“தேசபக்தன்”
‘தேசபக்தன்’ பத்திரிகை கொழும்பிலிருந்து வெளிவரும் வார மும்முறைப் பதிப்பாகும். இதன் ஆசிரியராயிருக்கும் திரு. கோ. நடேசய் யரைப் பற்றி நாம் நன்கு அறிவோம். தஞ்சையினின்று வெளி வந்த ‘வர்த்தக மித்திரன்’ பத்திரிகையும் திரு. நடேசய்யரையே தன் ஆசிரியராகக் கொண்டி ருந்தது. அக்காலை ‘வர்த்தகமித்திரனி’ல் ஒழுங்காகவும் தேசநலங்கருதியும் எழுதப்பட்ட கட்டுரைகளே வெளிவந்தன.
ஆனால் இப்பொழுது அதே திரு. நடேசய்யரை ஆசிரியராகக் கொண்ட ‘தேசபக்தன்’ தாங்கி வரும் கட்டுரைகள் ஒரே ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மாட்டு அன்போடும் அபிமானத்தோடும் எழுதி வருவது பெரிதும் வருந்தத்தக்கதாகும். வெளிப்படையாகக் கூறப்புகின் ‘தேசபக்தனும்’ பார்ப்பனப் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டான் என்றே கூற வேண்டும். சென்னையில் நடைபெறும் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்துவரும் பார்ப்பனப் பிரசாரம் போதாதென்று வெளிநாடு சென்று பிழைக்கப்போன தமிழரின் குடியைக் கெடுக்க, மலாய் நாட்டில் ‘தமிழ் நேசன்’ என்றும் இலங்கையில் ‘தேசபக்தன்’ என்றும் இரு பார்ப்பனப் பத்திரிகைகள் தோன்றியுள்ளதென்றே கூறவேண்டும்.
கறுப்பு நிறங்கொண்ட ஆட்டை வெள்ளாடு என்பது போல பார்ப் பனப் பக்தனாகயிருப்பவன் ‘தேசபக்தன்’ என்று பெயர் பூணி தமிழர்களைப் பாழ்படுத்த முயலுவதை நாம் கண்டிக்காமலிருக்க முடியவில்லை. ஆதலால் இதை இனித் தமிழ் மக்கள் ஆதரிப்பது கொள்ளிக்கட்டை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வதாகும்.
குடி அரசு – செய்திக் குறிப்பு – 08.08.1926