புதுச்சேரி – பொதுக்கூட்டச் சொற்பொழிவு
பெருமைமிக்க அக்கிராசனாதிபதி அவர்களே! பெரியோர்களே! இப்பொதுக் கூட்டமானது, இப்பிராஞ்சு தேசத்தில் இவ்வளவு சிறப்புடனும் முயற்சியுடனும் கூடுமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இங்கு கூடியுள்ள உங்களின் பூரண மகிழ்ச்சிக் குறிப்பைப் பார்க்கும்போதும், எனக்குக் கொடுத்த வரவேற்புப் பத்திரத்தில் குறிப்பிட்டிருப்பவைகளைப் பார்க்கும் போதும், உங்கள் பெருமுயற்சி நன்கு தெரிகின்றது. நீங்கள் எனக்குக் கொடுத்த பத்திரத்தில் சிறப்பித்துக் கூறும் வார்த்தைகளுக்கு நான் தகுதியுடை யவனல்ல என்றே நான் நினைக்கின்றேன். ஆனால் என்னுடைய நோக்கத் தையும் எனது வேலையின் போக்கையும் இயக்க உண்மையையும் தெரிந்து கொண்டுள்ள உங்கள் கடமைக்கும் வந்தனம் அளிக்கின்றேன்.
நமது இயக்க எதிரிகளால் கடவுள் துரோகி, பிராமண துரோகி, மதத் துரோகி, சமயத்துரோகி, நாஸ்திகன் என்பன போன்ற பூச்சாண்டிகளால் பயமுறுத்தும் முதுகெலும்பு ஒடிந்த வாய்வேதாந்த சீலர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பொருட்படுத்தாதீர்கள்! என்னைப் பொருத்தமட்டில் நான் ஒரு நாஸ்திகன் அதுவும் நன்றாய் கொழுத்த நாஸ்திகன் என்றும் ஒப்புக் கொண்டேதான் இங்குகூட நாஸ்திகப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கின்றேன். மற்றவர்களும் நான் கூறிய நாஸ்திகத்தின் பொருளை நன்குணர்ந்தால் எல்லோரும் நாஸ்திகன் என்று சொல்லிக் கொள்ளவேதான் பிரியப்படுவார் கள். நாஸ்திகன் என்றால் ஆபத்தான அருத்தம் ஒன்றும் இல்லை. எவன் பார்ப்பன மதத்தை ஒப்புக் கொள்ளுவதில்லையோ எவன் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிவிட்ட கடவுள்களையும், அவை களின் பெண்டுபிள்ளைகளையும், அவைகளின் 4 கை 2 பெண்டாட்டி 1000 வைப்பாட்டி என்பவைகளையும், அக்கடவுள்கள் செய்த கொலை,கொள்ளை, விபசாரம், கொடுமை, ஏமாற்றம், சூழ்ச்சி ஆகிய இழி தன்மைகளையும், எவன் ஒப்புக்கொள்ளுவதில்லையோ, இம்மாதிரி கடவுளுக்கு, செய்த செய்யும் உத்சவம், பூஜை, அபிஷேகம், கோயில் கட்டுதல், சமாதாரனை செய்தல் வேதபள்ளிக்கூடம் வைத்தல் ஆகிய வழிகளில் பணத்தை எவன் பாழாக்க சம்மதிப்பதில்லையோ, எவன் பார்ப்பான் பிழைக்க அர்த்த மற்ற மூடச் சடங்குகளை செய்வதில்லையோ, எவன் இவைகளுக்கு ஆதார மான வேத புராண சாஸ்திரங்களை ஒப்புக் கொள்வதில்லையோ அவன் தான் நாஸ்திகன். அப்படிப்பட்டவன் நாக்கை அறுக்க வேண்டும் என்று எழுதிவைத்து அந்தப்படி பார்ப்பனர்கள் பிரசாரமும் செய்து வருகின் றார்கள். ஆனால் நல்ல காலமாய், அப்பார்ப்பன அடிமை ராஜ்யங்களான ராம, கிருஷ்ண முதலிய ராஜ்யங்கள் இல்லாமலிருப்பதால் தப்பி இருக் கின்றோம். ஆதலால் நாஸ்திகப் பூச்சாண்டிக்குப் பயப்படாமல் ஒவ்வொரு வரும் தங்களை நாஸ்திகர்கள் என்று தைரியமாய்ச் சொல்லிக் கொள்ள வேண்டும். சொல்லிக் கொள்ளுவது மாத்திரமல்லாமல் மனதிலும் உண்மை யான உறுதி கொண்ட நாஸ்திகனாய் இருப்பதோடு, கொள்கைகளிலும், அனுஷ்டானங்களிலும் நல்ல பரிசுத்தமான உள்ளும் புறமும் ஒத்த நாஸ்திகனாய் இருக்க வேண்டும். வேறு யாராவது நாஸ்திகர் என்கின்ற பதத் திற்கு கடவுள் இல்லை என்கின்ற அர்த்தம் சொல்ல வருவார்களானால் அதற்கும் நீங்கள் பயப்படாதீர்கள். ஏனென்றால் அவர்கள் சொல்லும் கடவுளை முதலாவது ஒரு மனிதன் இல்லை என்று சொல்லவே முடியாது. அப்படி ஏதாவது சொல்ல நேர்ந்தாலும் அதனால் கடவுள் இல்லாமலும் போய்விடாது, அன்றியும் அந்தக் கடவுளுக்காக இம்மாதிரி ஆசாமிகள் வக்கீலாகவும் இருந்து அந்தக் கடவுள்களைக் காப்பாற்றவும் வேண்டியதில்லை. கடவுளைக் கண்டுபிடிக்க அகச்சான்று புறச்சான்று வேண்டாம். யாராவது ஒருவன் உங்களை வந்து, ‘என்னப்பா, கடவுள் இல்லை என்று சொன்னாயா’ என்று கேட்டால், அவன் ஒரு மூடனாகவோ அல்லது அயோக்கியனாக வோதான் இருக்க வேண்டும். ஆதலால் அப்படிப்பட்டவனைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். அன்றி யும் அப்படிப்பட்ட நபர்களை திருப்தி செய்யக் கவலைப்படாதீர்கள்.
பொதுவாக, நீங்கள் உங்கள் மனதில் உங்கள் பகுத்தறிவின் ஆராய்ச் சிக்கு எது சரி என்று படுகின்றதோ அதை நம்புங்கள். ஒழுக்கத்தைக் கடை பிடியுங்கள்! ஒழுக்கத்தின் சாரம் ஒரு மனிதன் மற்ற மனிதனுக்கு நியாயம் என்கிற முறையில் துன்பத்தை, விளைவிக்காமல் இருப்பது; ஜீவன்களிடத்தில் அன்பு, இரக்கம், காருண்யம், உபகாரம், சத்தியம் முதலிய குணங்களோடு நடந்து கொள்வது; இவ்வளவு இருந்தால் போதும்! இந்தக் குணப்படி ஒவ் வொரு மனிதனும் நடந்து கொண்டால் இதற்கு எல்லா பலனும் மற்றும் என்ன என்ன பதவி உண்டோ அவ்வளவும் கிடைத்துத் தீரும். நீங்கள் எதிர்பார்த்த படியே நீங்கள் ஏமாற்றமடையாமல் அவர்களும் (உயர்திரு. கண்ணப்பர், தெண்டபாணி) வந்துவிட்டார்கள். அவர்களும் பேச வேண்டியிருப்பதால் வாலிபர்களை மட்டும் மீண்டும் வற்புறுத்தி நமது இயக்கமே, சுயமரியாதை யே தேசவிடுதலை, மக்கள் விடுதலை என்பதை ஞாபகத்திலிறுத்தித் தொண்டு ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குற்றமிருந்தால் தள்ளிவிடுங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால் செய்கையில் பின்பற்றி நடக்க முற்படுங்கள். உங்களால் முடியாவிடில் முன்வரும் வாலிபர்களின் ஊக்கத்தைத் தடுப்பது கூடாது.
குறிப்பு : 21-01-1929 ஆம் நாள் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டச் சொற்பொழிவு . குடி அரசு – சொற்பொழிவு- 27.01.1929