திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில் கொளத்தூர் மணி பேச்சு சத்திய மூர்த்தி அய்யரின் ஜாதி வெறிக்கு சான்றுகள்!
தோழர் கவி தொகுத்துள்ள “மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூல் வெளியீட்டு விழா 8.5.2015 அன்று திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபத்தில் முக்கூடல் அமைப்பின் சார்பில் நடைபெற்றது. நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, முதல் படியை நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பேரன் மார்டின் செல்வம், டாடா° இரவி, பசு. கவுதமன், த.பரமசிவம், கோவி. லெனின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ‘நக்கீரன்’ முதன்மை ஆசிரியர் கோவி. லெனின் திறனாய்வு செய்தார். நூலாசிரியர் கவி ஏற்புரை வழங்கினார்.
நூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி.
பாரதிதாசன் திராவிட நாடு கேட்டு, பின்பு பெரியாருக்கு எதிராக தமிழ்நாடு என்று மாற்றிக் கொண்டார் என்று சிலர் சொல்கிறார்கள். பெரியாரையே அவர் எதிர்த்தார் என்கிறார்கள். பாரதிதாசன் எப்போது மாற்றிக் கொண்டார் என்று வரலாற்றைப் படித்துப் பார்த்தால் தெரியும். எப்போது பெரியார் 1956இல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பெரியார் சொன்னாரோ அப்போது பாரதிதாசனும் மாற்றிக் கொண்டார்.
பெரியார் திராவிட நாட்டைக் கைவிட்டு, ‘தமிழ்நாடு’ என்ற நிலைக்கு வந்த பிறகுதான், புரட்சிக் கவிஞரும் மாற்றிச் சொல்கிறார். 1956 பதிப்புக்குப் பிந்தைய ‘குயில்’ இதழ்களிலெல்லாம் தமிழ்நாடு என்று மாற்றினார். அவ்வளவுதான். ஆனால், இதை வைத்துக் கொண்டு இவர்கள் ஏதோ புதிய கண்டுபிடிப்பை செய்ததுபோல் பேசிக் கொண்டு திரிகிறார்கள். பெரியாரை குறை சொல்பவர்கள் எல்லாம் அவர்கள் ஏதோ புலனாய்வு செய்து கண்டுபிடித்ததாக சொல்ல முடியாது. பெரியாரே எழுதி வைத்ததை வைத்துத்தான் சொல்கிறார்கள். ஒளிவு மறைவு இல்லாத தலைவர் பெரியார்.
“பெரியார் தன்னை கன்னட பலிஜா நாயுடு என்று சொல்லிக் கொண்டார்” என்று ஒரு பக்கம் பேசுகிறார்கள். ஆமாம் சொன்னார். எப்போது சொன்னார்? 1926ஆம் ஆண்டு, ‘விதவா விவாக விளக்கம்’ என்ற நூலை, திருசிரபுரம் சி.பி. இராஜ கோபால் நாயுடு என்பவர் எழுதியிருக்கிறார். அதற்கு மதிப்புரையை பெரியார் எழுதுகிறார். அப்படி எழுதும்போதுதான் தன் வீட்டில் தன் தங்கை மகளுக்கு மறுமணம் செய்து வைத்ததை எழுது கிறார். அப்போது எழுதும்போது சொல்கிறார், “நான் இந்த ஜாதியில் பிறந்தவன். எங்கள் ஜாதியில் மறுமணம் செய்து வைக்கும் வழக்கம் இல்லை” என்று சொல்லிவிட்டு சொல்கிறார் – பெருமைக்காகச் சொல்லவில்லை. அவர்கள் வைத்திருந்த பழக்கத்தை முறியடித்தேன், உடைத்தேன் என்று சொல்வதற்காகத் தான் சொல்கிறாரே தவிர, தான் பெருமைமிக்க ஜாதியைச் சார்ந்தவன் என்பதற்காக சொல்லவில்லை. இந்த ஒரு இடத்தை வைத்துக் கொண்டு சொல் கிறார்கள், அவர் தன் ஜாதியை பெருமையாகச் சொல்லிக் கொண்டார் என்று.
இந்த நூலைப் பார்க்கிறபோது சில செய்திகளை நான் சொல்லிவிட வேண்டும். எல்லாவற்றையும் நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஒரு செய்தி, பார்ப்பனர்கள் ஆணவம் மிக்கவர்களாக இருந்தார் கள் என்பதற்கு ஒரு செய்தி இதில் பதிவாகியுள்ளது.
காங்கிர° தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் ஒரு தெருவில் குடியிருக்கிறார். அந்தத் தெருவுக்குப் பெயர் தணிகாசலம் செட்டித் தெரு. அந்தத் தெருவில் குடியிருக்க அவருக்கு விருப்பமில்லை. ஏனென்றால், ஒரு செட்டியின் பெயரால் இருக்கும் தெருவில் நான் குடியிருப்பதா என்பது அவரது நோக்கம். இவர் இரங்கசாமி அய்யங்கார் தெரு என்று மாற்ற முயற்சி செய்கிறார். ஏனென்றால் சத்தியமூர்த்தி அய்யர் மேயராக வேறு இருக்கிறார். தனது மேயர் பதவியைப் பயன்படுத்தி, தனது தெருவின் பெயரை மாற்ற முய்றசிக்கிறார். அதை பெரியார் இயக்கம் முறி யடித்தது என்பது வேறு.
ஆனால், இது ஏதோ பெயர் மட்டுமல்ல, அவரது வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டு மென்பதற்காக சில வார்த்தைகளை சொல்லிவிடு கிறேன். தணிகாசலம் செட்டியார் என்பவர் நீதிக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். என்ன தீர்மானம் என்றால், “பார்ப்பன ரல்லாதார் எண்ணிக்கை, அவர்களுடைய மக்கள் தொகைக்கு சமவிகிதமாக வருகிற வரை பார்ப் பனர்களை அரசு பதவிகளில் சேர்க்கக் கூடாது” என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வருகிறார். வழி மொழிந்து பேசிய உள்துறை அமைச்சர், “அதெல்லாம் வேண்டாம்; கூடியவரை பார்ப்பன ரல்லாதார் வருகின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று முடித்துக் கொள்கிறார். அந்த கோபம் சத்தியமூர்த்தி அய்யருக்கு.
சத்தியமூர்த்தி அய்யர் பெயர் சூட்ட விரும்பிய ரெங்கசாமி அய்யங்கார் யார் என்பதையும் சொல்லி விட வேண்டும். இப்போதைய ‘இந்து’ பத்திரிகையின் முன்னோடி அவர். மத்திய சட்டமன்றத்தின் உறுப்பினர். தற்போது நாடாளுமன்றம். அப்போது மத்திய சட்டமன்றம். அங்கே போகிறார். அங்கு ஒரே ஒரு பார்ப்பனரல்லாதார்தான் உறுப்பினராக இருக்கிறார். அவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார். பதவிக்காக நீதிக்கட்சியிலிருந்து சுயராஜ்ய கட்சிக்குப் போய் பதவியைப் பெற்றவர். பதவிக்காகக் கட்சி மாறுவது அப்போதும் இருந்திருக்கிறது. நம்ம ஆட்களும் செய்திருக்கிறார்கள். அப்போது ரங்கசாமி அய்யங்கார் ஒரு கேள்வியை முன் வைக்கிறார், “சட்ட மன்றத்தில். தமிழ்நாட்டில் சம உரிமைக்கு எதிராக சில சாதிகளுக்கு மட்டும் அதிக வாய்ப்பு கொடுக்கிற சட்டவிரோத செயல் நடக்கிறது. அதை இந்த அமைச்சர் நீக்குவாரா” என்று வெள்ளைக்கார உள் துறை அமைச்சரைப் பார்த்துக் கேட்கிறார். உள்துறை அமைச்சர் சொல்கிறார், “எது சமத்துவத்திற்கு எதிராக இருந்தாலும் அதை நீக்கிவிடுவோம்” என்கிறார். அய்யங்கார் ஏன் அப்படி கூறினார்? ஒரே நம்பிக்கை. சபையில் இருப்பது ஒரே ஒரு ஆள் பார்ப்பனரல்லாதவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார். அவரும் நம் கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறார். ஆர்.கே. சண்முகம் செட்டியார் வெள்ளைக்கார உள்துறை அமைச்சரைப் பார்த்துக் கூறுகிறார், “அது வாய்ப்பு பறிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பில்லாமல் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கிற முறை” என்று அவர் பேசத் தொடங்கிய வுடனேயே உள்துறை அமைச்சர் குறுக்கிட்டு, “புரிந்து கொண்டேன். என் பதிலை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று சொல்கிறார். அதனால்தான் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்ட தணிகாச் சலம் செட்டியார் தெருவில் குடியிருக்க, சத்திய மூர்த்தி அய்யர் விரும்பவில்லை. இடஒதுக்கீடு வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் போய் பேசிய இரங்கசாமி அய்யங்கார் தெருவில் இருக்க வேண்டும். இதுதான் இந்த சத்தியமூர்த்தி அய்யர் ஆசை. அதுதான் பெயர் மாற்றத்தின் பின்னால் இருக்கிற வரலாறு.
இந்த சத்தியமூர்த்தி அய்யர் மேயராக இருந்தார் என்றால் எப்படி மேயராக இருந்தார்? தேர்தலில் நின்று வெற்றி பெற்றாரா? பெரும்பான்மையான காங்கிர° உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தார்களா? என்றால் அதுவும் இல்லை. நீதிக்கட்சி பெரும் பான்மையாக இருந்தபோது, அதன் மேயராக இருந்த சர்.ஏ.இராமசாமி முதலியார் எல்லா வகுப்பினரும் மேயராக வரவேண்டும் என்ற காரணத்திற்காக ஆண்டுக்கொரு ஜாதியை சேர்ந்தவர் வருவதற்கான திட்டம் வகுக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மேயர். ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அளிக்க வேண்டும். அது இ°லாமியர்களுக்கு, கிறித்துவர் களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு என்றெல்லாம் பிரித்தளிக்கிறார். அப்படிப் பார்க்கிறபோது நீதிக்கட்சி பெரும்பான்மைதான் ஒரு பார்ப்பனரை மேயராகத் தேர்ந்தெடுக்கிறது. அதனால் மேயரானவர், சத்தியமூர்த்தி அய்யர் தேர்தலில் வெற்றி பெற்று மேயரானவரில்லை.
அவர் மேயரானபோதுதான் ‘வணக்கத்திற்குரிய மேயர்’ (றுடிசளாiயீகரட) என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று அறிக்கை விட்டவர். அதற்கு முன்பு அந்த சொல் இல்லை. ழளை நுஒஉநடடநnஉல என்று கேள்விபட் டிருக்கிறோம். ‘வணக்கத்திற்குரிய’ என்ற சொல்லை, தனக்கு வழங்க வேண்டும் என்று அவரே போட்டுக் கொண்டார், சத்தியமூர்த்தி அய்யர்.
தச்சாச்சாரி, கொல்லாச்சாரிகூட விசுவ கர்மப் பிரிவைச் சார்ந்தவர்கள், தங்கள் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போடக் கூடாது என்று இராஜகோபாலாச்சாரி ஒரு அரசாணை போட்டார். எதுக்கெல்லாம் சட்டம் போடுகிறார்கள்? அதுவும் முறியடிக்கப்பட்டுவிட்டது. திரும்பப் பெறப்பட்டது. அப்படிப்பட்ட சின்னச் சின்ன செயல்களையெல் லாம்கூட இந்த நூல் பதிவு செய்கிறது.
1929இல் பெரியார் மலாயா பயணம் போனதைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். பயணத்தின் நோக்கைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருக் கிறார். பெரியார் கிண்டலாகச் சொல்கிறார். மூடநம்பிக்கைப் பற்றியெல்லாம் சொல்கிறார்.
ஆங்கில அதிகாரிகள், பெரியார் பயணித்த கப்பலை நோக்கி படகில் வருகிறபோது, “உள்ளத்தில் பதட்டமும் முகத்தில் மட்டும் சிரிப்பையும் காட்டிக் கொண்டிருந்தோம்” என்று பெரியார் எழுதுகிறார். ‘உள்ளத்தில் பதட்டம். எங்கடா திருப்பி அனுப்பி விடுவார்களோ என்று. ஆனால் முகத்தில் மட்டும் சிரிப்பைக் காட்டி, அவர்களை வரவேற்றோம்’ என்று எழுதுவார். அதேபோல், பெரியார் கப்பலில் ஏறி போனபோது “எப்போதும் போல் இல்லாமல் கடல் அமைதியாக இருந்தது. ஏரிபோல் இருந்தது. நீங்கள் வந்ததால்தான் கடல் அமைதியாக இருக்கிறதாம்” என்று பெரியாரைப் பார்த்து கும்பிட்டார்களாம். இந்த மூடநம்பிக்கையையும் பெரியார் சுட்டிக் காட்டுகிறார். அங்கே போனபோது ‘பிள்ளை வரம்’ கேட்க வந்தார்களாம்.
பெரியார் இன்னொரு இடத்தில் சொல்லுவார். வைக்கம் போராட்டத்தில் பெரியார் ஈடுபட்டபோது, திருவாங்கூர் சம°தான அரசர் பெரியாரின் நண்பர். வடநாடு போகிற போதெல்லாம் கேரளாவிலிருந்து வரும்போது ஈரோட்டில் இறங்கி தொடர் வண்டி மாறவேண்டும். அப்போதெல்லாம் அரசர் பெரியார் வீட்டில் தங்கியிருந்துவிட்டு போவதுதான் வழக்கம். “சில மாதங்களுக்கு முன் போகும்போதுகூட அரசரும் அவரது பரிவாரங்களும் என்னுடைய வீட்டில் தங்கி இருந்த நட்பின் காரணமாக போராட வந்த எனக்கு வரவேற்புக் கொடுத்தார்கள். பெரியாருக்கு அன்பளிப்பாக மோதிரத்தையும் கொடுத்தனுப்பியிருக்கிறார். “மன்னிக்க வேண்டும். நான் போராட வந்திருக்கிறேன். என்னை விட்டு விடுங்கள் நான் போராட்டத்துக்கு செல்கிறேன். அவருக்கு நன்றியை சொல்லுங்கள்” என்று பெரியார் மறுத்து விடுகிறார். போராட்டம் நடக்கிறது. முதல்முறை பிடித்து ஒரு காவல் நிலையத்திலேயே ஒன்றரை மாதம் வைத்து விட்டுவிடுகிறார்கள். மீண்டும் போராட்டம் நடத்துகிறார். என்னடா தொல்லையா போச்சு என்று ஆறு மாதம் உள்ளே வைத்து விடுகிறார்கள். பெரியார் சிறைக்குள் இருந்தபோது, கூட இருந்தவர்கள் எல்லாம் அரசருக்கு யோசனை சொல்லுகிறார்கள். இவனைப் போன்ற எதிரிகளை வீழ்த்தியாக வேண்டும். எதிரிகளை அழிப்பதற்கு என்று ஒரு யாகம் இருக்கிறது. ‘சத்துரு சம்ஹார யாகம்’ நடத்தியாக வேண்டும் என்று யாகம் செய்கிறார்கள். பெரியாருக்கு எதிராக அரசரைக் காப்பாற்ற யாகம் நடந்தது; ஆனால், யாகத்தில் இருக்கும்போது அரசர் செத்து போய்விடுகிறார். அரசர் செத்தவுடன் ஜெயிலில் இருப்பவர்கள் எல்லாம் பேசுகிறார்களாம் – “பெரியார் இவரைவிட சக்தி வாய்ந்தவர். யாகத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. யாகத்தையே திருப்பிவிட்டார்” என்று. “எனக்கு மரியாதை மிகவும் கூடிவிட்டது. வந்தவர்களெல்லாம் வணக்கம் கூறி ஆசி கோர ஆரம்பித்து விட்டார்கள்” என்று பெரியார் எழுதியிருக்கிறார். அந்த வைக்கம் போராட்டத்துக்குப் போனபோதுகூட இந்த மூடநம்பிக்கைகள் அங்கு எதிரொலிக்கின்றன என்று பெரியார் சொல்கிறார்.
(தொடரும்)
பெரியார் முழக்கம் 04062015 இதழ்