பொய்ப் பெருமை

சென்னையில் சைமன் கமிஷன் வந்து இறங்கிய தினத்தில் வேறு யாருடைய பிரயத்தனமும் இல்லாமல் பொது ஜனங்களாகவே வேலை நிறுத்தம் செய்ததாக, சொந்தத்தில் பெருமை சம்பாதிக்க யோக்கியதை இல்லாதவர்கள் தங்களது பொய்ப் பிரசாரத்தால் பெருமை அடைகிறார்கள். இது அமாவாசை அன்றைய தினம் சந்திரனுக்கு வெளிக்கிளம்பாமல் இருக்கும்படி உத்திரவு போட்ட வீரனின் பெருமைக்கே ஒக்கும். ஏனெனில் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், பிராட்வே, சைனா பஜார் முதலிய முக்கிய வியாபார ஸ்தலங்களில் ஞாயிற்றுக்கிழமையதினம் பெரும்பான்மையான கடைகளை மூடிவிடுகின்ற வழக்கம் உண்டு என்பது தெருப்பொருக்கிக்குக் கூட தெரிந்த விஷயம். அத்தோடு போலீசையும் தடபுடலை யும் சென்ற மாதம் 3- தேதி காங்கிரஸ் காலித்தனத்தையும், கண்ட ஆசாமிகள் யாராவது இரண்டொருவர் அன்று வேறு வேலைக்குப் போயிருக்கவும் கூடும். உதாரணமாக அனேக வக்கீல்களும் பார்ப்பன உத்தியோகஸ்தர் களும்கூட மூன்றாந்தேதி பயத்தினால் 26 தேதி தங்கள் பெண்டு பிள்ளை களை வேறு ஊருக்கு அனுப்பி விட்டதாகவும் கேள்வி. இதுவும் ‘தேசீய வீரர்’களின் பிரசாரம் தான் போலும். இம்மாதிரி பொய்ப் பெருமையால் அரசியல் புரட்டர்கள் எத்தனை நாளைக்கு வாழமுடியுமோ தெரியவில்லை.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 04.03.1928

You may also like...

Leave a Reply