தலைவர் பதவி பெறும் வழி

நம் நாட்டில் தேர்தல்களில் பதவிகள் பெறுதல், பட்டம் பெறுதல், சர்க்கார் உத்தியோகம் பெறுதல் முதலிய பல காரியங்கள் பெரும்பாலும் முக்காலே மூணு வீசமும் கண்ணியக் குறைவாலும் பொய்ப் பிரசாரத்தாலும் இழி தொழிலாலுமே கிடைக்கப்பட்டு வருகிறது என்பதை சத்திய நெறியுடைய எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் காங்கிரஸ் பிரசி டெண்ட் என்கிற ஸ்தானம் கொஞ்ச காலமாய் அப்படிக்கில்லாமல் தனிப் பட்ட மக்களின் சுதந்தி ரத்திற்கு விடப்பட்டு வந்தது. உதாரணமாக, இதற்கு ஆள்களை விட்டு பிரசாரம் பண்ணியும் பணம் செலவு செய்தும், பொய் வாக்குத்தத்தம் செய்தும் இதுவரை யாரும் அந்த ஸ்தானத்தை அடைந்த தில்லை. நமது பார்ப்பன ஆதிக்கத்திற்கு காங்கிரஸ் வந்ததின் பலனாய் இப்போது இதற்கும் மற்ற தேர்தல்களைப் போலவே யோக்கியதைகள் ஏற்பட்டுப் போய்விட்டது.

ஏனெனில் மற்ற தேர்தல்களையும் பட்டங்களையும் உத்தியோகங்க ளையும் பெற நமது பார்ப்பனர்கள் என்னென்ன முறைகள் கையாண்டு அதன் யோக்கியதையைக் கெடுத்து வாழ்கிறார்களோ, அதுபோலவே இதிலும் பிரவேசித்து விட்டார்கள். ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்காருக்கு காங்கிரஸ் பிரசிடெண்ட் வேலை கிடைப்பதற்கு ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ் வொரு சென்னை பார்ப்பனர் போய் பிரசாரம் செய்யவும் ஆங்காங்குள்ள காங்கிரஸ் கமிட்டிகளில் பிரதானமாயுள்ளவர்களில் யாராவது பணங் காசு வாங்கக் கூடியவர்களாயிருந்தால் அவர்களையும் திருப்தி செய்தும், பதவி ஆசையுள்ளவர்களாயிருந்தால் அவைகளையும் பற்றி பொய் வாக்குத் தத்தம் செய்தும் ஓட்டுகள் பெற பிரசாரம் செய்ததால் உண்மையிலேயே அதிக ஓட்டுப் பெற்றவரும் இன்னும் பெற இருந்தவருமான டாக்டர் அன்சாரி அவர்கள் இவற்றை அறிந்தே இந்த பிரசிடெண்ட் உத்தியோகம் என் போன்றவர்களுக்கு லாயக்கில்லை; இதெல்லாம் பெரிய மனிதர்கள் என்கிறவர்களுக்கு வேண்டிய பதவி என்று பரிகாசமாய்ச் சொல்லி விலகிக் கொண்டார்.

அடுத்தபடி அதிக ஓட்டுக் கிடைக்கப் பெற இருந்த ஜனாப் மஷ்ருல் ஹக் என்னும் பெரியாரும் இவ்வித இழிவுப் பிரசாரத்தில் இரங்க மனமில்லா தவராகி இம்மாதிரி போட்டிபோடுவதானால் எனக்கு வேண்டாம், கண்ணிய மாய் வருவதானால் வரட்டும் என்றே சொல்லி போட்டியில் இருந்து அறவே விலகிவிட்டார். எவ்வளவு உயர்ந்த தத்துவங்களைக் கொண்டதானாலும் எவ்வளவு பரிசுத்தமானதானாலும் நமது பார்ப்பனர் அதில் கலந்தால் அதில் யோக்கியதை பார்ப்பனீயத்திற்கு தகுந்தபடி ஆகி விடுகிறது என்பதை பொது ஜனங்கள் அறிவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.

குடி அரசு – கட்டுரை – 05.09.1926

You may also like...

Leave a Reply