மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டவர்தான் ‘சின்னஜாதி’ கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை
கோயில் கட்டுகிறவர்கள் – கல்லூரி வியாபாரம் நடத்துகிறவர்கள் – தங்கள் சுயநலனுக்காக ஜாதி வெறியைத் தூண்டி விடுகிறார்கள் என்று ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரை இயக்கத்தை 20-03-2015 அன்று சென்னை பெரம்பூரில் தொடங்கி வைத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சில பகுதிகள். (சென்ற இதழ் தொடர்ச்சி)
உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வந்தவுடன் வந்த போராட்டங்களை நீங்கள் மீண்டும் யோசித்துப் பாருங்கள். 2006ஆம் ஆண்டு வரை அய்.அய்.டி போன்ற உயர் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்கள் அறுபது எழுபது சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடும் என்று நாம் கருதுகின்றோம். மண்டல் கணக்கெடுப்பின் படி 52 சதவீதம் என்று சொல்கிறார். மத்திய கல்வி அமைச்சர் மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அதற்கே பார்ப்பன மாணவர்கள் போராட்டம்; உடனே அரசு இறங்கி வந்தது. 27 சதவீத இடங்களையும் இப்போது கொடுக்கவில்லை, இந்த ஆண்டு 9, அடுத்த ஆண்டு 9, அதற்கடுத்த ஆண்டு 9 என பிரித்து தருகிறோம் என்றார்கள். ஆனாலும் பார்ப்பன மாணவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நம்முடைய மக்களின் தொழிலான தெரு கூட்டு வதையும், ஷூ பாலி° போடுவதையும் அவன் போராட்ட வடிவமாக செய்தான். தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு எத்தனை இடங்களை கொடுத் தாலும் வருவதற்கு ஆளே இல்லை; பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு கொடுத்தால் நாளைக்கே வந்து விடுவான் என்று கருதிப் பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். மொத்த இடங்களை 54 விழுக்காடு அதிகப்படுத்தி ( அதாவது 100 இடங்களை 154 ஆக உயர்த்தி ) உங்களின் இடங்கள் இப்போதிருக்கும் அளவிற்கே ( ஏற்கனவே 100 இடங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இடங்கள் 15 + 7.5 ஆக 22.5 போக 77 இடங்களை அனுபவித்து வந்ததைப்போல இப்போது பிற்படுத்தப் பட்டவர் களுக்கு 27 விழுக்காடு போனாலும், 50 சதவீதம் வரும், 154 இல் 50 விழுக்காடு என்றாலும்) பழையபடி 77 குறையாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றது அரசு; ஆனாலும் பார்ப்பனர்கள் எங்களின் இடம் முக்கியமல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள் வரக்கூடாது என்றுதானே எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இப்படி பிற்படுத்தப் பட்டவர்களுக்கு எதிராக மட்டுமே நடத்தப்பட்ட போராட்டத்தைப் பற்றி உணராமல் அவன் காலடியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். பார்ப்பானை தலைமேல் வைத்துக் கொண்டு இன்னொரு பிரிவினரை மிதிக் கின்றார்கள்.
ஜாதி எல்லா இடங்களிலும் இருக்கின்றது; எல்லோருடைய உள்ளத்திலும் வேலை செய்து கொண்டிருக்கிறது; அது இன்னொரு சமுதாயத்தை – பிரிவினரை கேவலமாக நடத்துவதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தவறு என்கிறோம்.
சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் ஒரு ஆர்பாட்டம் நடத்தினோம். எதற்காக என்றால் அரசு நிலத்தில் கோவில் கட்டிவிட்டு நான் கட்டிய கோவிலுக்கு நீ வரக்கூடாது என்கிறான். அரசு நிலங்களில் கோவில் கட்டக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பே இருக்கின்றது; கோவிலை கட்டியதோடு அல்லாமல் மற்றவர்களை உள்ளே விட மறுக்கின்றான். சிவன் – பெருமாள் கோவில் என்று கட்டிவிட்டு எங்கள் குலதெய்வம் என்று சொல் கிறார்கள். எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு பிற்படுத்தப்பட்டவர் களின் மனநிலையை மாற்றியிருக்கின்றார்கள். சமுதாயம் எப்போதும் இயல்பிலேயே முன்னோக்கித் தான் போய்க் கொண்டிருக்கும்; ஆனால் இந்த ஜாதி சங்கத் தலைவர்கள் பின்னோக்கி இழுக்கின்றார்கள். அண்மைக் காலமாக மிக அதிகமாக ஜாதி வெறியை தூண்டிவிட்டு தங்களின் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்வது மட்டுமே ஜாதி சங்கத் தலைவர்களின் எண்ணமாக இருக்கின்றது. இந்த நிலையில் தான் நமக்கு இப்படிபட்ட ஒரு பயணம் அவசியமாகிறது.
இல்லாத ஜாதியை – ஒழிந்து வந்த ஜாதியை – மறைந்து போய் கொண்டிருந்த ஜாதியை இப்போது சிலர் தூக்கி நிறுத்த முயற்சி செய்து கொண் டிருக்கின்ற வேளையில்தான் இப்படிப்பட்ட பயணம் நமக்கு தேவைப் படுகின்றது.
மத்திய அரசு பணிகளைப் பொறுத்தவரை மிகக் குறைவான இடங்களில் மட்டும்தான் இருக்கிறார்கள். மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டவர்கள் தான் சின்ன ஜாதி. நம்மூரில் செருப்புப் போடக் கூடாது – தெருவில் வரக்கூடாது – சின்ன ஜாதி என்று நாம் சொல்லும் தாழ்த்தப்பட்டவர்களெல்லாம் அங்கு 17 விழுக்காடு இருக்கின்றார்கள்; பெரிய ஜாதி என்று சொல்லிக் கொள்கிற பிற்படுத்தப் பட்டவர்கள் 6 விழுக்காடு தான் இருக்கின்றார்கள்; இங்கு நடக்கும் திரு மணங்களை – காதலைத் தடுக்காமல், நம் ஜாதிக்காரர் களுக்கு மத்திய அரசுப் பதவிகளில் உரிய விழுக்காட்டு வேலைகளையாவது வாங்கிக் கொடு, அதற்கான முயற்சியை செய் என்று ஜாதி சங்கத் தலைவர்களை துரத்தி அடிக்கவேண்டும் இளைஞர்கள்.
பிரம்மா நான்கு வர்ணங்களைத் தான் உண்டாக் கினான். அது எப்படி நான்காயிரம் ஜாதிகளாக மாறியது? அதற்கான காரணம் மனுசா°திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இது குறித்து “ஜாதி என்பதற்கு விபச்சாரமே காரணம்” என்ற தலைப்பில் பெரியார் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். மனுசா°திரத்தில் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கின்றது. பார்ப்பன பெண்களுக்கும் சூத்திர ஆண்களுக்கும் விபச்சாரத் தில் பிறந்தவர்கள் தான் சண்டாளர்கள் என்று எழுதுகிறான். “எல்லா பிராமணப் பெண்களும் அதே வேலையாக இருந்ததைப் போலவும், சூத்திர ஆண்கள் விபச்சாரிகளைத் தேடிப் போனதாகவும் அல்லவா இருக்கின்றது; இது இரு தரப்பினரையும் அவமானப்படுத்துவது” என்று அம்பேத்கர் நாசுக்காக எழுதினார். சண்டாளர்களும் பார்ப்பனப் பெண்களும் விபச்சாரம் செய்ததால் பிறந்தவர்கள் சரும வேலைக்காரரகள் (தோல் வேலை செய்பவர்கள் – அருந்ததியர்) என்று எழுதப்பட்டதைப் பார்த்து பெரியார் கேட்டார்… “இவர்கள் 18 சதவீதம் இருக்கின்றார்கள், பார்ப்பனர் மூன்று சதவீதம் தான் இருக்கின்றார்கள், 3 சதவீதம் பேர் விபச்சாரம் செய்து 18 சதவீதம் பேர் பிறந்தார்கள் என்றால் இதே வேலையாகத் தான் இருந்தார்களா? உங்கள் ஜாதியைத்தானே, உங்கள் ஜாதிப் பெண்களைத் தானே இது கேவலப்படுத்துவதாக இருக்கின்றது” என்று. நீங்கள் மனுசா°திரத்தை ஏற்றுக் கொண்டால் அது உங்கள் பெண்களை கேவலப்படுத்துவது ஆகும் என்றார் பெரியார்.
இராமயணத்தை படித்து இராமர் பாலம் என்கிறவர்கள், விநாயகர் புராணம் படித்து பிளா°டிக் சர்ஜரி பற்றி சொல்கிறவர்கள், மனு சா°திரத்தை படித்து மேற்சொன்னதை ஏற்றுக் கொள்வார்களா? நாம் இதையெல்லாம் பேச வேண்டிய காரணம் தோழர்களே, அறிவியல் அடிப்படை அற்ற ஒன்றை வைத்து – ஒரு மனிதனை இப்படி பிரித்துப் பார்ப்பதால்தான்.
நாம் அனைவரும் மனிதராக, எல்லோரையும் சமத்துவமாக பார்க்கின்றவர் களாக, நம்மை இழிவுபடுத்தும் பொய்யான புராணங்களை உதறித் தள்ளிவிட்டு, அறிவியல்படி மானுடவியல்படி நாம் அனைவரும் சமமானவர்கள்-நாம் அனைவரும் இந்த சமுதாயத்தின் ஒரு பகுதி – ஒரு பிரிவு என்ற மனநிலைக்கு பிற்படுத்தப்பட்டவர்கள் வரவேண்டும் என்ற கோரிக்கையோடு நடத்தப்படுகின்ற இந்த பரப்புரைப் பயணம் என்பது ஒரு பத்து நாள் மட்டும் செய்தால் முடிந்து போவது அல்ல; நாம் ஒவ்வொருவரும் அதை ஏதேனும் ஒரு வகையில் மக்களிடம் பேசியாக வேண்டும். இதற்கான போராட்டங்களுக்கு வரமுடியாதவர்கள் இதன் நியாயங்களையாவது மக்களிடம் பேசுங்கள்; சமூகம் சமத்துவத்தை நோக்கி போகட்டும்.
மனிதரை மனிதராக மதிக்கின்ற மனப்பான்மை முந்தைய தலைமுறையினருக்கு இல்லாமல் போனாலும், இந்த காலத்து தலைமுறையினர் கல்வி அறிவு பெற்று, விசாலப் பார்வை பெற்று – உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்த இந்த தலைமுறை இளைஞர்களுக்காவது வரவேண்டும் என்ற கோரிக்கையோடு நடத்துகின்ற இந்த பயணத்திற்கு அனைவரும் உதவவேண்டும் என்று கேட்டு முடிக்கின்றேன்.
பெரியார் முழக்கம் 14052015 இதழ்