தலையங்கம் – இளவரசனை பலி கொண்ட ஜாதி வெறி

ஜூலை 4, வரலாற்றில் ஜாதியத்தின் கோர முகம் தலைவெறித்தாடிய நாள்! வன்னிய சமூகத்தைச் சார்ந்த திவ்யாவும், தலித் சமூகத்தைச் சார்ந்த இளவரசனும் ஜாதி கடந்து காதலித்தக் “குற்றத்துக்காக” ஜாதி வெறியர்களால் தண்டிக்கப்பட்டு, இளைஞன் இளவரசன் தனது வாழ்க்கையை ரயிலில் விழுந்து முடித்துக் கொண்ட நாள்! இளவரசன் மரணத்துக்குத் தூண்டியது – ஜாதி வெறியைக் கட்டமைத்து அரசியலில் குளிர்காய முனையும் ஒரு கூட்டம்! நீதிமன்றம் வரை பிரச்சினையை கொண்டுச் சென்று இளம் காதலர்களைப் பிரித்து அந்த சோகத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கூத்தாடியது இந்த ஜாதி வெறிக் கும்பல். இந்தக் கொடுமை தொடர்கிறது. தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு, படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் தலித் பெண்கள். முதல் தலைமுறையாக இவர்கள் படிக்கத் தொடங்குவதும், சுயமரியாதையோடு வாழ விரும்புவதும் ஜாதி ஆதிக்கக் கும்பலுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.
தேர்தலுக்குப் பிறகு, பா.ம.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக கடலூர் மாவட்டம் வடக்கு மாங்குடி கிராமத்தில் வாழ்ந்த தலித் மக்கள் தாக்கப்பட்டு, இருவர் மரணமடைந் துள்ளனர். சுற்றிலும் ஆதிக்க ஜாதியினரின் மிரட்டலுக்கிடையே தனித் தீவு போன்ற இடத்தில் வாழ்ந்து வரும் இந்த தலித் மக்கள், தங்கள் பாதுகாப்புக்காக ஊரை விட்டே வெளியேற விரும்பும் அவல நிலையை நேரில் சென்று ஆய்வு நடத்திய திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் உள்ளிட்ட மனித உரிமை யாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் குழு அறிக்கை கூறுகிறது.
ஜூன் 25, 2014 ஆம் தேதி வெளி வந்த ‘இந்தியன் எக்°பிர°’ நாளேடு, கடந்த சில மாதங்களாக நடந்த தலித் மக்கள் மீதான தாக்குதல்களைப் பட்டியலிட்டுள்ளது. புதுகை மாவட்டம் கருவேடத் தெரு கிராம பஞ்சாயத்தில், பஞ்சாயத்து தலைவர் ஏ. கலைமணி, ஒரு தலித் என்பதால் ‘குடியரசு’ நாளன்று அவர் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஜாதி வெறியர்கள் அனுமதிக்கவில்லை. கரம்பக்குடி அருகே உள்ள வன்டான் விடுதி கிராமத்திலுள்ள பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி பெயர்ப் பலகையில் பஞ்சாயத்து தலித் பெண் பெயர் எழுதப்பட்டிருந்த காரணத்தால் பள்ளியை ஜாதி வெறியர்கள் அடித்து, நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
கரூர் அருகே உள்ள கே.பிச்சம்பட்டி கிராமத்தில் ‘பிள° டூ’ முடித்துவிட்டு தனது கல்லூரிப் படிப்புக்காக பணம் சேர்க்க தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த தலித் மாணவி வழி மறிக்கப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
2013 நவம்பர் மாதத்தில் வேதாரண்யம் அருகே உள்ள புல்வேலி கிராமத்துக்கு செல்லும் பாதையில் சைக்கிளில் வந்த காயத்ரி என்ற 19 வயது தலித் மாணவி, ஒரு ஜாதி வெறியனால் வழி மறிக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். காவல்துறை அலட்சியத்தால் குற்றவாளி தப்பித்துவிட்டார். பாதிக்கப்பட்ட தலித் பெண்கள், காவல் நிலையத்தில் புகார் தருவதை காவல் நிலைய அதிகாரிகளே விரும்புவதில்லை; தடுத்து வருகிறார்கள்.
அம்மூரில், பிப்.2012இல் 19 வயது தலித் மாணவி, பாலியல் வன்முறைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டார். 2012 மார்ச் மாதத்தில் நாகை மாவட்டம் சீர்காழியில் 12 வயது தலித் மாணவி இதேபோல் கொல்லப்பட்டார். அதே ஆண்டு ஜூலையில், 15 வயதுள்ள வீட்டு வேலை செய்யும் தலித் பெண்ணை கொலை செய்த குற்றத்தில் பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். 2012 டிசம்பரில் நாகை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தில், 8 வயது தலித் சிறுமி கொல்லப்பட்டார். 2013 ஜனவரியில் புதுக் கோட்டை மாவட்டம் நாகுடி கிராமத்தில் 17 வயது தலித் மாணவி கொல்லப்பட்டார். இப்படி பட்டியல் நீள்கிறது.
ஜாதி வெறியின் கோரத்தாண்டவம் தொடர்வது ஏன்? காவல்துறையும், அரசு நிர்வாகமும், தலித் சமூகம் என்றாலே இப்படி படுகொலைக்கும் பாலியல் வன்முறைக்கும் உட்படுவதை ஒரு சமூகப் பிரச்சினையாகக் கருதாமல் அலட்சியப்படுத்தும் மனோபாவம் எப்படி நீடிக்கிறது?
ஜாதியைக் கட்டமைத்துள்ள பார்ப்பனியம், பார்ப்பனியத்தை தலையில் ஏற்றிக் கொண்டு வெறி பிடித்து ஆடும் ஜாதி ஆதிக்க வெறி, அதிலும் இலக்கு வைத்து தாக்கப்படும் தலித் பெண்கள் என்று தொடர்ந்து அவலங்கள் அரங்கேறுவது இந்த சமூகத்துக்கே அவமானம், அல்லவா?
இளவரசனின் நினைவு நாளில் ஜாதி தீண்டாமைக்கு எதிரான இயக்கங்களை வலிமையோடு முன்னெடுக்க வேண்டும். ஜாதிக் கலவரங்கள், ஜாதிய ஒடுக்குமுறைகள் இவற்றுக்கு மூல ஊற்றாக இருக்கும் ஜாதி-ஜாதியமைப்பு-அதை நியாயப்படுத்தும் நிறுவனங்கள், மதங்கள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், அனைத்துக்கும் எதிரான விழிப்புணர்வு இயக்கங்கள் தீவிரமாக வேண்டும்; அந்நிலை உருவாகாத வரை இந்த அவலம் தொடரவே செய்யும்!

பெரியார் முழக்கம் 03072014 இதழ்

You may also like...

Leave a Reply