‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு மறுப்பு (9) அண்ணா பொது வாழ்க்கைக்கு வந்தது எப்போது?

சென்ற இதழ் தொடர்ச்சி

பெரியார் கொள்கைகளுக்கு நேர் முரணாக செயல்பட்டதே தி.மு.க. என்பதற்கு மேலும் வரலாற்றுச் சான்றுகளை அடுக்கிக் காட்டுகிறார் கட்டுரையாளர்.
“1959-ல் கும்பகோணத்தில் நடந்த நிதியளிப்புக் கூட்டத்தில், “ஒரு கடவுள் உண்டு என்றும், அதனைக் கும்பிடுங்கள்” என்றும் பெரியார் கூறியதாக ஒரு தி.மு.க. ஏடு எழுதியது. அதற்குக் ‘கண்ணீர்த் துளி’ (தி.மு.க.) பத்திரிக்கை ஒன்று, “அண்ணா பாதையில் பெரியார் வந்து விட்டார்” என்று ஈனத்தனமான முறையில் சேதி வெளியிட்டுள்ளது.
“கண்ணீர்த் துளிகள் அதுவரை ஒரு கடவுள் என்று கூறினார்களாம்! நான் இல்லை என்று மறுத்து வந்தேனாம்! இன்று தான் தவறை உணர்ந்து ஒரு கடவுள் என்ற அவர்களின் வழிக்கு வந்திருக்கிறேனாம்! பத்திரிக்கைக்காரன் களில் எவனும் யோக்கியன் கிடையாது. எல்லோரும் இப்படிப்பட்ட அயோக்கியனாகத் தான் ஆகிவிடுகிறான். நானும் மானங் கெடத் தான் இவர்களைப் பற்றிப் பேசுகிறேன். ஒருவனுக்காவதுமான ஈனத்தைப் பற்றிக் கவலையே இல்லையே!”
(‘விடுதலை’ 24.11.1959) என்று பெரியார் கடுமையாகச் சாடினார்.
தங்கள் சுயநலத்துக்கே எனினும், அன்றைய இந்து சமுதாயத்தில் நிலவி வந்த உடன்கட்டை ஏறல், குழந்தை மணம், நரபலி, தேவதாசி முறை ஆகிய காட்டுமிராண்டி முறைகளைத் தடை செய்தும், காலங்காலமாகக் கல்வி மறுக்கப்பட்டு வந்த உழைக்கும் மக்களுக்குப் பொதுக்கல்வி முறையைக் கொண்டு வந்தும் இருந்தனர் ஆங்கிலேயர். தங்களின் மதப்பிடி தளருகிறது என்று கருதி தங்கள் வேதகால மேட்டிமைகளை மீட்டு நிறுவும் வஞ்சக நோக்கத் தோடு “விடுதலைப் போராட்டம்” என்ற வேடம் பூண்டு நயவஞ்சகப் பார்ப்பனர்களும், சுரண்டல் பனியாக்களும் நடித்து வந்தனர்.
சமூக சமத்துவம் நோக்கி நகர பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு, அடித்தட்டு மக்கள் போதிய விழிப்புணர்வும், கல்வியறிவும் பெற்று நிலைப் படுத்திக் கொள்வதற்கு முன்பாக, காங்கிரஸ் என்ற பார்ப்பன-பனியா கூட்டத்தார் கைக்கு நாடு போய் விடுவது ஆபத்து என்று கருதினார்கள் பெரியார், அம்பேத்கர் போன்ற மக்கள் தலைவர்கள்.
அவ்வடிப்படையிலேயே ‘சுதந்திர’ நாளை, துக்க நாள் என்றார் பெரியார். அந்நாளை இன்ப நாளாக அறிவித்தார் அண்ணா – அன்று தொடங்கி ஏட்டிக்குப் போட்டியாகவே செயல் பட்டு வந்தது தி.மு.க. இந்தி எதிர்ப்பு, வகுப்புவாரி உரிமை, இராமாயண எதிர்ப்புப் பரப்புரை செய்து வந்த சுயமரியாதை இயக்கத்தை விட்டு வெளியேறியதும், இந்தித் திணிப்பை ஆதரித்து வகுப்புவாரி உரிமையை எதிர்த்து, கம்பராமாயணத்தில் பொதுவுடைமைத் தத்துவத்தைக் ‘கண்டறிந்து’ கம்பராமாயணப் பரப்புரை செய்தார் ஜீவா.
அதேபோல், பணக்காரக் கட்சியான நீதிக்கட்சி யுடன் சுயமரியாதை இயக்கம் உறவு வைத்திருப் பதைக் குறை கூறிவிட்டு, நீதிக்கட்சிக்கிருந்த பார்ப்பனரல்லாதார் உணர்வும், வகுப்புவாரி உரிமை ஏற்பும் இல்லாத பெரும் கொள்ளையடிக்கும் பணக்காரர்கள் நிரம்பிய காங்கிர° கட்சியில் சந்தா உறுப்பினராகி 1937 தேர்தலில் காங்கிரசுக்கு தேர்தல் பரப்புரையும் செய்தார் ஜீவா. அவரைப் போலவே வகுப்புவாரி உரிமை எதிர்ப்பு, இந்தி ஆதரவு, “இது அரசியல் கட்சியல்ல; வருணாசிரம(அ)தர்மம் காக்க வந்த கட்சி” என பெரியாரால் குறிப்பிடப்பட்ட இராசாசியின் சுதந்திராக் கட்சியுடன் உறவு என எதிரும் புதிருமாக எல்லாவற்றையும் பார்க்கவும் பேசவுமாக நடக்கவுமாக இருந்தது தி.மு.க.
பிரிந்து போன 1949 ஆம் ஆண்டிலிருந்து சமுதாய இயக்கமாகவே தொடரும் என்று அறிவித்திருந்த தி.மு.க., 1956இல் நடந்த தனது மாநில மாநாட்டில் தேர்தலில் ஈடுபடுவது என முடிவெடுத்து, 1957-ல் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டது.
செங்குந்தர் 12ஆவது மாநாடும், செங்குந்தர் 2ஆவது வாலிபர் மாநாடும் 1934 மே மாதம் 20, 21 ஆம் நாள்களில் திருப்பூரில் நடந்தன. இரண்டாம் நாள் மாநாட்டில் பெரியார் ’சமதர்மம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது நடந்தது தான் அண்ணா-பெரியார் ஆகியோரின் முதல் சந்திப்பு.
“எனக்கு பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது 1934 ஆம் ஆண்டில் தான். அப்போது நான் பி.ஏ (ஆனர்°) தேர்வு எழுதியிருந்தேன். தேர்வு முடிவு தெரியாத நேரம் அது. அப்போது கோவைக்கு அடுத்த திருப்பூரில் ஒரு வாலிபர் மாநாடு நடந்தது. அங்கே தான் நானும் பெரியாரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டோம். அவர் மீது எனக்குப் பற்றும் பாசமும் ஏற்பட்டன. அவருடைய சீர்திருத்தக் கருத்துகள் எனக்குப் பிடித்தன. பெரியார் என்னைப் பார்த்து ‘என்ன செய்கிறாய்?’ என்று கேட்டார். ‘படிக்கிறேன், பரீட்சை எழுதியிருக்கிறேன்’ என்றேன். ’உத்தியோகம் பார்க்கப் போகிறாயா?’ என்று கேட்டார். ‘இல்லை, உத்தியோகம் பார்க்க விருப்பம் இல்லை. பொது வாழ்வில் ஈடுபட விருப்பம்’ என்று பதிலளித்தேன். அன்று முதல் அவர் என் தலைவர் ஆனார். நான் அவருக்கு சுவீகாரப் புத்திரன் ஆகிவிட்டேன்” என்கிறார் அண்ணா.
ஆனால் அண்ணாவின் பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும், அண்ணாவின் வளர்ப்பு மகனான பரிமளம் தொகுத்த ‘பேரறிஞர் அண்ணா வின் தன்வரலாற்றின்’படி அண்ணா, சென்னை கோவிந்த நாயக்கர் உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டு காலம் வேலை பார்த்த பிறகே பொது வாழ்வில் இறங்கினார். அவரது பொது வாழ்வு தேர்தலோடு தான் தொடங்கியது. “1935 ஆம் ஆண்டில் நான் சென்னை நகரசபை அங்கத்தினர் தேர்தலுக்கு நின்று தோற்றேன்” என அண்ணாவே குறிப்பிட்டுள்ளார். மேலும் “நாங்கள் அந்தக் கிழமை இதழைத் (நவயுகம்) தொடங்கிய நேரம் காங்கிர° கட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று வீர உலா வந்து கொண்டிருந்த நேரம். நாங்கள் சேர்ந்திருந்த நீதிக் கட்சியோ பிழைத்திருக்கிறதா இல்லையா என்று ஐயுறத்தக்க நிலைக்கு ஆட்பட்டு தத்தளித்த நேரம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆக, அவர் துவங்கிய பொது வாழ்வு என்பது கட்சி அரசியல் வாழ்வு! தேர்தலில் போட்டியிடும் பொது வாழ்வு தான். ஆக, அவரது பொது வாழ்வு தொடக்கம் சுயமரியாதை இயக்கத் திலிருந்து அல்ல, நீதிக்கட்சி யிலிருந்து தான்.
நீதிக்கட்சியின் ஏடான ‘விடுதலை’ பெரியார் பொறுப்புக்கு விடப்பட்டு, அது தினசரி ஆக்கப்பட்டு சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் தான் – 1937-இல் ‘விடுதலை’ யில் பணியாற்ற அண்ணா ஈரோடு போய்ச் சேர்ந்தார். ‘குடிஅரசு’ம் அங்கு நடந்து வந்தது. அதற்கும் துணை நின்றார் அண்ணா.
பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்ப்ப தில்லை என்ற கொள்கையோடிருந்த தி.மு.க. பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்வது என்றும் முன்னரே முடிவெடுத்திருந்தது.
அதன் அடிப்படையில் கழகத்தின் சட்ட திட்டக் குழுவில் ஈ.வெ.கி. சம்பத், மு.கருணாநிதி, இரா. செழியன் ஆகிய மூவரோடு, பார்ப்பன வழக்குரை ஞரான வி.பி.ராமனையும் இணைத்துக் கொண்டது தி.மு.க.வின் செயற்குழு. (அவரது மகன் பி.எ°. இராமன் தான் தி.மு.க.வின் 2006-2011 ஆட்சியின் போது அரசு தலைமை வழக்குரைஞராக நியமிக்கப் பட்டிருந்தார்.) அப்போது பெரியார்,
“சாதி ஒழிய வேண்டுமெனில் சட்டசபைக்குப் போய் பயனில்லை; கண்ணீர்த் துளிகளை (தி.மு.க.வை)க் கேட்கின்றேன், திராவிட நாட்டுக் கொள்கை என்ன? சட்டசபை போகக் கூடாது என்பது தானே! நீங்களும் இதற்கு முன் சட்டசபை போக வேண்டும் என்று கூறினவர்களைப் பார்த்து பித்தலாட்டம் செய்யப் போகிறார்கள்; வயிறு வளர்க்கப் போகிறார்கள் என்று ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தவர்கள் தானே? அப்படிப் பிரச்சாரம் செய்துவிட்டு இப்போது ‘முன்னேற்றம்’ என்று பெயர் வைத்துக் கொண்டு இம்மாதிரி மக்களை ஏமாற்றினால் இது முன்னேற்றமா? பின்னேற்றமா?”
(விடுதலை 12.09.1956) என்று கேட்டார்.
தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்த பின்னர் தி.மு.க.வின் போக்கில் ஏற்பட்ட மாற்றங் களையும் சுட்டிக் காட்டி சாடி வந்தார் பெரியார். பார்ப்பனர்கள் என்பதைத் தங்கள் இதழ்களில் ’பிரா மணர்கள்’ என்று எழுதத் தொடங்கியிருந்தது தி.மு.க.
“சட்டசபைக்குப் போக வேண்டுமானால் பார்ப்பானுடைய தயவு வேண்டும். தான் எழுதும் பத்திரிக்கையில் ‘பிராமணர்கள்’ என்று தான் எழுத இயலும். இதைத் தானே காண்கிறோம். இந்த ஈனப்பிறவிகளால் எப்படி நமக்குள்ள உரிமைகளைத் துணிந்து கேட்கவோ, எழுதவோ முடியும்?
(விடுதலை 05.05.1957) என்ற கேள்வியை எழுப்பினார் பெரியார்.
தான் செல்லுகிற இடங்களில் எல்லாம் பொது மக்களிடம் தொடர்ந்து ‘பார்ப்பானை’ பிராமணன் என்று அழையாதீர்கள் என்ற வேண்டுகோளை வைத்து வந்தவர் பெரியார்.
“உங்களுக்கு உறுதியாக இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்; மறந்தும் உங்கள் வாயில் ‘பிராமணன்’ என்று வரக் கூடாது; ‘பார்ப்பான்’ என்று கூறுங்கள். கண்டிப்பாக பிராமணன் என்று கூறக் கூடாது. கண்ணீர்த் துளிகள் (தி.மு.க.) ‘பிராமணன்’ என்பதைத் தவிர வேறு வார்த்தையை உபயோகிக்க மாட்டார்கள்” (விடுதலை 30.06.1957)
“கண்ணீர்த் துளிகள் (தி.மு.க.) நாடு பிரிய வேண்டும் என்று சொல்லுகின்றான் என்றால் அது புரட்டு. எலெக்ஷனுக்கு நிற்கும் போது தேர்தல் விஞ்ஞானம் (அறிக்கை) – எலெக்ஷன் மேனி பெ°டோ போட்டான். அதில் நாடு பிரிய வேண்டும் என்ற பேச்சே இல்லை. இராஜாஜி சொன்னதைத் தான் சொன்னான்.” (விடுதலை 27.10.1957)
“கண்ணீர்த் துளிகள் பார்ப்பானைப் பற்றி சாமியைப் பற்றி மூச்சு விடுகிறார்களா? பார்ப்பான் தயவில் ஓட்டுப் பிச்சை பெற்றுப் பதவிக்குப் போக வேண்டும் என்றே கட்சி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்” (விடுதலை 07.01.1959)
“இந்தக் கண்ணீர்த் துளிகள் கட்சியையே எடுத்துக் கொள்ளுங்கள்! இராவணனுக்கு எதிராக இராமன் காலடியில் எப்படி விபீடணன் விழுந்தானோ அது போல் இந்தக் கண்ணீர்த் துளிகள் பார்ப்பானின் அடிமை களாக இருக்கிறார்கள். திராவிடர் கழகம் என்றாலே பார்ப்பான் வாசனை இருக்கக் கூடாது.
பெயர் தான் திராவிட முன்னேற்றக் கழகம். பெயர் வைத்துக் கொண்டார்களே தவிர, மற்றபடி பார்ப்பானிடத்தில் பூரணமாக அய்க்கிய மாகி விட்டார்கள். இன்றைக்குக் கண்ணீர்த் துளிகள் கட்சியின் வழிகாட்டியே பார்ப்பான் (இராஜாஜி) தான். அந்தக் கட்சிக்குப் பொதுச் செயலாளராக ஒரு பார்ப்பானைத் தான் கொண்டு வரப் போகிறார்கள். எங்களுக்குப் பயந்து கொண்டு வரலாமா? வேண்டாமா? என்று இருக்கிறார்கள்.” (விடுதலை 28.09.1959)
“இந்தக் கண்ணீர்த் துளிகள் உங்களிடம் வந்து நாங்களும் திராவிடர் கழகத்தினர் தான்; முன்னேற்றம் அவ்வளவு தான் என்கிறார்களே! என்ன முன்னேற் றம்? நான் பார்ப்பானைச் சேர்க்கக் கூடாது என்றால் நீ அவனைக் கட்சியில் சேர்த்துக் கொண்டாய்! தேர்தல் கூடாது என்று நான் கூறினால் நீ சட்ட சபைக்கு நிற்கிறாய்! இது சுதந்திரம் இல்லை, ஜனநாயகம் இல்லை என்று நான் கூறினால் நீ இல்லை, இல்லை, இது ஜனநாயகம் தான் என்று கூறி ஓட்டுக் கேட்கிறாய்! இதுவா முன்னேற்றம்!” (விடுதலை 28.10.1959)
1938-ல் தமிழ்நாடு விடுதலை பற்றிப் பேசிய பெரியார், அப்போது இருந்த சென்னை மாகாணம் தமிழ்நாடு முழுவதும், தெலுங்குப் பகுதி 7 மாவட்டங்கள், கன்னடப் பகுதி 1 மாவட்டம், மலையாளப் பகுதி 1 மாவட்டம் ஆகியவற்றைக் கொண்டதாகும். இப்போதைய ஆந்திர, கன்னட, கேரள மாநிலங்களில் பிற பகுதிகள் அப்போது கொச்சி, திருவாங்கூர், மைசூர் அரசர்கள், அய்தராபாத் நிஜாம் ஆகியோரின் ஆட்சியில் இருந்தன. பெரியாரும் அதுவரை சென்னை மாகாணம் என்கிற அரசியல் நிலப்பரப்பில் 1956 வரை இருந்து வந்த தெலுங்கு, மலையாள, கன்னடர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு கருதி ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று மாற்றியமைத்துக் கொண்டார்.
மேலும் பெரியார் திராவிட நாடு என்று குறிப்பிட்டது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்ற நான்கு மாநிலங்களும் சேர்ந்த பகுதியை அல்ல; அரசியல் அலகான (ஞடிடவைiஉயட ருnவை) சென்னை மாகாணத்தைத்தான் என்கிற போதிலும், பெரியாரைப் பொறுத்த வரை பார்ப்பன-பனியா நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்டமைப்பிலிருந்து தனியாகப் பிரிந்த தனித் தமிழ்நாடே அவரது இலட்சியமாக விளங்கியது.
1953-ல் சென்னை மாகாணத்திலிருந்த தெலுங்கு மாவட்டங்களை மட்டும் தனியாகப் பிரித்து, நவம்பர் முதல் நாள் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. 1956 நவம்பர் முதல் நாளில், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு என மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் கோரிக்கையை “தமிழ்நாடு தமிழருக்கே” என திருத்தி அமைத்துக் கொண்டார். அக்கோரிக்கையை தனது இறுதி நாள் வரை உறுதியாகப் பரப்பியும் வந்தார். தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி,
1960 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீங்கலான தேசப்பட எரிப்புப் போராட்டத்தை அறிவித்திருந்தார். தானும், தன் அமைப்பும் அப்போராட்டத்தில் கலந்து கொள்வதாக அப்போது ‘நாம் தமிழர்’ என்ற அமைப்பை நடத்தி வந்த ஆதித்தனாரும் (‘தினத்தந்தி’ இதழ் உரிமையாளர்) அறிவித்தார்.
அப்போராட்டத்தை விளக்கி ஈரோட்டில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை, தி.மு.க. மீதும் அவர்களது திராவிட நாடு கோரிக்கை பற்றிய விமர்சனமாக மட்டுமன்றி, இன்று ‘திராவிடர்’ என்பது குறித்த எந்த புரிதலுமின்றி குதர்க்கம் பேசித் திரிகிற சில ’திடீர்’ தமிழ்த் தேசியர்களுக்கும் பெரியாரின் நிலைப்பாட்டைத் தெளிவாக்கும் ஒன்றாகும்.
‘திராவிடர்’ என்ற சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆதிக்கத்தை, தமிழ்நாட்டில் உண்டாக்கி வைத்திருப்பதாகக் கூறும் ‘தூய’ தமிழ் தேசியர்களுக்கும் விளக்கமாக அமையும்.
• அப்படி என்ன தான் கூறுகிறார் பெரியார்? பார்ப்போம். “முன்பு திராவிட நாடு கேட்டார். இப்போது அதை விட்டு விட்டார். தமிழ்நாடு கேட்கிறார்” என்று சிலர் சொல்லுவார்கள். இது பெரும்பாலும் குறும்புக்காகக் கேட்கப்படுகிற கேள்வியாகும்.
• தமிழ்நாடு என்பதும் திராவிட நாடு தான். முன்பு தெலுங்கன், மலையாளி, கன்னடியன் எல்லாம் நம்முடன் சேர்ந்து இருந்தான். அவர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படி ‘திராவிட நாடு’ என்று சொன்னோம். இப்போது அவனவன் பிரிந்து அவனவன் தனித் தனி மாநிலம் பெற்று இருக்கின்றான். ‘தமிழ்நாடு’ என்று சொல்லும்படி இப்போது தமிழகம் இருக்கிறது. ஆகவே ‘தமிழ்நாடு’ என்று சொல்லுகிறோம்.
• இப்போது திராவிட நாடுகளான நான்கு நாடுகளும் சேர்ந்து தான் ஆக வேண்டுமென்றால் அவர்களுக்குப் பிரிய வேண்டும் என்ற உணர்ச்சி உண்டா? ஏற்பட்டிருக்கிறதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படியே திராவிட நாடு பிரிந்தால் நமக்கென்ன இலாபம்?
• இன்று எப்படி தமிழ்நாடு பார்லிமெண்டில் மற்ற 14 நாடுகளுக்கும் அடிமையாக இருக்கிறதோ, அதே போல், நாளை மற்ற 3 நாடுகளுக்கும் அடிமையாகத்தான் இருக்க வேண்டி வரும்.
• தமிழ்நாடு 3 கோடி ஜனத் தொகை; மலையாளி ஒன்றே கால் கோடி; கன்னடியன் 2 கோடி; ஆந்திராக்காரன் மூன்றரைக் கோடி. இவர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன நிலை? மற்றவர்கள் ஆறே முக்கால் கோடி, தமிழன் மூன்று கோடி. நாம் மற்றவர்களுக்கு மைனாரிட்டியாகத் தானே இருப்போம்?
• அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பார்லிமெண்ட் மெம்பர்கள் 87 பேர். நம் தமிழ்நாட்டுக்கு 41 பேர் தான். அதே மாதிரி சட்டசபை மெம்பர்கள் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்தால் சுமார் 600 பேர்கள். நமக்கு 207 பேர் தான்.
• மற்றபடி, கடவுள், மத, சா°திர, இழிவு ஒழிப்பு உணர்ச்சியோ, இந்தியை எதிர்க்கும் உணர்ச்சியோ, அந்த (ஆந்திரம், கேரளம், கன்னடம்) நாட்டுக்காரர் களுக்குக் கிடையாது. அப்புறம் எதற்காக ஒரே இராஜ்ஜியம் (நாடு)? எதற்காகக் கூட்டு வேணும்?
• ஆகவே தான், சும்மா திராவிட நாடு என்று சொல்லுவது நம்முடைய காரியத்தைக் கெடுக்கத் தான் பயன்படுமே தவிர, வேறு எதற்கும் பயன்படாது என்பதை அறிய வேண்டும்.
– 22.05.1960 ஈரோடு சொற்பொழிவு. (விடுதலை 24.05.1960)
அதே நேரத்தில் “ஓட்டுக்காரனே ! உணர்ந்து பார் !” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பெரியார் எழுதுகிறார். அதில், “நாடு பிரிய வேண்டியது தான்; அதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்; அதற்காகத் தான் சட்டசபைக்குப் போக வேண்டுமென விரும்புகிறோம் என்று சொல்லுகிற சட்டசபை ‘சர்வரோக நிவாரணி’(அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்து)க்காரர்களைப் பார்த்து வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்வதாவது” என்று தொடங்கி, “நீ சத்தியம் செய்து ஏற்றுக் கொண்டுள்ள அரசியல் சட்டப்படி சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பிரிவினையைப் பற்றிப் பேச முடியுமா? ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆதரித்தாலும் நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற போதிய பலம் உண்டா?” என்றெல்லாம் கேள்வி எழுப்பிவிட்டு “நாடு பிரிவினையில் அவசரமும் அக்கறையும் உங்களுக்கு இருக்குமானால் உங்கள் ‘இலட்சியமும் மூச்சும்’ அதுவே தான் என்றால் என்ன செய்ய வேண்டும்! சத்தியப் பிரமாணமும், சபாநாயகர் தயவினால் சண்டப் பிரசண்டமும் செய்துவிட்டால் போதுமா? நாடு பிரிந்து விடுமா?” என்பது போன்ற கிடுக்குப் பிடி கேள்விகளைத் தொடர்ச்சியாக எழுப்பி தி.மு.க.வைத் தாக்கி வந்த காலம் தான் 1961.
அது மட்டுமல்ல. பெரியார் பறையர் இனப் பெண்கள் ஜாக்கெட் போடுவதைக் கூட விரும்பவில்லை என்று கலைஞர் கருணாநிதி தனது ‘முரசொலி பொங்கல் மலரில்’ கார்ட்டூன் போட்டு பழி சுமத்தும் அளவுக்குப் போனார்.
இதற்கான பதிலை, பெரியார் தி.மு.க. நிகழ்ச்சி ஒன்றிலேயே, பின்நாளில் கூறினார் என்பது தனிச் செய்தி. ( இதைப் பெட்டி செய்தியில் காணலாம் )

பொய் பிரச்சாரம்: பெரியார் தந்த மறுப்பு
• பறையன் என்று சொல்லக்கூடாது என்று ஆரம்பித்தவன் நான். காந்தியார் தீண்டாதவர்களுக்குத் தனியாகப் பள்ளிக் கூடம், தனியாகக் கோயில், தனியாகக் கிணறு வெட்டுவதற்காகக் காந்தி திலக் நிதியிலிருந்து ரூ.55,000 அனுப்பினார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிர° கமிட்டித் தலைவன். நான் இதை இதற்காக செலவிடாமல் அப்படியே வைத்துவிட்டேன். மற்ற மாகாணக் காரர்கள் எல்லாம் செலவழித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாக கேணி, கோயில், பள்ளிக்கூடம் கட்டினார்கள். நான் காந்தியாருக்கு எழுதினேன். “நாம் அவர்களுக்கு இவை எல்லாம் தனியாகச் செய்து கொடுப்பதால் ஒருக்காலும் தீண்டாமை ஒழியாது. அதற்குப் பதில் பறையன் கோயில், பறையன் பள்ளிக்கூடம் என்று சொல்லி மக்கள் அதையும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இதை நான் விரும்பவில்லை. நம் மக்கள் தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் அவர்களும் எடுக்க வேண்டும். நம்மக்கள் படிக்கிற பள்ளிகளில் அவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். நம்மக்கள் போகிற கோயில்களுக்கு அவர்களும் போக உரிமை வழங்க வேண்டும்” என்று எழுதினேன். அதற்கு அவர் அதுபோல செய்யமுடியாது என்று சொல்லி விட்டார்.
• நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பலதடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலெக்ஷன் நேரத்திலே இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். எலெக்ஷன்போது “ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார்” என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டு போடாதீர் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் என்று கேட்டார்கள். நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கைப் போடக் கூடாது, போட்டால் துணியே போடக்கூடாது, அப்படி இருந்த சமுதாயம் காலமாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்கமுடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும் நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்துகொண்டனர்.”
-11.12.1968 அன்று தி.மு.க. மேயர் வேலுர் நாராயணனுக்கு நடந்த பாராட்டு விழாவில், சென்னை- அயன்புரத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு (‘விடுதலை’ 15.12.1968)
இவை தாம் 1961 ஆம் ஆண்டில் நிலவி வந்த அரசியல் சூழல்; தி.க.– தி.மு.க. உறவு (பகைமை)ச் சூழல்.

தொடரும்

பெரியார் முழக்கம் 18092014 இதழ்

You may also like...

Leave a Reply