மன்னையில் செங்கொடி நினைவு நாள்
திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை இரத்து செய்யக் கோரி கடந்த 2011ம் ஆண்டு தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடியின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் மன்னார்குடி பேருந்து நிலையம் முன்பு அனுசரிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மதிமுக நகர செயலாளர் சன்சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாட்சி சுந்தரம், விடுதலை தமிழ்புலிகள் கட்சி ஆதவன், சிபிஎம்எல் மாவட்ட செயலாளர் மருத செல்வராஜ், பாமக மாவட்ட தலைவர் சீனி தனபாலன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பௌத்தன், திக நிர்வாகிகள் சந்திரபோ°, இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர். திவிக நிர்வாகிகள் சசிகுமார், கவிஞர் கலைபாரதி, நெடுவை வாசுதேவன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு செங்கொடியின் உருவப்படத்திற்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
கூட்டத்தில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தி செங்கொடி உயிர்நீத்தார். உலகத்திலேயே மரண தண்டனையை இரத்துசெய்ய வலியுறுத்தி தீக்குளித்த முதல் பெண்மணி செங்கொடியாவார். உலகம் முழுவதும் 160 நாடுகளில் மரணதண்டனை வழங்க வழி செய்கின்ற சட்டப்பிரிவு முற்றிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐ.நா, மன்றமும் இக்கோரிக்கையை வலியுறுத்துகின்றது காந்தியடிகள் முதல் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் வரை மரணதண்டனையை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திய நிலையில் இந்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் காலந்தாழ்த்தாமல் மத்திய அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்று இந்திய தண்டனை சட்டத்திலிருந்து மரண தண்டனை பிரிவை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பெரியார் முழக்கம் 10092015 இதழ்