வேளாண் பல்கலையை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம் ‘பஞ்சாங்க’த்தை அறிவியலாக்காதே!

வேளாண் பல்கலையின் விவசாயக் கையேட்டில் பஞ்சாங்கங்களை திணித்திருப்பதை நீக்கக் கோரி கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கோவை பல்கலைக்கழகத்தில் இயங்கும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு விவசாய பெருமக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று காரணம் சொல்லி மழை முன்னறிவிப்பு கையேடு ஒன்றினை தயாரித்து 2013ம்ஆண்டு முதல் வழங்கி வருகிறது. அதில் 100 ஆண்டுகளுக்கு மேலான மழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை துறையிலிருந்து பெற்று, அறிவியல் முறையில் ஆய்வு செய்து மாத வாரியாக ஒவ்வொரு மாவட்டங்களில் எதிர்பார்க்கப் படும் மழை அளவினை வெளியிட்டு அதற்கேற்றாற் போல் விவசாயப் பணிகளை செய்யுமாறு விவசாயி களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அவ்வாறு 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள மழை முன்னறிவிப்பு கையேட்டில் வானிலை துறை விவரங்கள் அடிப் படையில் ஒரு பகுதியாகவும், 14 பஞ்சாங்கங்கள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட மழை குறிப்புகளை ஒரு பகுதியாகவும் வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த செயல் அறிவியல் அடிப்படையற்ற, அறிவியலுக்கு முரண்பாடான மூடநம்பிக்கை வளர்க்கும் நோக்கத்தோடு இருக்கிறது.
இதனைக் கண்டித்து, பஞ்சாங்க அடிப்படையில் விவசாயிகளுக்கு மழை முன்னறிவிப்பு கையேடு வழங்கிய கோவை வேளாண் பல்கலைக்கழத்தின் அறிவியல் விரோதப் போக்கைக் கண்டித்து கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நவம்பர் 17 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுசிகலை யரசன், தமிழர் விடுதலை இயக்க பொறுப்பாளர் தோழர் வெண்மணி, பியூசிஎல் அமைப்பின் சார்பில் பொன்சந்திரன், திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் ஆகியோர் உரையாற்றினர். பின்னர் கோவை வேளாண் பல்கலைகழகத்தின் அறிவியல் விரோதப் போக்கைக் கண்டித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “அறிவியலை போதிக்க வேண்டிய கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் விவசாயிகளிடம் மூட நம்பிக்கைகளை பரப்புவது, வன்மையாக கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல் பஞ்சாங்க அடிப்படையில் மழை முன்னறிவிப்பு கையேடு வழங்கிய பல்கலைக்கழக அதிகாரிகள் மீது அரசு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விவசாயிகளை ஏமாற்றும் இதுபோன்ற அறிவிப்புகளை பல்கலைக்கழகம் உடனடியாக திரும்ப பெற வேண்டும். அதே வேலையில் வானிலை ஆய்வு மூலம் பருவ நிலைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்” எனக் கூறி உரையாற்றினார்.
துவக்கத்தில் திராவிடர் கலைக்குழுவை சேர்ந்த நங்கவள்ளி கிருஷ்ணன், திருப்பூர் பிரசாத் ஆகியோர் பார்ப்பனர்கள்போல் வேடமணிந்து பஞ்சாங்க அடிப்படையில் கையேட்டினை கையில் பிடித்துக் கொண்டு விவசாயிகளுக்கு அறிவுரை கூறுவது போல் நடித்து காட்டினர். அவர்களுடன் பல்லடம் நாராயண மூர்த்தி, தம்பி, பிரசன்னா ஆகியோரும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன், தலைமைக்குழு உறுப் பினர்கள் கோபி இராமஇளங்கோவன், திருப்பூர் துரைசாமி, ஈரோடு இரத்தினசாமி, துத்துக்குடி பால்பிரபாகரன், மேட்டூர் சக்திவேல், சென்னை மாவட்ட தலைவர் உமாபதி, கழக வழக்கறிஞர் துரைஅருண், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப் பாளர் ஈரோடு சிவக்குமார், கோவை புறநகர மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திகஜோதி, சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூர்யகுமார், மாவட்ட செயலாளர் மேட்டூர் கோவிந்தராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில்ராசு, கொளத் தூர் ஒன்றிய தலைவர் காவலாண்டியூர் ஈஸ்வரன், விழுப்புரம் அய்யனார், சுயமரியாதை கலைப் பண் பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கொளத்தூர் குமார், திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளி தாசு, பட்டுக்கோட்டை வளவன் என்கிற சதாசிவம் உள்பட 200க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
கண்டன ஆர்பாட்டத்தை கோவை மாநகர் மாவட்ட தலைவர் நேருதாசு தலைமையில் மாநகர மாவட்ட செயலாளர் ஆண்ட்ரோஸ், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் ஜெயந்த் உள்ளிட்ட தோழர்கள் மிக சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். கோவை மாநகர் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி வண்ண சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. வந்திருந்த அனைவருக்கும் கோவை மாநகர மாவட்ட கழகம் சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தி: மன்னை காளிதாஸ்

பெரியார் முழக்கம் 27112014 இதழ்

You may also like...

Leave a Reply