“பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?”

As

“மாநாட்டுத் தீர்மானங்கள் !”

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்
“பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?”
“வாருங்கள் வரலாறு பேசுவோம்!!”
பரப்புரை பயணத்தின் நிறைவு மாநாடு
மயிலாடுதுறை – 22.03.2025 .

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

தீர்மானம் எண் 1 :

“தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும்.அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது.

தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று பெரியார் பணி செய்வதே என் கடன் என்ற லட்சிய வெறியோடு ஒரு வார காலம் பயணித்த கழகச் செயல் வீரர்களை இம்மாநாடு பாராட்டுகிறது, மகிழ்கிறது. இந்தப் பயணத்தில் தோழர்கள் செலுத்திய உழைப்பு வீண் போகாது; வரலாற்றில் பதியப்படும் என்று இம் மாநாடு பெருமை அடைகிறது.”

தீர்மானம் எண் 2 :
“சமூக மாற்றத்திற்கு வாழ்நாள் முழுதும் போராடியவர் பெரியார்.சமூகத்தை அடிமைப்படுத்திய சக்திகளை சரியாக அடையாளம் கண்டார்.ஜாதி வர்ணாசிரம கட்டமைப்பே தமிழர்களின் எதிரி என்ற முடிவுக்கு வந்தார். அதற்கான கருத்தியல்களை வழங்கிய பார்ப்பனியத்தையும் அதன் தலைமை பீடமான சங்கராச்சாரிகளையும் கடுமையாக எதிர்த்தார்.

பெரியார் ஜாதி ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பிறவியின் அடிப்படையில் பிராமண, சூத்திர பேதத்தை நியாயப்படுத்தும் வர்ணாசிரமமே நமக்கான தர்மம் என்றனர். பெரியார் தீண்டாமைக்கு எதிராகக் களமாடினார் . வைக்கத்தில் போராடினார்.சங்கராச்சாரிகள் தீண்டாமை தேவை அது ஷேமகரமானது என்றார்கள்.பெரியார் பெண்ணடிமை ஒழிய வேண்டும் என்றார். சங்கராச்சாரிகள் பெண்கள், ஆண்களுக்கு அடிமைப்படுவதே நமக்கான தர்மம் என்றனர். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள், கணவனை இழந்த பெண்கள் தரிசு நிலம். அவர்கள் பார்க்கக்கூடாதவர்கள், தீண்டப்படாதவர்கள் இதுவே நமது தர்மம் என்றார்கள்.பெரியார் தமிழை அறிவியல் மொழியாக்க விரும்பினார். இன்னும் தமிழ் காட்டுமிராண்டி மொழி யாகவே இருக்கலாமா என்று கவலைப்பட்டார்.திருக்குறள் மாநாடு நடத்தினார்.குறள் நெறியே நமது மதம் என்றார்.திருக்குறளைக் குறைந்த விலையில் அச்சிட்டு பரப்பினார். தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். ஆனால் சங்கராச்சாரிகள் சமஸ்கிருதமே நமக்கான மொழி என்றார்கள்.அதுதான் தெய்வ பாஷை என்றார்கள், தமிழ் நீஷபாஷை, உச்சி வேளை பூஜையின் போது தமிழில் பேச மாட்டோம் என்றார்கள்.அப்படிப் பேசினால் மீண்டும் ஸ்நானம் செய்ய வேண்டும் என்றார்கள், கோயில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் மட்டுமே இருக்க வேண்டும் என்றார்கள். தீக்குறளை சென்றோதோம் என்று திருப்பாவையில் ஆண்டாள் கூறியுள்ளதை திருக்குறளை படிக்க கூடாது என்று திருக்குறளை இழிவு படுத்தினார்கள். பெரியார் அரசியல் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு இருக்கக் கூடாது என்றார் . அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட போது காஞ்சி மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி அதைக் கடுமையாக எதிர்த்தார். பிராமணர்களின் தர்மங்களும் சாஸ்திரங்களுமே நமக்கான சட்டம், வேறு அரசியல் சட்டமே தேவை இல்லை என்று பகிரங்கமாக எழுதினார். யாகம் உள்ளிட்ட வேத சடங்குகளை எதிர்த்து பார்ப்பனியத்துக்கு எதிராக மக்களைத் திரட்டினார் புத்தர். அந்த புத்த மார்க்கத்தை வீழ்த்தியவர் ஆதிசங்கரர் அதற்காகவே நான்கு திசைகளிலும் சங்கர மடங்களை அவர் நிறுவினார். மீண்டும் வேத காலத்தை உருவாக்க வேண்டும் என்பது சங்கராச்சாரிகளின் லட்சியம் அதைத் தடுத்து நிறுத்த வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார்.

வேதகாலத்தை மீண்டும் கட்டமைக்க இப்போது என்ன தேவைப்படுகிறது, இந்தியாவை அழித்து இந்துராஷ்டிரம் உருவாக்க வேண்டும் அதற்கு மாநில உரிமைகள், மொழி உரிமைகள் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்கள் தடையாக நிற்கின்றன; எனவே ஒற்றை ஆட்சியை நோக்கி பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை அழிக்கும் முயற்சியில் ஒன்றிய ஆட்சி துடிக்கிறது.

ஒரு சில வட மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து இந்தி பேசாத மாநிலங்கள் உட்பட பிற மாநிலங்களைத் தங்களுக்கு அடிமை ஆக்கிக் கொள்ள முடியும் என்ற நோக்கத்தோடு தொகுதி மறு சீரமைப்பைப் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறார்கள்.

மக்கள் பேசாத சமஸ்கிருதத்திற்கு ஏனைய மொழிகளை விட பல மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்குகிறார்கள். தேசியக் கல்விக் கொள்கையில் சமஸ்கிருதமே நமது பண்பாடு என்று அறிவிக்கிறார்கள். அந்தப் பண்பாட்டைத் திணிப்பதற்கு வழி அமைத்துத் தருவதற்கு மும்மொழி திட்டத்தைத் திணிக்கிறார்கள். சூத்திரனுக்கு கல்வியைத் தராதே என்ற மனுதர்ம கொள்கைக்கு வலிமை சேர்க்க தமிழ்நாட்டின் கல்வி நிதியை முடக்குகிறார்கள். திட்டமிட்டு குலத் தொழிலுக்கு உயிரூட்ட விஸ்வகர்மா திட்டம் வருகிறது. மக்கள் ஜனநாயகத்திற்கும் அதை மறுக்கும் வேத பார்ப்பனியத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் இப்போது நடக்கும் அரசியல். பெரியார் – சங்கராச்சாரி போராட்டம் தொடர்கிறது.

தமிழ்நாட்டில் பெரியார் ஆழமாக விதைத்துச் சென்ற சிந்தனைகளை சீர்குலைத்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆளுநர் பெரியாரை எதிர்த்துப் பேசுகிறார். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திலேயே பெரியாரை எதிர்க்கிறார். அயோத்தி ராமன் கோயிலில் ராமன் சிலையை நிறுவ சூத்திரன் மோடிக்கு உரிமை இல்லை என்று சங்கராச்சாரிகள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். நிர்மலாக்கள் அந்த சங்கராச்சாரிகளைக் கண்டிக்கவில்லை மாறாக சங்கராச்சாரிகளை எதிர்த்துக் களமாடிய பெரியாரை இழிவு படுத்துகிறார். இதற்கு சில போலி தமிழ் தேசியவாதிகளும் தமிழனுக்கு துரோகம் இழைத்து பார்ப்பனியத்திற்கு விலை போகிறார்கள்.

இன்றைக்கு பெரியார் எதிர்ப்பு என்பது சங்கராச்சாரிகளின் பார்ப்பனிய நச்சுக் கருத்துகளுக்கு உயிரூட்டும் முயற்சியே ஆகும். இந்த ஆபத்தை விளக்கியும், கண்டித்தும் சனாதனத்திற்கு உயிரூட்டும் சங்கராச்சாரிகள்,அதற்கு துணை போகும் போலி தமிழ் தேசியவாதிகளை கண்டித்து முதல் கட்டமாக 2025 ஏப்ரல் 21ல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த இம்மாநாடு முடிவு செய்கிறது.”

தீர்மானம் எண் 3 :

“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தான் ஒன்றிய ஆட்சியின் திணிப்புகள், மறுப்புகளுக்கு எதிராகக் கருத்தியல் போராட்டம் நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் பாஜகவின் மெஜாரிட்டி எண்ணிக்கையைக் குறைத்து மைனாரிட்டி நிலைக்குத் தள்ளியவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்கள். அதன் காரணமாக தமிழ்நாட்டு மக்களின் நிதி உரிமைகளைப் பறிப்பதோடு ஆளும் கட்சிக்குக் கடுமையான அரசியல் நெருக்கடிகளையும் பாஜக ஒன்றிய ஆட்சி உருவாக்கி வருகிறது.

1967 முதல் தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. கல்வி கட்டமைப்பில் இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தோல்வி அடைந்த மும்மொழித் திட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் மீது மிரட்டித் திணிக்கும் ஒன்றிய ஆட்சிக்குப் பணிய மாட்டோம், நிதி தர மறுத்தாலும் மாநில அரசு அந்த நிதியை ஒதுக்கும். மும்மொழிக் கொள்கை காவிக் கொள்கை, நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் கொள்கை என்று அறிவித்துவிட்டார் தமிழக முதலமைச்சர்.

40-க்கும் மேற்பட்ட மாநில மொழிகளை இந்தி அழித்த வரலாற்றை முதலமைச்சர் சுட்டிக் காட்டிய நிலையில் இந்தி பேசும் உ.பி. மாநில சட்டசபையில் இந்தி எதிர்ப்புக் குரல் ஒலிக்கத் தொடங்கி இருப்பது திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.

தொகுதி மறு சீரமைப்பு வர இருக்கும் சூழலில் பாஜக ஆட்சியில் கடந்த கால கபட செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையோடு அதைத் தடுக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் இறங்கியுள்ளார். பல மாநிலங்களின் முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அவர்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளார்கள். இதன் வழியாக இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார்.

முதல்வரின் இந்த மாநில உரிமைப் போராட்டங்களைப் பாராட்டி வரவேற்கிறோம். மாநிலத்தின் உரிமைக்கும், சுய மரியாதைக்குமான இந்தப் போராட்டங்களுக்கு அனைத்துத் தரப்புத் தமிழர்களும் துணை நிற்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.”

தீர்மானம் எண் 4 :

“இந்துக் கோயில்களை நிர்வகிப்பதற்கு மட்டுமே உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அண்மைக்காலமாக மக்களிடம் இந்து மதப் பரப்புரை செய்யும் துறையாகவே மாறி வருகிறது. பழனியில் உலக முருகன் மாநாட்டை நடத்தியது. இப்போது மகா சிவராத்திரியை அறநிலையத்துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு முதன்முறையாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடியதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருமைப்படுகிறார். சிவராத்திரி போல் தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி விழாக்களையும் அடுத்தடுத்து கொண்டாட அறநிலையத்துறை திட்டமிட்டு உள்ளதா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறோம். மத உணர்வுகளை மக்களிடம் வளர்த்து விடும் அறநிலையத்துறையின் இந்தச் செயல்பாடுகள் மதவாத சக்திகள் வேர்ப் பிடிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று சுட்டிக் காட்டுகிறோம். அறநிலையத் துறையின் எல்லை மீறும் செயல்களுக்கு, இந்த மாநாடு கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

அதேபோல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகும் திட்டத்தை 24 பேருடன் அறநிலையத் துறை நிறுத்திக் கொண்டு விட்டது. அர்ச்சகர் பதவிக்காக பயிற்சி பெற்றவர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் உள்ள தடைகளை அகற்ற எந்த முயற்சியும் அறநிலைத்துறை எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது எனவே நீதிமன்றத் தடைகளை நீக்கி அனைத்து சாதிகளும் அர்ச்சகராகும் திட்டத்தை அடுத்தடுத்த கோயில்களில் விரைவு படுத்த வேண்டும் என்று இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.”

தீர்மானம் எண் 5 :

“தமிழ்நாட்டு கிராமங்களில் ஜாதிய பாகுபாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் நிலவும் தீண்டாமை வடிவங்களை நேரில் சென்று ஆய்வு செய்து அந்த அறிக்கையை தமிழ் நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திடம் நேரில் வழங்கினர்.

தலித் மக்கள் வாழும் பகுதிகளில் ரேஷன் கடைகள் நடத்தத் தடை, முடிவெட்ட மறுப்பு, இரட்டை டம்ளர் முறை, பைக்குகளில் செல்லத் தடை போன்ற பல்வேறு வடிவங்களில் தீண்டாமை பின்பற்றப்பட்டு வருகிறது.

அண்மைக்காலமாக உயர்நீதிமன்றங்கள் ஜாதிக்கு எதிராக தீர்ப்புகளை வழங்கி வருவது பாராட்டி வரவேற்கத் தக்கதாகும்.
ஜாதி அடிப்படையில் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது. கோயில் திருவிழா விளம்பரங்களில் ஜாதிப் பெயர் போடக்கூடாது. ஜாதியை நிலை நிறுத்தும் போக்கு, செயல்பாடுகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தொலைக்காட்சிகளில் ஜாதி வரன் தேடும் விளம்பரங்கள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி ஒளிபரப்பும் நாடகத் தொடர்கள், நிகழ்ச்சிகள், செய்திகளில் ஜாதி அடையாளம் இடம்பெறுவது இல்லை. ஜாதி கலவர செய்திகளை ஒளி பரப்பும் போது கூட இரு பிரிவினருக்குமிடையே என்று கூறி ஜாதிப் பெயரை குறிப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். ஆனால் வரன் தேடும் விளம்பரங்களில் வெளிப்படையாகவே ஜாதி அடையாளம் பேசப்படுகிறது, இது தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் இத்தகைய விளம்பரங்களை செய்தி ஒழுங்கு கருதி வெளியிடாமல் தவிர்க்க வேண்டும் என்று மாநாடு கேட்டுக்கொள்கிறது.

வன்கொடுமைகள் ஜாதியின் பெயரால் நடக்கும்போது காவல்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது, ஆனாலும் தீண்டாமை அடிப்படையில் சிவில் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்கிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி கருதி இதற்கு மறைமுகமாகவோ, நேரடியாகவோ துணை போகிறார்கள். தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் சமூக நல்லிணக்கம் பேணும் கிராமத்திற்கு ஒரு கோடி பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
அதுபோலவே தீண்டாமையைப் பின்பற்றும் கிராமங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறது.

இந்த தீண்டாமை அவலங்களை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முழு வீச்சோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மக்களும் காலத்திற்கு ஒவ்வாத பாகுபாடுகளை நிலை நிறுத்தும் இந்த ஜாதி அடையாளத்தை கைவிட்டு சமூக மனிதர்களாக வாழ முன்வர வேண்டும் என்று மாநாடு கேட்டுக்கொள்கிறது.”

தீர்மானம் எண் 6 :

“ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பார்ப்பன சொற்பொழிவாளர்களும், பிராமணர் மாநாடு போன்ற மாநாடுகளில் உரையாற்றுபவரும் முன்வைக்கும் பல வாதங்கள் அரசியல் சட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ள சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றுக்கு எதிராகவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட குற்ற வரையறைக்குள் வருவதாகவும் உள்ளன.

a) அவ்வாறான உரைகள் ஆற்றப்படும் இடங்களிலேயே எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டுமாறு தோழர்களை, தமிழ்நாட்டு பார்ப்பனர் அல்லாத மக்களை, குறிப்பாக இளைஞர்களை இம்மாநாடு வேண்டி கேட்டுக்கொள்கிறது.

b) தனி இடங்களில் அவ்வாறு பேசப்பட்டாலும் காணொலி வழியாக பொதுவெளியில் பரப்பப்படும் போது உரிய நிறுவனங்களுக்கு புகார் ( report) இடுமாறும், அதே வேளை காவல் நிலையங்களில் புகார் அளித்து உரிய ஒப்புகையைப் பெறுமாறும் இம்மாநாடு வேண்டி கேட்டுக்கொள்கிறது.

c) பெரியார் மீதான ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பியதற்காக புதிய தண்டனை சட்ட விதிகள் 192, 196, 352, 353 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சீமான், அண்ணாமலை, எச். ராஜா போன்ற பேர்வழிகள் மீது புகார் கொடுத்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

புகார் அளித்த தோழர்கள் சீமானையும் உரிய காவல்துறை அதிகாரிகளையும் எதிர் மனுதாரர்களாக குறிப்பிட்டு தனி வழக்குகளாக (Private complaint) உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடருமாறு மாநாடு கேட்டுக்கொள்கிறது.”

You may also like...