சந்தேகம் பார்ப்பனரல்லாதார் இயக்கம்

1. தங்களை பார்ப்பனர்களில் சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆச்சார அனுஷ்டானங்களில் எவ்வித வித்தியாச முமில்லை என்றும் தங்களுக்கும் பார்ப்பன உரிமை உண்டென்றும் கருதிக் கொண்டு இருப்பவர்களுக்கும், பார்ப்பன மதத்தையும், வேதத்தையும், புராணத்தையும், பார்ப்பன தெய்வங்களையும் காப்பாற்ற முயலுகின்ற வர்களுக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ அல்லது தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஏதாவது உரிமைபெற அரு கதையோ உண்டா?

2. யாராவது ஒருவர் தன்னை மற்றவர்களை விட உயர்ந்த ஜாதி என்றோ அல்லது க்ஷத்திரியன் என்றோ, வைசியனென்றோ, சூத்திர னென்றோ, பஞ்சமன் என்றோ சொல்லிக் கொண்டு தன்னுடைய தனி ஜாதிக்கென்று தனி சின்னமோ, ஆச்சார அனுஷ்டானமோ உண்டு என்று சொல்லிக் கொள்பவனுக்கு பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றும் உரிமைகளில் பங்கு பெற பாத்தியமோ உண்டா?

3. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது பார்ப்பனீயத்தை நீக்கிய இயக்கமா? அல்லது பார்ப்பனர்களை நீக்கிய இயக்கமா?

4. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றால் பார்ப்பனர்களிடம் உள்ள உத்தியோகத்தையும் பதவியையும் மாத்திரம் கைப்பற்றுவது என்ற கருத்தை உடையதா? அல்லது பார்ப்பனீயத்தை ஒழிக்க வேண்டுமென்ற கருத்தை உடையதா?

5. பார்ப்பனீயத்தை வைத்துக் கொண்டு எவ்வளவுதான் பார்ப்பனர் களின் ஆதிக்கத்தை குலைத்தாலும், பார்ப்பனீயமானது பார்ப்பனர்களை உண்டுபண்ணிக் கொண்டும், பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டும் இருக்காதா?

6. பணக்கார ஆதிக்கம் கூடாது என்பதாகக் கருதிக் கொண்டு நாம் எவ்வளவுதான் எல்லோருடைய சொத்துக்களையும் பிடுங்கி எல்லா மக்களுக்கும் சரிசமமாய் பங்கிட்டுக் கொடுத்தாலும் மறுபடியும் யாரையும் சொத்து சேர்க்காமல் பார்த்துக் கொள்ளத்தக்க ஏற்பாடு செய்யாவிட்டால் எப்படி மறுபடியும் பணக்கார ஆதிக்கம் உண்டாய் விடுமோ அதுபோலவே பார்ப்பனனிடமிருக்கும் உத்தியோகத்தையும் பதவியையும் அடியோடு கைப்பற்றி எல்லோருக்கும் சரிசமமாய்ப் பங்கிட்டு கொடுத்துவிட்டு பார்ப்பனீயத்தில் ஒரு கடுகளவு மீதி வைத்திருந்தாலும் மறுபடியும் பார்ப்பன ஆதிக்கம் வெகு சீக்கிரத்தில் வளர்ந்து விடுமல்லவா?

7. பார்ப்பனரல்லாதார் இயக்கம் பார்ப்பனீயத்தை ஒழிப்பதற்கு இடையூறாய் இருக்குமானால், அது உடனே ஒழிந்து போக வேண்டாமா? ஏனெனில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் இல்லாவிட்டால் பார்ப்பன ஆதிக் கம் ஒன்று மாத்திரம்தான் இருந்துவரும் என்றும், பார்ப்பனீயத்தை ஒழிக்கும் கொள்கையில்லாத பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் வேறுபல ஆதிக்கங் களும் ஏற்பட இடமுண்டாகும் என்றும் சொல்வது சரியா தப்பா? உதாரண மாக, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் பலனால் ஏற்கனவே உள்ள பார்ப்பனா திக்கத்தோடு இப்போது ஜமீன்தார் ஆதிக்கம், பணக்கார ஆதிக்கம், ஆங்கி லம் படித்தவர்கள் ஆதிக்கம் முதலியன பார்ப்பன ஆதிக்கத்தைப்போல் மக்களை வாட்டி வருகின்றது என்று சொல்லுவதற்கு ஆதாரம் இருக்கின்றதா இல்லையா?

குடி அரசு – துணைத் தலையங்கம் – 06.01.1929

You may also like...

Leave a Reply