வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் வெற்றி

தாழ்ந்த வகுப்பாருக்கும் தொழிலாளர்களுக்கும் தனிப் பிரதிநிதித்து வம் ஏற்படுத்த வேண்டும் என்பதை நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ தங்கள் சூழ்ச்சியின் மூலம் எதிர்த்தும், ஸ்ரீமான் ஜயவேலு போன்றவர்களை விலைக்கு வாங்கி தங்களுடன் சேர்த்துக்கொண்டு தங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்று சத்தம் போடச்செய்தும், சர்க்கார் அவ் வகுப்புக்கென்று பிரதிநிதித்துவம் கொடுக்க பார்லிமெண்டில் சம்மதித்து விட்டார்கள். தொழிலாளர்களுக்கும் அதுபோலவே பார்ப்பனர்களின் எவ்வ ளவோ சூழ்ச்சிகளை மீறி தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்கத் தீர்மானித்து விட்டார்கள். இதைப்பார்த்த பார்ப்பனப் பத்திரிகைகள் தங்கள் சூழ்ச்சிகளும் முட்டுக்கட்டைகளும் பலிக்காமல் போய்விட்டதை மூடிவைத்துவிட்டு தொழிலாளர்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பார்களுக்கும் நல்ல பிள்ளைகள் போல் “இனி சும்மாயிருக்கக் கூடாது; அந்தந்த வகுப்பார் வற்புறுத்த வேண் டும்” என்று “கோழி திருடியும் கூடக் குலாவுவது” போல் ‘சுதேசமித்திரன்’ முதலிய பத்திரிகைகள் எழுதுகின்றன. எப்படி இருந்த போதிலும், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கிடைப் பதற்கு யார் எந்த வகுப்பார் உதவியாயிருந்தா லும், எந்த வகுப்பார் விரோதமாயிருந்தாலும், இனி அதைப் பற்றி கவனிக் காமல் இவ்வகுப்பினர் ஒற்றுமையாயிருந்து தங்கள் வகுப்பைச் சேர்ந்த உண்மைத் தலைவர்களைப் பின்பற்றி, இதை நிலைநிறுத்தி, அதனால் ஏற்படும் முழு பலனையும் தங்கள் வகுப்பு முன்னேற்றத்திற்கு ஆதாரமாக்கிக் கொள்ள வேண்டும். எந்த காரணத்தைப் பற்றியும் சர்க்கார் நியமனத்திற்கோ பொதுத் தேர்தலில் தங்களுக்கென்று ஸ்தானங்கள் ஒதுக்கி வைப்பதற்கோ கண்டிப்பாய் ஒப்புக் கொள்ளக்கூடாது. தங்கள் வகுப்புத் தனித் தேர்தல் மூலமே தங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி பிரயத்தனப்பட வேண்டும். இதைப்பற்றி சீர்திருத்தக் கமிட்டியார் செய்துள்ள சிபார்சுகளில் தாழ்ந்த வகுப்பாருக்கு தங்கள் பிரதிநிதிகளை தெரிந்தெடுக்க ஏற்பாடு செய்ய சென்னை கவர்மெண்டுக்கு ஏற்கனவே அதிகாரமிருப்பதாய்த் தெரிகிறது. ஆனால் இதுவரை அது அமலுக்கு வரவொட்டாமல் மூடி வைக்கப்பட்டு விட்டது. இனியாவது அதை வெளிக்கொண்டு வர முயற்சிக்க வேண்டியது தாழ்ந்த வகுப்பார் என்று சொல்லப்படும் சமூகத்தைச் சேர்ந்த தலைவர் களுடைய கடமை என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு – கட்டுரை – 20.06.1926

You may also like...

Leave a Reply