‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு மறுப்பு (3) ‘சுயமரியாதை சைவர்’களையும் வசைபாடிய கூட்டம்
சைவம் பேசிய தமிழறிஞர்கள், புரோகிதர்களை நீக்கக் கோரிய பெரியார் கொள்கைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்கள் என்று பெ.மணியரசன் எழுதியதற்கு மறுப்பாக, ‘சைவம்’ மதத்துக்கான கடவுளே பார்ப்பனி யத்தைத் தழுவியதாகவே இருப்பதை விளக்கி பெரியார் எழுதிய ‘குடிஅரசு’ தலையங்கத்தையும் அது தொடர்பான சில கருத்துகளையும் கடந்த இதழில் எழுதியிருந்தோம்.
மறைமலை அடிகள் போன்ற ‘தனித் தமிழ் இயக்கம்’ நடத்திய சைவர்களுக்கு எதிராக பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளையேற்று அவர் வழி நின்ற சுயமரியாதை ‘சைவர்’கள் இருந்தார்கள். அவர்கள் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் வழியில் புரோகித எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்புக் கருத்துக்களை ஏற்று பரப்பி வந்தனர். இது எப்போது நடந்தது? தோழர் பெ. மணியரசன் கூறுவதுபோல் பெரியாருக்கு முன்னால் அல்ல; பெரியாருக்குப் பின்னர்தான் என்பது வரலாறு.
இது குறித்து சில செய்திகளையும் பார்ப்போம்.
22.11.1925 அன்று காஞ்சிபுரம் காங்கிர° மாநாட்டில் காங்கிர° பார்ப்பனர்களின் கூடாரமாகி விட்டது; அதை ஒழிப்பதே இனி என் வேலை என்று கூறி பெரியார் அம் மாநாட்டிலிருந்து வெளி யேறினார். அதைத் தொடர்ந்து முழுமையான சுயமரியாதைப் பரப்புரையே அவரது வேலைத் திட்டமானது.
அப்போது பெரியாருடன் பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு தளங்களில் முழுமையாகவும் பகுதியாகவும் செயல்பட்ட ‘சைவர்கள்’ பலருண்டு; வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி.), சொ. முருகப்பா, கி.ஆ.பெ.விசுவநாதம், கே.எம்.பால சுப்பிரமணியம், மணி.திருநாவுக்கரசு முதலியார், கா.அப்பா துரை என பலருண்டு.
அவர்களில் வ.உ.சி அவர்கள் 1917 முதலே பார்ப்பனரல்லாத காங்கிரசாரால் நடத்தப்பட்ட சென்னை மாகாண சங்கத்தில் பெரியார், திரு.வி.க, வரதராசுலு நாயுடு ஆகியோரோடு இணைந்து பணியாற்றியவர். காஞ்சிபுரம் மாநாட்டுக்குப் பின்னர் 1925, 1926 ஆண்டுகளில் நீதிக்கட்சி மாநாடு களிலும் கலந்துகொண்டு தனது பார்ப்பனரல்லாதார் ஆதரவுக் கருத்துகளை கூர்மையாக வெளிப் படுத்தியவர்.
சுயமரியாதைப் பிரச்சார இயக்க நூலான “ஞான சூரியன்” என்ற நூலுக்கு அளித்துள்ள அணிந்துரை யில் வ.உ.சி. தனது பார்ப்பன புரோகித எதிர்ப்பைக் கடுமையாக பதிவு செய்துள்ளார். “பிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும் பிராமணரல்லாதவர் களுடைய பொருள்களைக் கவருவதற்காகக் தொன்று தொட்டுச் செய்து வரும் சூழ்ச்சிகளையும், மோசங் களையும், கொலைகளையும் எடுத்துக்கூறி பிராமண ரல்லாதார்கள் இன்னும் பிராமணப் புரோகிதர்களை யும், பூசாரிகளையும் விரும்பு கின்றார்களா என அவன் (ஞான சூரியன்) வினவு கின்றான்.
இந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டு களையும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாக பிராமண ரல்லாதார்கள் தாழ்த்தப்படுவதையும், அக்கொள்ளை களினின்றும், தாழ்வினின்றும் பிராமண ரல்லாதார்கள் தப்புவதற்குரிய அவசியத்தையும், வழிகளையும் அவன் (ஞான சூரியன்) நன்கு விளக்குகின்றான்” என்றெல்லாம் ‘ஞான சூரியன்’ முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் 1927 ஆம் ஆண்டின் இறுதியில் தேவ கோட்டையிலும், காரைக்குடி மாணவர் மன்றத்திலும், பிற இடங்களிலும் ஆற்றிய உரைகள், வ.உ.சி யின் செட்டிநாட்டுச் சொற்பொழிவுகள் எனும் தலைப்பில் சுயமரியாதை இயக்கச் சார்பு ஏடான ‘குமரன்’ இதழில் ஜனவரி முதல் மார்ச் வரை தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றில் “மனு நீதி கண்ட சோழனைப் பற்றிக் கூறிய பொழுது, இப்பொழுதிருக்கும் மனு °மிருதியை நடத்திக் காட்டியமைக்காகவே ‘மனு நீதி கண்ட சோழன்’ என்று பெயர் வந்ததென்று பொருள்படும்படியே சேக்கிழார் கூறினாரென்று கூறினார்கள். அவர் அப்பொருட்படும்படி கூறியிருப் பாராயின் அவர் மனு°மிருதியைப் படிக்கவில்லை என்று தான் கூற வேண்டும் .. எந்த நூலானாலும் குற்றமிருக்குமானால் அதனைத் தள்ளத் தயங்கக் கூடாது…. பிழையிருக்குமானால் வள்ளு வரல்ல, சிவபெருமானேயாகட்டும் யார் கூறினாலும் தள்ளவேண்டியது தான் . கடவுளே எழுதினார் என்று கூறப்படும் நூலிலும் பிழையிருக்குமானால் அதனையும் தள்ளவேண்டியது தான்……. வேதத்தில் பிழைகளிருக்கலாம் திருத்த வேண்டுவது தான். சைவத்திலும் அப்படியே தான். எந்த நூலில் பிழைகள் காணப்படுகின்றனவோ அவைகளைச் சீர்திருத்த வேண்டுவது இன்றியமையாததாகும் என்று வ.உ.சி. பேசியுள்ளார். . (தேவகோட்டை மாணவர் சங்க ஆண்டு விழாச் சொற்பொழிவு – குமரன் 26-1-1928)
.. திருவள்ளுவர் ஓர் கவி, ஒப்பற்ற அறிஞர். நானும் அவரைக் கடவுள் என்றே போற்றுகிறேன். அவர் நூலில் வாளென்றும், வில்லென்றும் வேல் என்றும் இருக்கின்றதேயன்றித் துப்பாக்கியென்றாவது பீரங்கி யென்றாவது இல்லை. இப்பொழுது யுத்தத்திற்கு சாதனங்களாக துப்பாக்கியும் பீரங்கியுமே இருக்கின்றன. யுத்தத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் நேரிடின் என் செய்வது. “வள்ளுவர் துப்பாக்கியைப் பற்றியும் பீரங்கியைப் பற்றியும் ஒன்றும் சொல்லவில்லை. எனவே அச்சாதனங்களைக் கொண்டு போர் புரிய மாட்டேன். வள்ளுவருக்கென்ன புத்தியில்லையா? அவரைக் காட்டிலும் நாம் என்ன மேதாவிகளாகிவிட்டோம்” என்று ஒருவன் இப்போது கூறிக் கொண்டு இருப்பானானால் அது எவ்வளவு மூடத்தனமென்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள்……என்று கூறும் வ.உ.சி., பார்ப்பன புரோகிதர்களுக்கு ‘தட்சணை’ தருவதை நிறுத்த வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
“தென்புலத்தார் கடன் ஒப்புதல்” என்பதற்கு “பிதுர்க்கடன் செய்தல்” என்றே பொருள் வைத்துக்கொள்வோம். அப்பொழுதும் குறிப்பிட்ட வகுப்பார்க்கு வெள்ளி லோட்டா, தங்கத் தட்டு ஆகியவைகள் கொடுக்க வேண்டுமென்று காணப்படவில்லையே … சபிண்டி, திதி முதலிய செய்யவேண்டுமென்று சொன்னால், “ஐயா, அது எங்களப்பனுக்குப் போகாது. நாங்கள் இப்பொழுது விழித்துக் கொண்டோம் இனி ஏமாற்ற முடியாது” என்று கூறிவிடுங்கள். கொசு யானையை விழுங்கி விட்டது என்று சொன்னால் இதை நம்ப முடியுமா?
நண்பர் தியாகராஜன் செட்டியார், மனைவியுடன் பர்மாவுக்கு சென்று வந்திருக்கிறார். இதற்காக அவரை ஜாதியை விட்டு விலக்க வேண்டுமென்று சில இடங் களில் கூறப்படுகிறதாம். இது எவ்வளவு அறியாமை. மனைவியுடன் கப்பலேறிச் சென்றதற்காக ஒரு வகுப்பாருக்கு இரண்டாயிரம், மூவாயிரம் கொடுத்து பிராயசித்தம் செய்து கொள்வதா? பிராயசித்த மெல்லாம் நமக்குத் தான். அவர்களுக்கு வந்து விட்டால் “வேதப் பிரமாணமிருக்கிறது. அந்த நாயனார் அப்படிச் சொல்லியிருக்கிறார். இந்த நாயனார் இப்படிச் சொல்லியிருக்கிறார்” என்று கூறி விடுவார்கள் . பொதுக் கோயில்களில் அனைவருக்கும் சம உரிமை வேண்டும். லஞ்சம் வாங்காத நீதிபதியிடம் தரகர் வேண்டாம்..”
– என்று புரோகிதர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றுகிறார். வ.உ.சி ஆற்றிய காரைக்குடிச் சொற்பொழிவு ‘குமரன்’ 15-3-1928 இதழில் வெளியாகியுள்ளது.
சுயமரியாதை இயக்கத்தின் குரலாகவே அவரது குரல் ஒலித்தன. ஆனால், பெ. மணியரசனார் உயர்த்திப் பிடிக்கும் முன்னோடி ‘சைவம்’ – இதற்காக வ.உ.சி.யைக் கடுமையாக சாடியது.
எப்படி இந்து கலாச்சாரம், தேவ பாஷை சம°கிருதம் என்பவற்றை பார்ப்பனர்கள் முகமூடி களாகப் பயன்படுத்துகிறார்களோ, அப்படித்தான் தமிழ்ப் பண்பாடு, தனித்தமிழ் என்பதும் சைவர் களுக்கான முகமூடியாகவே பயன்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சைவர்கள் பார்ப்பனர்களை எதிர்த்தார்கள் என்பது உண்மை தான்; பார்ப்பனர் ஆதிக்கத்தை அவர்கள் எதிர்த் தார்களா என்றால் அதுதான் இல்லை. பார்ப்பனர்கள் இடத்தில் சைவர்கள் உட்கார்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் பார்ப்பனர்களை எதிர்த்தார்கள்.
வ.உ.சி.யின் கருத்துகளை கடுமையாக சாடி, ‘அரங்கின்றி வட்டாடல்’ என்ற தலைப்பில் பொ.முத்தையா பிள்ளை என்பவர் சைவ ஏடான ‘சிவநேசன்’ ஏட்டில் கட்டுரை எழுதினார்.
“முன்னோடி” சைவக் கூட்டத்தை வ.உ.சி.யின் இந்த ‘சுயமரியாதை முழக்கம்’ ஆத்திரத்தின் விளிம்புக்குக் கொண்டு போய் நிறுத்தியது.
வ..உ.சி. பேசியது முழுமையான சுயமரியாதை இயக்கத்தின் கருத்து என்பதால் உடனே ‘குடிஅரசு’ ஏட்டில் மறைமலையடிகள் தனது மகள் திருமணத்தைப் பார்ப்பன புரோகிதர் வைத்து நடத்தியதைக் கண்டித்து எழுதியதுதான் – அந்த மறுப்புக் கட்டுரையாளருக்கு (முத்தையா பிள்ளைக்கு) நினைவுக்கு வந்து விட்டது. “நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என்று ‘குடிஅரசு’ வெளியிட்ட தலைப்பை நினைவுகூர்ந்து, நக்கீரர் முழுமையான அறிவற்றவர் என்றும் “சிவபெருமானை” எதிர்த்ததால் கடும் துன்பத்தை அனுபவித்தவர் என்றும் நக்கீரனையே சாடுகிறார்.
இதோ பொ. முத்தையாபிள்ளை எழுதியது:
“இவர்கள் அனைவரும் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமேயென்று நக்கீரர் கூறியதை அடிக்கடி எடுத்துக் கூறுகின்றனர். கல்வி நிரம்பாமையால் நக்கீரர் அங்ஙனங் கூறினா ரென்பதையும் (அப்படி) கூறியதால், அவரது துன்பத்தையும் சிறிதும் எண்ணினார்களில்லை” என்கிறார். அத்துடன் முடியவில்லை. வ.உ.சி. மீது அவர்கள் கோபம், இன்னும் மேலேபோய் பிரிட்டிஷாரை எதிர்த்து, வ.உ.சி. ‘சுதேசி’ கப்பல் விட்டதையே குறை கூறுகிறார்.
“பிடிவாதத்தால் கப்பல் விடப்போய் அதனால் கிடைத்த தண்டனையிலிருந்து பாடம் கற்காதவர்; சர்வ வல்லமைமிக்க பிரிட்டிஷாரின் கட்டளை யையே மதிக்காதவர். அதேபோல்தான், கடவுள் கட்டளையானாலும் எதிர்க்க வேண்டும் என்று பேசுகிறார். இதற்கான துன்பத்தை அவர் அனுபவிப் பார்” என்று ‘சாபமிட்டு’ அச்சுறுத்துகிறார் – இதோ அவரது கட்டுரையின் மற்றொரு பகுதி:
“இவர்கள் சுதேசிக் கலகத்தின்போது தூத்துக்குடியில் தனக்குத் தோன்றிய யுத்தியே சாலச் சிறந்ததெனக் கூறி ஆரவாரஞ் செய்து, அதனால் தானடைந்த பயனையும் மறந்து, உலகத்துள் ஒரு பகுதியிலும் அரசரையும் அவர் கட்டளையையும் மதியாமையல், சில நாள் மிகக் கடுந்துன்பம் அனுபவித்தவாறுபோல, சர்வலோக நாடகராகிய கடவுளையும், அவர் கட்டளையையும் மதிக்க வில்லையாயின் நீண்டநாள் ஆற்றொணாத் துன்பத்தை யனுபவித்து வருந்துவார் என்பதையும் மறந்தமை வருந்தத்தக்கது”.
‘புரோகித விலக்கு’க்கு முன்னோடியாக விளங்கியவர்கள் கதை இதுதான் மறைமலையடிகள் கூட்டம் – புரோகிதர் விலக்கு எதையும் செய்யவில்லை. தங்கள் வீட்டுத் திரு மணத்துக்கே புரோகிதர்களையே அழைத்தார்கள். அதற்குப் பிறகு நடந்த கலந்துரை யாடலிலும், எந்த ஒரு முடிவுக்கும் வர மறுத்தார்கள்.
அதே நேரத்தில் 1926இல் ‘புரோகிதர் நீக்கம்’ என்ற முழக்கத்தோடு தொடங்கிய சுயமரியாதை இயக்கம், வடமொழி நீக்கம், நகை ஆடம்பரங்கள் நீக்கம், பட்டாடைகள் நீக்கம், அறிவுக்குப் பொருந்தாத சடங்குகள் நீக்கம், பெண்ணடிமை நீக்கம் என்று தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் முன்னேறிக் கொண்டே இருந்தது.
தொடரும்
பெரியார் முழக்கம் 10072014 இதழ்