ஜெயலலிதா ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி

தென்னகத்தில் – சங் பரிவார் சக்திகள் வேகமாகக் காலூன்றி வருவது பற்றி ‘பிரன்ட் லைன்’ இதழ் (மார்ச் 26, 2004) கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம், கருநாடக மாநிலங்களின் நிலை அதில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் சங் பரிவார் எப்படி வளர்ந்து கொண்டிருக் கிறது; குறிப்பாகக் கல்வி நிறுவனங்களில்; என்பது பற்றி, எஸ்.விசுவநாதன் எழுதியுள்ள கட்டுரையை – இங்கு தமிழில் வெளியிடுகிறோம். மூத்த பத்திரிகையாளர் விசுவநாதன், ஆழமான சமூகக் கண்ணோட்டத்தோடு, தலித் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து எழுதி வருபவர்.
“தமிழ்நாட்டில் இன்று ஜெயலலிதா தலைமையில் ஆன்மீக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” குடந்தையில் – மகாமகக் குளத்தில் புனித முழுக்குப் போட்டுவிட்டு – தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.இராமசாமி, மார்ச் 6ம் தேதி இவ்வாறு பத்திரிகையாளர் களிடம் கூறினார். குடந்தை மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டவர்கள் சுமார் 10 லட்சம் பக்தர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் – திரிசூலங்களைக் கையில் ஏந்திக் கொண்டு புரோகிதர்களும் முழுக்குப் போட்டார்கள்.
ஜெயலலிதா ஆட்சியில், 2822 கோயில்கள் புனரமைப்பு செய்யப்பட்டன என்றும் அமைச்சர் அந்தப் பேட்டியில் கூறினார். தமிழக அரசு, எந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை தருகிறது என்பதை அவரது பேட்டி உணர்த்துகிறது. அதே நேரத்தில், மத நம்பிக்கைகளைப் பயன்படுத்தி, தங்களின் வகுப்பு வாத திட்டங்களைத் தீவிரப் படுத்தி அதன் மூலம் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் சங்பரிவார் களுக்கு வசதியான, இலகுவான சூழலை, தமிழக அரசு உருவாக் கித் தருகிறது என்பதையும், உணர முடிகிறது.
பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருப்பதும், தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தொடர்ந்து பா.ஜ.கவை ஆதரித்து வந்ததும், சங் பரிவார்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்து விட்டது. தேர்தல் லாபத்துக்காக, திராவிட கட்சிகள் மேற்கொண்ட இந்த அணுகு முறைகள், பெரியார் உருவாக்கிய திராவிடர் இயக்க லட்சியங்களின் அடித் தளத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகும். அதே நேரத்தில் இந்துத்துவா வளர்வதற்கும், இது வாய்ப்பாகி விட்டது. தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, சங்பரிவார்களுக்கு, கொள்கை ரீதியான ஆதரவு தராமல், அதே நேரத்தில் சங்பரிவார் களைக் கடுமையாக எதிர்க்காத அணுகு முறையை மேற்கொண்டது. சங்பரிவார்களின், பொது சிவில் சட்டம் , அயோத்தி ராமன் கோயில் பிரச்சினைகளில், திமுக உடன்படவில்லை. ஆனால், அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, சங் பரிவார் களின் கொள்கைகளை ஆதரிப்பதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. இன்னும் ஒரு படி மேலே போய், இந்துத்துவா கொள்கைகளை அமுல்படுத்துவதில், சங்பரிவார்களையே முந்திக் கொண்டு, முன்னோடியாக செயல்பட்டது. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கொண்டு வரப்படாத சட்டங்களை எல்லாம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கொண்டு வந்தது. அதில் ஒன்று மதமாற்றத் தடைச் சட்டம். இந்தச் சட்டத்தை மத்தியில் பா.ஜ.க. அணியில் இடம் பெற்றிருந்த போதிலும், தி.மு.க. எதிர்த்தது. கோயில்களைப் புதுப்பிக்க தாராளமாக நிதி ஒதுக்குதல், பூசாரி களுக்கு பென்ஷன், கோயில்களில் அன்ன தானம், 150 இந்துக் கோயில்களில் ஆன்மீகப் பயிற்சிகள், இந்துக்களுக்கு மட்டும் கோயில் களில் இலவசத் திருமணம் என்று பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தினார் ஜெயலலிதா.
1991-96ல் முதல்முறையாக ஜெயலலிதா முதலமைச்சரானவுடன், அர்ச்சர்களுக்கு வேத பாடசாலைகளை ஆரம்பித்தார். மைனாரிட்டிகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில், அரசு தலையிட உரிமை உண்டு என்று அவசரச் சட்டம் பிறப்பித்தார். கடும் எதிர்ப்புக்குப் பிறகு அதைத் திரும்பப் பெற்றார். 1992 நவம்பரில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில், அயோத்தி யில் ‘கரசேவை’ நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார். அடுத்த 15 நாட்களில் பாபர் மசூதியை இடித்து விட்டார்கள்.
கடந்த 5 ஆண்டுகளாக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இந்துத்துவா செயல்திட்டங்களுக்கு உடன்பட்டு, ஒத்துழைத்து வருகிறது. அதில் ஒன்று ‘வினாயகன்’ ஊர்வலம். மைனாரிட்டி மக்களுக்கு எதிரான கவலரங்களை உருவாக்கவே, இந்த ஊர்வலம் முதல் சில ஆண்டுகள் பயன்படுத்தப் பட்டன. இப்போது இரண்டு திராவிடக் கட்சி யினருமே, தங்கள் கட்சிக் கொடிகளுடன் ‘வினாயகன்’ ஊர்வலத்தில் கலந்து கொள் வதைப் பார்க்க முடிகிறது.
கிராமப் பூசாரிகளை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு அரசு உதவிகளைப் பெற்றுத் தரும் திட்டத்தை விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி அமைப்புகள் கையில் எடுத்தன. ஆயிரக் கணக்கான கிராமக் கோயில்களை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே, அவர்கள் நோக்கம். கிராமக் கோயில்களை ‘பார்ப்பன மயமாக்கி’, தலித் பிற்படுத்தப்பட்டவர்களை தங்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்வதே, இவர்களின் நோக்கம் என்கிறார் இது பற்றி ஆய்வு செய்துவரும் பேராசிரியர் சிவ சுப்பிர மணியன்.
கோயில்களில் ஆடு, கோழி வெட்டத் தடை செய்து ஜெயலலிதா ஆட்சி பிறப்பித்த உத்தரவு – சங்பரிவார்களுக்கு ஆதரவானதாகும்! (இதில் நமக்கு மாறுபட்ட கருத்து உண்டு; சங்பரிவார்க்கு மூளையாக செயல்படும் பார்ப்பனர் குருமூர்த்தி – இந்த ஆணையை எதிர்த்தார் என்பது குறிப் பிடத்தக்கது.)
தமிழகத்தில் தலித் மக்கள் வாழும் பகுதிகளில் 120 கோயில்களைக் கட்டியுள்ளதாக விசுவ இந்து பரிஷத் கூறுகிறது. இந்தக் கோயில்களில் எல்லா சமூகத்தினரும் சென்று வழிபடுகிறார்கள் என்றும் அது கூறுகிறது. இதனால் தீண்டாமைப் பிரச்சினை பெருமளவு குறைந்து விட்டதாகவும் அந்த அமைப்பினர் கூறுகிறார்கள். உண்மையில், தலித் மக்களின் கோரிக்கை, தங்களுக்குத் தனிக் கோயில்கள் வேண்டும் என்பது அன்று. அனைத்துப் பெரும் கோயில்களிலும், சட்டம் வழங்கியிருக்கிற உரிமைப்படி, உள்ளே நுழையும் உரிமை வேண்டும் என்பதற்கே பல பகுதிகளில் போராடுகிறார்கள். ஆனால், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, விசுவ இந்து பரிஷத்தோ அல்லது அவர்களின் ஆதரவு அமைப்புகளோ, எந்த ஒரு இடத்திலும், இவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று சிந்தித்ததுகூட இல்லை. சாதி ஒடுக்கு முறையை எதிர்த்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில், தலித் மக்கள் நடத்திய போராட்டத்தை இவர்கள் ஆதரித்ததும் இல்லை; பல நேரங்களில் சாதி ஆதிக்க வாதிகளின் ஆதர வோடுதான், தங்கள் மதவாத நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக – கல்வித் துறையில் இந்துத்துவாவின் ஊடுறுவல் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் சங்பரிவார் துணை அமைப்பான ‘வித்யாபாரதி அகில் பாரதிய ஷிக்ஷா, சன°தான்’ என்ற அமைப்பு. தமிழகத்தில் சுமார் 150 பள்ளிகளை நடத்தி வருகிறது. ‘இந்தியக் கலாச்சாரத்தையும் – அதன் வாழ்க்கை முறையையும்’ பரப்பிடும் ஒருங்கிணைந்த கல்வியைத் தருவதே, இந்தப் பள்ளிகளின் நோக்கம் என்று கூறுகிறார்கள். இதில் – விசுவ இந்து பரிஷத் ‘இந்து வித்யாலயா’ என்ற பெயரில் 24 பள்ளிகளை நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தப் பள்ளிகளின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்துள்ளது. உதாரணமாக, ‘விவேகானந்தா கல்விக் கழகம்’ நடத்தும் பள்ளிகள் 1998ல் 10 ஆக இருந்தது; 2003ல் இது 16 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, மாணவர்கள் அங்கேயே தங்கிப் படிக்கும் ‘குருகுலக்’ கல்வியையும், இந்தக் கழகம் துவக்கியுள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதி களில் தான் – இவைகள் அதிகமாக இயங்குகின்றன. மத்தியதர வர்க்கத்தினர் வீட்டுப் பிள்ளைகள் தான் இதில் படிக் கிறார்கள். 17,000 மாணவர் களுக்கு, யோகா, இசை, நடனம், உடற்பயிற்சிகளைக் கற்றுத் தருகிறார்கள். இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றோடு, சம°கிருதம் கட்டாயமாகக் கற்றுத் தரப்படுகிறது. பொது ஒழுக்கக் கல்வி என்ற பெயரில், இதிகாசங்கள், புராணங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இந்தப் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விண்ணப்பங்களை – அருகில் உள்ள இந்துக் கோயில்களுக்கு எடுத்துப் போய், கடவுள் சிலை யின் காலடியில் வைத்து, வணங்கும் வழக்கம் இந்தப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எந்த மதத்தினராக இருந்தாலும், இந்த சடங்கைக் கட்டாயம் செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ‘புத்துணர்ச்சி’ பயிற்சிகள் தரப்படுகின்றன. ஒரு கட்டத்தில் மாணவர்களை கன்யாகுமரியில் உள்ள, விவேகானந்தா மய்யத்துக்கு அழைத்துச் சென்று, அங்கே அவர்களுக்கு ‘ஷாகா’வைப் போல் (ஆர்.எ°.எ°. பயிற்சி வகுப்பு) 21 நாட்கள் பயிற்சி தரப்படு கின்றன. ஆர்.எ°.எ°.க்கு, தொண்டர்களை தேர்வு செய்வதற்கு, இந்தப் பயிற்சிகள் பயன்படுகின்றன. எல்லாப் பள்ளிகளிலும், இந்துக் கடவுள்களின் படங்களோடு வழிபாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வித்யாபாரதி பள்ளிகளில், ‘தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழு’ தயாரித் துள்ள பாட நூல்களே பயன்படுத்தப்படுகின்றன. (ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சிந்தனையாளர்களால், இந்தக் குழு உருவாக்கப்பட்டு, பாடத் திட்டங்கள் இந்துமத வெறிக் கண்ணோட்டதோடு உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது – ஆர்) கடந்த காலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மட்டுமே, இந்தப் பாடல் நூல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போது மேற் குறிப்பிட்டக் குழு, வரலாற்றை மாற்றி, பாட நூல்களை வெளியிடத் துவங்கியதால் எல்லா வகுப்புகளுக்கும், இந்தப் பாடங்களைப் பயன் படுத்தத் துவங்கி விட்டார்கள். ஆர்.எஸ்.எஸ். பயிற்சியாளர்களின் உதவியோடு இந்தப் பள்ளிகள், கோயில்களில் பெண்களுக்கான ‘திருவிளக்கு’ பூஜைகளை ஏற்பாடு செய்கின்றன. இந்தப் பள்ளிகளில் – ஆர்.எஸ்.எஸ். பயிற்சி களுக்கும், இடமளிக்கப்படுகின்றன.
பல்கலைக் கழகங்களிலும், வேத சோதிடம், வேத கணிதம் என்ற பாடத் திட்டங்கள் புகுத்தப் பட்டுள்ளன. ஆனாலும், பல்கலைக் கழகங்களில், அகடமிக் கவுன்சில், செனட் மற்றும் சிண்டிகேட் அமைப்புகள், இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உதாரணமாக, பல்கலைக் கழக நிதி உதவிக் குழு மேற்குறிப்பிட்டப் பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியபோது, மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கமும், பல்கலைக் கழகத்தின் பல்வேறு அமைப்புகளும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தப் பாடங்களை ஏற்கவிடாமல் தடுத்த விட்டன. (மதுரை பல்கலைக் கழகம் இந்தப் பாடங் களை ஏற்று நடத்திய நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பல்கலைக் கழகத்தின் முன், இதை எதிர்த்து பஞ்சாங்க எரிப்புப் போராட்டம் நடத்தியது. 300 கழகத்தினர் கைது செய்யப் பட்டனர்; அதனைத் தொடர்ந்து, பல்கலைக் கழகத்துக்குள்ளும் எதிர்ப்பு வந்தது, பிறகு வேதச் சோதிடக் கல்வி நிறுத்தப்பட்டது. – ஆர்)
சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டப் படிப்பில் ‘நாட்டியம்’ பற்றிய பாடம் அறிமுகப் படுத்தப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், இதற்கான பாடத் திட்டத்தை உருவாக்க முன் வந்தார்கள். “இந்தப் பாடத் திட்டத்தில் விஞ்ஞான அடிப்படை இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன் அமுலில் இருந்த ‘குரு-சிஷ்ய பரமபாரா’ என்ற அறிவியலுக்கு மாறான முறையை, இப்போது, அறிவியலோடு இணைத்துத் தர முயற்சிக்கிறார்கள்” என்று, பல்கலைக் கழகத்தின் பல்வேறு அமைப்புகள் எதிர்த்தன. எனவே துணைவேந்தர் இத் திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டார்.
இப்படி, அண்மைக்காலமாக – தமிழ்நாட்டில் சங்பரிவார் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இது தமிழ்நாட்டின் நல்லிணக்கச் சூழலுக்கு கடும் ஆபத்தை உருவாக்கிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும், இவைகளினால் பா.ஜ.க. தனது அரசியல் தளத்தை பெரிய அளவில் விரிவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது. கன்யாகுமரி, கோவை மாவட்டங்கள் மட்டுமே, அந்த அமைப் புகள் வலிமையாகக் காலுன்றி உள்ளன.”
– இவ்வாறு ‘பிரன்ட் லைன்’ பத்திரிகை படம் பிடித்துள்ளது.

பெரியார் முழக்கம் 01042004 இதழ்

Leave a Reply