சுயராஜ்யக் கட்சிக்கு தேசத்திலுள்ள செல்வாக்கு ‘‘சென்றவிடமெல்லாம் சிறுமை’’
சுயராஜ்யக் கட்சியார் இதுவரை தங்களுக்குத் தேசத்தில் பிரமாத மான செல்வாக்கு இருப்பதாகவும் செல்லுமிடங்களிலெல்லாம் தங்கள் கட்சிக்குப் பெரிய ஆதரவு இருக்கிறதென்றும் பறையடித்துக் கொண்டு வந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், இதனுடைய உண்மை கடந்த ஒருமாத காலமாக ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ஏ.ரெங்கசாமி அய்யங்கார், பண்டித நேரு முதலிய பார்ப்பனர்கள் பிரசாரத்திற்கென்று எங்கெங்கு செல்லுகிறார்களோ அங்கெல்லாம் இவர்களது இரகசியம் வெளியாகி பொது ஜனங்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் கூட்டத்தைக் கலைத்து விட்டு ஓடின வண்ணமாகவே இருக்கிறார்கள். உதாரணமாக, கும்பகோணத்தில் ஸ்ரீமான் ரெங்கசாமி அய்யங்கார் அவர்கள் பொது ஸ்தலங்களில் கூட்டம் போட முடியாமல் ஒரு கட்டிடத்திற்குள் கூட்டம் போட்டும் அங்கும் பொது ஜனங்கள் ஒரு அக்கிரா சனரைப் பிரேரேபிக்க பார்ப்பனர்கள் வேறு ஒருவரைப் பிரேரேபிக்க கடைசியாய் அய்யங்கார் போலீசார் தயவு தேட வேண்டியதாயிற்று. மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரவர்கள் சென்ற காலத்திலும் கூட்டங்களிலும் பொது ஜனங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் கூட்டத்தைக் கலைத்து விட்டு ஓடும்படியாய் விட்டது. பண்டித நேரு அவர்களும் செல்லுகிற இடங்களில் கூட்டங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். இவைகள் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பார்த்தால் தென்படாது. திராவிடன், வட நாட்டுப் பத்திரிகை கள் ஆகியவைகளில் காணலாம். இவர்கள் பேச்சைக் கேட்க இஷ்டமில்லாத ஜனங்களும் மற்றும் கேட்கும் கேள்விகளால் இவர் களது யோக்கியத்தையே வெளியாக்கும் ஜனங்களும் இவர்களுக்கு ஓட்டுப் போட்டு சட்ட சபைக்கு அனுப்புவார்களா? பொது ஜனங்களே யோசித்துப் பார்க்கட்டும்.
குடி அரசு – செய்தி விளக்கம் – 07.11.1926