நாகையில் பார்ப்பனரில்லாத திருமணமும் பிரார்த்தனையும்
நாகபட்டணம் தென் இந்தியா ரயில்வேயைச் சேர்ந்த தொழிலாளரும், ஸ்ரீமான் பாலையத் தேவர் குமாரருமான ஸ்ரீமான் பா. காளியப்பத் தேவர் அவர்களுக்கும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த படப்பக்காட்டிலிருக்கும் ஸ்ரீமான் இராசாமித் தேவரவர்கள் குமாரத்தி ஸ்ரீமதி செல்லம்மாளுக்கும் இவ்வாவணி- µ மூன்றாந்தேதி (19-8-26 ) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாகை கோட்டைமேட்டுத் தெருவில் உள்ள மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெறும். அத்திருமணத்தில் மணமகனும் மணமகளும் கதரா டையே அணிவதுடன் பார்ப்பனர் சம்மந்தமே இல்லாமல் அத்திருமணச் சடங்கும் நடைபெறும். நம் தென்னாட்டில் இம்மாதிரி கதருடையுடன் இதுவரை பல திருமணங்கள் நிகழ்ந்திருந்தாலும் பார்ப்பனப் புரோகிதரில் லாமல் திருமணங்கள் நடப்பது அதிசயமாகக் கருதப்படுவதுடன் வெகுசில திருமணங்களே இதுவரை நடைபெற்றிருக்கின்றன.அவற்றுள் சென்ற மாதம் வட ஆற்காடு ஜில்லா ஆம்பூர் சாணாங் குப்பத்திலிருக்கும் திருவாளர்கள் வெங்கிடசாமி முதலியாரும் அவரது உறவினர் இருவரும் சேர்ந்து நடத்தி வைத்த மூன்று திருமணங்களும் நாகையில் நடக்கப் போகும் இத் திருமண மும் முக்கியமானதென்றே சொல்லலாம். இனியும் தமிழ்நாட்டில் நடக்கும் அநேக திருமணங்களும் இதுபோலவே தங்கள் தங்கள் வகுப்பிலுள்ள முதிர்ந்த பரிசுத்தம் பொருந்திய பெரியோர்களைக் கொண்டே நடத்திக் கொள்வது திராவிட மக்களின் சுயமரியாதையைக் காப்பதாகுமென்று விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம். சுமார் 30, 40 வருஷங்களுக்கு முன்னால் தென்னாட்டில் விசேஷமாய்ப் பார்ப்பனரின்றியே விவாகம் முதலிய அநேக சடங்குகளும் நடைபெற்று வந்திருக்கிறது.
முக்கியமாய் இன்னாட்டுக் கொங்கு வேளாள சமூகமாகிய பெரும் சமூகத்தார் தங்கள் மணச்சடங்குகளைத் தங்கள் சமூகத்திலேயே உள்ளவ ரான அருமைக்காரர் என்னும் பெரியார்களைக் கொண்டே நடப்பித்து வந்திருக் கிறார். கொஞ்சம் செல்வமோ, அல்லது நாகரீகப்பேயோ ஏதாவது ஒரு குடும்பத்திற்குப் புதிதாய் ஒட்டிக் கொண்டால் அவர்கள் பார்ப்பனரைக் கொண்டு சடங்குகள் செய்வது ஒரு பெருமை என்று நினைத்துவர பார்ப்பனர்களே இருந்து நடத்த வேண்டும் என்று செய்து விட்டார்கள். இன்னமும் அவ்வகுப்புக்களிலும் மற்றும் பல வகுப்புக்களிலும் 100-க்கு 90 குடும்பங்கள் பார்ப்பனர் இல்லாமலே நடைபெற்று வருகின்றன. சிரார்த்தம் முதலிய சடங்குகள் வேளாள சமூகமாகட்டும், பலிஜா சமூகமாகட்டும் மற்றும் பல சமூகங்களாகட்டும் இப்பொழுதும் பெரும்பான்மையான குடும்பங்கள் பார்ப்பனரைக் கொண்டு செய்வதே இல்லை. இப்படி இருந் தும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியினால் பார்ப்பனர்களைக் கொண்டு செய்யும் சடங்குகளும் ஒரு பெருமை இருப்பதாகக் கருதிப் புதிது புதிதாய் அவ் வழக்கங்களை ஸ்தாபித்து வருகிறார்கள். இவை பார்ப்பனர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு அனுகூலமே தவிர நமக்காவது நமது பெற்றோர்களுக்காவது நமது மணமக்களுக்காவது யாதொரு பயனும் இல்லை. அவர்கள் சொல்லும் மந்திரங்கள் என்னும் சமஸ்கிருத வார்த்தைகளிலும் யாதொரு விசேஷப் பொருளும் இல்லை. அதைச் செய்து வைக்கும் புரோகிதர்களோ உபாத்தி யாயர்களோ அப்படி ஒன்றும் விசேஷ சக்தியோ யோக்கியதையோ பெரு மையோ படைத்தவர் களுமல்ல. வீண் பிரமையும் போலி நாகரீகம் என்கிற முட்டாள்தனமுமேயல்லாமல் இதில் வேறு ஒரு பலனும் இல்லை. உண்மை யாகவே பார்ப்பனர் இல்லாமலும் பார்ப்பனரைக் கொண்டு சடங்குகள் செய்யாமலும் சிரார்த்தம் தர்ப்பணம் முதலிய பார்ப்பனர் வயிர் வளர்க்கும் போலிச் சடங்குகளில்லாமலும் இருக்கும் ஜனங்களும் சமூகமும் ஜாதியும் சேர்த்து கணக்குப் பார்த்தால் இவைகளையெல்லாம் பார்ப்பனர்களைக் கொண்டு செய்கிறவர்களை விட எத்தனையோ மடங்கு அதிகமாய்த்தானி ருப்பார்கள். இதினாலேயே அவர்கள் nக்ஷமமாய் வாழவில்லையென் றாவது அவர்கள் பெற்றோர் மோக்ஷம் அடையவில்லை என்றாவது சொல்லி விட முடியுமா? ஆதலால் பார்ப்பனரல்லாத இந்து மக்கள் இனி மேலாவது தங்கள் சுயமரியா தையையும் தத்துவத்தையும் உத்தேசித்தாவது பார்ப்பனர் இருந்து நடத்தும் காரியங்கள் தான் உண்மையானது என்றும் உயர்ந்தது என்றும் கடவுள்களும் மோக்ஷத்திற்கும் பிரீதியானது என்றும் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்றும் எண்ணி தங்கள் தங்கள் சமூகத்தையே தாழ்த்திக் கொள்வதற்குத் தாங்களே பணங்கொடுத்து ஆளாகாமல் தங்கள் தங்கள் சமூகத்தாரைக் கொண்டே செய்து கொள்ள வேண்டுமாய் பிரார்த்திக் கிறோம்.
குறிப்பு: இத்திருமணத்திற்கு ஸ்ரீமான் நாயக்கரையும் அவசியம் வரும்படி வேண்டிக்கொண்டிருப்பதால் அநேகமாய் ஸ்ரீமான் நாயக்கரும் போகலாம்.
குடி அரசு – சிறு குறிப்பு – 15.08.1926