வினாக்கள்… விடைகள்…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கிற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. – செய்தி
ஊழலை ஆதரிச்சு நடத்தியிருந்தால், காவல்துறை அனுமதியே தேவைப்பட் டிருக்காதே! புரிஞ்சுகிட்டு, செயல்படுங்க, தோழர்!

பிரதமர் மோடி அலுவலகத்தைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையும் சைவத்துக்கு மாறிவிட்டது. – செய்தி
அப்ப, இனி, குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து மரண தண்டனை அறிவிப்புகள் ஏதும் வராதுன்னு சொல்லுங்க….

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை சீர்குலைத்து வருவது ஊழல்தான். – உச்சநீதிமன்றம்
அதே கங்கையில் முழுக்குப் போட்டா, ‘ஊழல் பாவ’த்திலிருந்து கரை சேர்ந்து விடலாம்னு ஒரு நம்பிக்கைதான்!

ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன். – செய்தி
‘கடவுளுக்கே’ ஜாமீன் வழங்கும் அதிகாரத்தை வரலாற்றிலேயே முதன்முதலாக பெற்ற பெருமை நமது ‘பாரத’ உச்சநீதிமன்றத்துக்கே கிடைத்துள்ள பெரும் “பாக்யம்”.

அயோத்தியில் இராமன் கோயில் கட்ட பா.ஜ.க. ஆட்சிக்கு 2019 வரை ஆர்.எ°.எ°. கெடு. – செய்தி
ஆமாம்! அப்படி கட்டாமல் போனால் ‘இராமனே’ – மீண்டும் அங்கே ‘அவதரிப்பதற்கு’ ஏற்பாடுகள் நடந்துகிட்டு, இருக்கு!

உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் விசாரணையின் போது, சமஸ்கிருத சுலோகத்தை உச்சரித்தவாறு இருந்தேன்; பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது.- அ.தி.மு.க. வழக்கறிஞர் திவாகர்
நல்லவேளை! வாதாடிய வழக்கறிஞர் நாரிமன் சமஸ்கிருதம் தெரியாதவராக இருந்திருக்கிறார்!

செவ்வாய் கிரகத்தில் 68 நாள்கள் மட்டுமே மனிதர்கள் உயிர்வாழ முடியும். – அமெரிக்க விஞ்ஞானிகள்
எங்க ஊரு ஜோசியருங்க…. செவ்வாய் கிரகத்தையே காலம்காலமாக உயிரோடு வெச்சிகிட்டு இருக்காங்க; தெரியுமா, தேதி?

இராஜபக்சேயை சிறையில் அடைக்காமல் விட்டதற்காக இப்போது வருந்துகிறேன். – உச்சநீதிமன்ற முன்னாள் சிங்கள நீதிபதி சில்வா
அப்படி, அடைக்காததற்காக இப்போது வருந்துறீங்க; அடைச்சிருந்தா அப்போதே வருந்திருப்பீங்க; அதுதான் வித்தியாசம்.

பெரியார் முழக்கம் 23102014 இதழ்

You may also like...

Leave a Reply