சென்னை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமா?
சென்னைக் கார்ப்பரேஷனில் சுயராஜ்யக் கட்சியாரின் தலைக் கொழுப்பு ஒரு நிலையில் நிற்காமல் தலை கிருகிருவென்று சுற்றுவதாகவே தெரிகிறது. ஏமாந்துபோன சென்னை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமோ வராதோ நமக்குத் தெரியவில்லை. அதன் பிரசிடெண்டு ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் கார்ப்பரேஷனை தனது முன்னோர்கள் வீட்டுச் சொத்து போல் நினைத்து தனக்கே உரிமையாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இவர்கள் கையில் ராஜீய பாரத்தையும் மந்திரி பதவிகளையும் ஒப்புவித்து விட்டால் நாடு துலங்கிப் போகும் போலவே இருக்கிறது. அதா வது 3-5-26-ல் ஒரு மீட்டிங்கு போட்டார். அய்யங்கார் சிஷ்யர் ஒருவர் அன்று வரமுடியாததால் உடனே மாற்றி விட்டார் . அடிக்கடி இம்மாதிரி மீட்டிங் போடுவதும், தங்கள் கட்சி ஆள்களில் ஒரு பூனைக் குட்டிக்கு வர அசவு கரியம் ஏற்பட்டாலும் அதற்காக மீட்டிங் கை தனது இஷ்டப்படி ஒத்தி வைத்து விடுவதுமே வேலையாயிருக்கிறார்.
இதுபோல் இதற்குமுன் பலதடவைகளில் நடந்திருக்கிறது. தங்கள் கட்சியில் ஒரு ஆள் வரமுடியாவிட்டால் தங்கள் கட்சி தோற்றுப் போகக் கூடிய நிலையில் இருக்கிற சுயராஜ்யக் கட்சிக்கு எவ்வளவு பலமிருக்கிறது என்பது பொதுஜனங்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. சென்னைக் கார்ப்பரேஷனில் சுயராஜ்யக் கட்சி கவுன்சிலர்களைப் போல் கார்ப்பொரேஷன் கவுன்சிலர் வேலையும் அய்யங்காருக்கு சிஷ்யத்துவமும் மாத்திரமல்லாத வேறு பல வேலை உள்ள கனவான்கள் பலபேர் இருக்கிறார் கள் என்பதை கார்ப்பொரேஷன் சுயராஜ்யக் கட்சித் தலைவர் உணராமல் தன் இஷ்டம் போல் மீட்டிங் போடுவதும் ஒத்தி வைப்பதுமான எதேச்சாதி காரமான வேலைகளைச் செய்வது தனது அதிகாரத்தை அக்கிரம வழியில் உபயோகப்படுத்துகிறார் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லு வது. ஜஸ்டிஸ் கட்சியாரை நினைத்ததற்கெல்லாம் “அதிகார துஷ்பிரயோ கம்”, “அதிகார துஷ்பிரயோகம்” என்று ஓயாமல் தம்பட்டமடிக்குமிவர்கள் இம்மாதிரி கார்ப்பரேஷன் தலைவர் செய்கைக்கு என்ன பெயர் கொடுப் பார்கள். “கண்ணியமற்ற சூழ்க்ஷி” எனப் பெயர் கொடுப்பார்கள். எந்தப் பெய ரைக் கொடுத்தாலும் நமக்குக் கவலையில்லை. இனிமேலாவது சென்னை ஓட்டர்களுக்குப் புத்தி வருமா? குடி அரசு – கட்டுரை – 16.05.1926