சென்னை-ஈரோடு-தாரமங்கலம்-மயிலாடுதுறையிலிருந்து பரப்புரைப் பயணங்கள் தொடங்கின
சென்னை மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘பறி போகிறது எங்கள் நிலம்; கொள்ளை போகிறது கனிம வளம்; ஒழிகிறது வேலை வாய்ப்பு; ஓங்கி வளர்கிறது ஜாதி வெறி; எனவே எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்று 20.3.2015 முதல் 31.3.2015 வரை 11 நாள் பரப்புரைப் பயணம் தொடங்கியுள்ளது. பயண தொடக்கக் கூட்டம், சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 20.3.2015 மாலை 5 மணியளவில் சென்னை பெரம்பூர் வீனஸ் மார்க்கெட், காந்தி சிலை அருகில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நா. பாஸ்கர் தலைமை வகிக்க, தோழர்கள் ஏசு குமார், துரை முனுசாமி, நாகேந்திரன் முன்னிலை வகித்தனர் தட்சணாமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். வழக்கறிஞர்கள் துரை அருண், திருமூர்த்தி, மாவட்டச் செயலாளர் உமாபதி, எழுத்தாளர் வே. மதிமாறன் உரையைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி வைத்து, சிறப்புரை யாற்றினார்.
முன்னதாக, சம்பூகன் கலைக் குழுவினர் நாத்திகன், அசுரன் ஆகியோர் பகுத்தறிவு-ஜாதி ஒழிப்புப் பாடல்களை பாடினர். தொடர்ந்து சிற்பி இராஜனின் ‘மந்திரமல்ல! தந்திரமே!’ என்ற அறிவியல்
நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக விஜயன் நன்றி கூறினார்.
ஈரோட்டில்…
‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரைப் பயணத்தின் தொடக்க விழா பொதுச் கூட்டம் 23.3.2015 வெள்ளி மாலை ஈரோடு ‘அக்ரகார’த்தில் பெருமாள் வாத்தியார் நினைவு மேடையில் சிறப்புடன் நடைபெற்றது. ஈரோடு கழக தெற்கு மாவட்டச் செயலாளர் கு.சண்முகப் பிரியன் தலைமையில் அமைப்பாளர் ப.குமார், வடக்கு மாவட்ட தலைவர் – நாத்திக ஜோதி, தலைமைக்குழு உறுப்பினர் ப. இரத்தினசாமி ஆகியோர் உரையைத் தொடர்ந்து, தலைமைக் கழக பேச்சாளர் கோபி. வேலுச்சாமி, மூடநம்பிக்கைகளை தோலுரித்துப் பேசினார். நிறைவாக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பயணத்தின் நோக்கங்களை விளக்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக கா.வை.இளவரசன், ‘மந்திரமல்ல; தந்திரமே’ நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். பொது மக்கள் ஏராளமாக திரண்டு வந்திருந்து இறுதிவரை கருத்துகளைக் கேட்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுப்ரமணி, கொள்கை விளக்கப் பாடல்களைப் பாடினார். கழக மாணவர் இந்திரப் பிரியன், ‘ஜாதி எதிர்ப்புக் கவிதை வாசித்தார். நகர துணைத் தலைவர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார். கழக ஏட்டுக்கு 50 சந்தாக்களுக்கான தொகை ரூ.10,000/- பொதுச் செயலாளரிடம் தோழர்கள் வழங்கினர்.
கழகத்தின் புதிய வெளியீடுகளை தோழர் இரத்தினசாமி, கூட்டத்தில் அறிமுகம் செய்தார். மறைந்த கழகச் செயல்வீரர் பெருமாள் வாத்தியார் இல்லத்தில் அவரது மகன் இலட்சுமணன் தோழர்களுக்கு இரவு உணவு வழங்கினார். 21ஆம் தேதி தொடங்கி, 24ஆம் தேதி வரை ஈரோட்டில் பரப்புரைக் கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. காலை 7 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என்று ஒவ்வொரு நாளும் மூன்று கூட்டங்கள் திட்டமிடப் பட்டுள்ளன. இதன்படி 21ஆம் தேதி பெருமாள் மலை, கொஞ்சம் பாளையம், மரவபாளையம் பகுதிகளிலும், 22ஆம் தேதி இராவுதார் குளம், காமராஜ் நகர், கால்நடை மருத்துவமனை பகுதியிலும், 23ஆம் தேதி மரப்பாலம், சத்யா நகர், அரங்கம்பாளையம் பகுதிகளிலும்; 24ஆம் தேதி கனகபுரம், சூரம்பட்டி வலசு, சித்தோடு 4 ரோடு ஆகிய பகுதிகளிலும் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறு கின்றன. காவை இளவரசன், அனைத்துக் கூட்டங்களிலும் பங்கேற்று, ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்துகிறார். கா.சு.வேலுச்சாமி உரையாற்றுகிறார்.
தாரமங்கலத்தில்…
சேலம் மாவட்டக் கழகம் சார்பாக பரப்புரைப் பயணத்தின் தொடக்க விழா பொதுக் கூட்டம், மார்ச் 21ஆம் தேதி தாரமங்கலத்தில் அண்ணா சிலை அருகில் சிறப்புடன் நடந்தது. மாவட்டச் செயலாளர் சூரியக்குமார் தலைமை தாங்கினார். மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினர், ஜாதி எதிர்ப்புப் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர். தொடர்ந்து திராவிடர் கலைக் குழுவினர் வீதி நாடகங்களை நடத்தினர். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மக்களிடம் பேராதரவு வெளிப்பட்டது. நிறைவாக, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பயணத்தின் நோக்கங்களை விளக்கி சிறப்புரையாற்றினார். கழகத்தின் புதிய வெளியீடுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
முதல் கட்ட பரப்புரை 10 நாள்களுக்கு திட்டமிடப்பட்டு, நாள் ஒன்றுக்கு மூன்று கூட்டங்கள் வீதம் நங்கவள்ளி, மேட்டூர், ஆர்.எஸ். மேட்டூர் அணை, கொளத்தூர், ஓமலூர், இளம்பிள்ளை, ஏற்காடு, சேலம் நகரம், ஆத்தூர் பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் நடக்கவிருக்கின்றன.
மயிலாடுதுறையில்…
மயிலாடுதுறையில் பரப்புரைப் பயணம் மார்ச் 21ஆம் தேதி மாலை 5 மணியளவில் சிறையில் வீரமரணமடைந்த ஜாதி ஒழிப்புப் போராளி வெள்ளைச்சாமி பிறந்த மணல் மேடு கிராமத்திலிருந்து தொடங்கியது. தொடக்க விழா நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் அன்பு, நகர செயலாளர் தமிழ்வேலன், கடலங்குடி ஊராட்சித் தலைவர் மோகன் குமார் (வி.சி.) ஆகியோரைத் தொடர்ந்து முனைவர் ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். இரண்டாவது கூட்டம் கடலங்குடியில் நடந்தது.
22ஆம் தேதி மாலை 4 மணிக்கு இரண்டாம் நாள் பரப்புரை, கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயிலில் நடந்தது. 23ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருக்கடையூரில் தொடங்கி, ஆக்கூர், செம்பனார் கோயிலில் நடந்தது. 24ஆம் தேதி பேரளம், கொல்லுமாங்குடி, மங்கைநல்லூர், எலந்தங்குடியில் நடைபெறுகிறது. 25ஆம் தேதி குத்தாலம், மயிலாடுதுறை, கிட்டப்பா, அங்கடி, இரயிலடியில் நடைபெறுகிறது. 26ஆம் தேதி மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. மதிமாறன், கழகத் தலைவர் கொளத்தூர்மணி சிறப்புரையாற்றுகிறார்கள். பரப்புரைக் கூட்டங்களுக்கு வணிகர்களும், பொது மக்களும் பேராதரவு தந்து வருவதாக மாவட்ட செயலாளர் மகேஷ் கூறுகிறார்.
பெரியார் முழக்கம் 26032015 இதழ்