக்கத் திற்கும் தேவையானதே ஒழிய மதத்திற்கு மனிதன் தேவையில்லை என்றே சொல்லுவோம். ஆதலால் இப்போது வாழ்க்கை நலக் கூட்டுறவுக்கும் ஒழுக்கத்திற்கும் ஆதாரமான எந்த மதத்தில் அது பிரவேசித்து என்ன கெடுதியைச் செய்தது அல்லது அதனால் என்ன விளைந்தது என்று யாராவது எடுத்துக்காட்ட முடியுமா என்று கேட்கின்றோம். அன்றியும் கூட்டுறவு நலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் சமரச உணர்ச்சிக்கும் விரோதமாக எது இருந் தாலும் அதை அழிக்க வேண்டுமா வேண்டாமா என்றும் நாம் அவர்களைக் கேட்கின்றோம்.
மனிதனுடைய நம்பிக்கை உணர்ச்சியை கெடுக்கின்றது என்று சொல்லப்படுவது:-
எந்த விஷயத்தையும் மனிதன் தன் அறிவைப் பொருத்து ஒரு விஷயத்தை நம்ப வேண்டுமா அல்லது குருட்டு நம்பிக்கையால் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்று கேட்கின்றோம். அதுபோலவே நாஸ்திகம் என்பதும் அர்த்தமற்ற வார்த்தையேயாகும் என்பதே நமது அபிப்ராயம். கடவுள் உண்டா இல்லையா என்பதைப் பற்றி வாதம் செய்து முடிவு கட்டுவது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை அல்லவே அல்லவென்பதையும் அதற்காக அனாவசியமாய் நேரம் செலவழிக்காது என்பதையும் பொது ஜனங்கள் உணரவேண்டுகின்றோம். ஆனால் நமது இயக்கக் கொள்கைகளை நடைபெறவொட்டாமல் தடுப்பதற்காக கடவுள் என்பதைக் கொண்டுவந்து தடையாகவோ முட்டுக்கட்டையாகவோ போடச் சூழ்ச்சி செய்தால் அதற்குச் சற்றும் இடம் கொடுக்கமுடியாது என்பது தான் சுயமரியாதை இயக்கத்தின் உறுதியான கொள்கையாகும். அறிவையும் தன்னம்பிக்கையையும் தன் முயற்சியையும் அன்பையும் ஒழுக்கத்தையும் தன்னகத்தில் கொண்ட எந்த சமயத்தினுடையவும் ஒத்துழைப்பை சுயமரியாதை இயக்கம் வலிய வரவேற்கும் என்றும் உறுதி கூறுகின்றோம்.
பின்னும் அரசியல், தேசீயம் ஆகியவற்றிற்கு சுயமரியாதை இயக்கம் தடையாயிருக்கின்றது என்பது:-
மக்களின் சுயமரியாதைக்காகத் தான், மக்கள் மானத்தோடு வாழ்வதற் காகத்தான் அரசாங்கமும் தேசீயமும் வேண்டுமேயொழிய மற்றபடி கேவலம் இவைகள் மனிதன் வயிறுவளர்க்க மாத்திரம் வேண்டியது என்றால் அதற்காக எந்த அரசாங்கமும் அரசியலும் தேசீயமும் கண்டிப்பாய் வேண்டியதில்லை என்றே சொல்லுவோம். இதுவரை நமது நாட்டில் ஏற்பட்டிருந்த ஏற்பட்டி ருக்கின்ற, எந்த அரசியல் இயக்கமாவது தேசீய உணர்ச்சியாவது மக்கள் சுயமரியாதைக்கேற்றதான திட்டங்களுடன் அமைக்கப்பட்டிருந்ததா யென்று அரசியல்வாதிகளையும் தேசீயவாதிகளையும் கேட்கின்றோம்.
எனவே, உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றிவிட்டால், அதுவே அரசியலையும் தேசீயத்தையும் மற்றும் மத இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும். அப்போது சுயமரியாதை வேறு, அரசியல் வேறு, தேசீயம் வேறு, மதஇயல் வேறு, ஒழுக்க இயல் வேறு, அன்பு இயல் வேறு என்கின்ற பாகுபாடுகளும் பிரிவுகளும் கண்டிப்பாய் மறைந்தோடி விடும்.
உதாரணமாக, நமக்கு மேலானதும் கீழானதுமான ஒரு வகுப்பு இருக்கக் கூடாது என்று சொன்னால் அந்த வார்த்தையிலேயே நமக்கு மேலானதாக ஒரு அரசாங்கமும் ஆட்சியும் இருக்கக் கூடாது என்பது தானாக உதயமாகிவிடும். அதுபோலவே நமக்கு மேலாகவோ கீழாகவோ ஒரு நாடு இருக்கக் கூடாது என்பதும் தோன்றிவிடும். பொதுவாக சுய மரியாதை என்கின்ற ஒரு இஞ்சினை பலப்படுத்தி சரியாக ஓடத்தகுந்த சக்தியை உண்டாக்கிவைத்து விட்டால் பிறகு அதில் எந்த இயந்திரத்தை (மிஷினை) கொண்டு வந்து அத்தோடு இணைத்து தோல்பட்டையை மாட்டிவிட்டாலும் அது தானாகவே ஓடும். அது இன்னவிதமான இயந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்கின்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை என்றே சொல்லுகின்றோம். மற்றபடி எல்லா உணர்ச்சிகளையும் விட சுயமரியாதை உணர்ச்சியே மேலானதும் மதிக்கத் தகுந்ததுமாகும் என்பதின் தத்துவத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த இயக்கத்தில் உண்மையான சந்தேகமே தோன்ற இடம் இருக்காது. அது இன்றைய தினம் வேண்டுமானால் ஏதோ ஒரு சிறு வகுப்பாருடன் போராடத் தோன்றியதாகத் தோன்றலாம். இதுவே அல்ல அதன் லட்சியம். ஒரு இயந்திரத்தை சுழற்றும்போது முதலில் சுற்றும் சிறுவேகம் போல் இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது. மற்றபடி பின்னால் அது உலகத்தையே ஒன்றுபடுத்த உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின் போதுதான் அதன் உண்மைச் சக்தியும் பெருமையும் வெளியாகும்.
அன்றியும் இது கிளம்பிவிட்டால் யாராலும் இதை அழிக்கவோ அல்லது சற்றாவது அடக்கி வைக்கவோ கண்டிப்பாய் முடியாது என்பதுடன் அடிக்க அடிக்க எழும்பும் பந்துபோல் எதிர்க்க எதிர்க்க வளர்ந்து கொண்டே போகும் சக்தி உடையது என்பதே நமது உறுதி. அன்றியும் எந்த விதத்திலும் எல்லோரும் எவ்வித அபிப்ராயமுடையவர்களும் இது இன்றைக் கில்லாவிட்டாலும் நாளைக்காவது சேர்ந்துதான் ஆக வேண்டும் என்பதுவும் நமது பலமான உறுதியாகும். அன்றியும் இவ்வியக்கம் ஒவ்வொன்றையும் பெரிதும் வேண்டாம் என்று சொல்லும் விரக்தியைப் பற்றி இருக்கின்றதே ஒழிய, வேண்டும் என்று சொல்லும் படியான ஆசையைப் பற்றவில்லை. ஆதலால் இது யாரும் ஏமாற்றமடைவதற்கு இடமேயில்லை. அன்றியும் இதற்குள் போட்டிகளுக்கும் இடமில்லை.
மற்றபடி இதைப்பற்றி சர்க்கார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நமக்கு அதைப்பற்றி சற்றும் கவலையில்லை. உலக வாழ்க்கையில் இறங்கி ஆசையிலீடுபட்டு உழலும் சம்சாரவாளிகளிடமிருந்து நமக்கு யாதொரு உதவியும் ஒத்துழைப்பும் தேவையில்லாததாலும், பெரிதும் பரிசுத்தமானதும் சுயநலமற்றதும் எதற்கும் எவ்வித தியாகத்திற்கும் தயாராயிருக்கும் இளங்காளைகளிடத்திலும் இளம் கன்னிகைகளிடத்திலும் திக்கற்றவர் களிடத்திலும் நமது இயக்கத்திற்கு பெரிதும் உதவி எதிர்பார்க்கின்ற படியாலும் அவர்களும் தாராளமாய் உதவி அளிக்கத் தயாராய் மேல்விழுந்து வருவதாலும் நாமும் இதன் முடிவைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் கடமையையே பின்பற்றிக் கொண்டிருப்பதாலும் இவ்வியக்கத்தின் மூலம் எவ்வித நஷ்டமாவது கஷ்டமாவது அடைய வேண்டி வருமோ என்கின்ற எண்ணமே சிறிதும் கொள்ளாமல் இருக்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 17.02.1929