புனிதங்களைப் பொசுக்கியவர் : புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்!

பேராசிரியர் சுனில் கில்னானி இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவருடைய, ‘INCARNATIONS: INDIA IN FIFTY LIVES’ நூலில்… தந்தை பெரியார் குறித்து இடம்பெற்ற ‘SNIPER OF THE SACRED COWS’ கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது:

இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குடியரசு’ என்போம். இந்த நாட்டில், 60 கோடி பேர் இருப்பார்கள். ஆண்களால் மோசமாக ஆளப்படும் இந்தியாவுக்கு அடுத்த, பெரிய தேசமாக அது திகழும். அந்தத் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக் குறியீடானது மியான்மர், ருவாண்டா முதலிய நாடுகளுக்கு இடையே மோசமான இடத்தைப் பெறும். அந்தத் தேசத்தில் பள்ளிக்குச் செல்லும் சராசரி வருடங்கள் அதிர்ச்சி தரும் அளவாக 3.2 வருடங்கள் என்கிற அளவிலேயே இருக்கும். இது, ஆப்ரிக்கத் தேசமான மொசாம்பிக்கின் மோசமான கல்விநிலையோடு போட்டியிடும் நாடாகக் காட்சியளிக்கும். தனிநபர் வருமானத்தை, விலைவாசி ஏற்றத்தை கணக்கில்கொண்டு கணக்கிட்டால்… இந்த இந்தியப் பெண்கள் நாட்டின் வருமானம், ஐவரி கோஸ்ட், பப்புவா நியூ கினியா முதலிய நாடுகளுக்கு இடையே தள்ளாடும். கடந்த 15வருடங்களில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மூன்று மடங்கு பெருகியும் பெண்களின் நிலை இவ்வளவு அவலத்துக்கு உரியதாக இருக்கிறது.

இந்தியப் பெண்களின் அளப்பரிய ஆற்றலை இந்த அளவுக்கு அடக்கி ஒடுக்காத நாடுகளின் எடுத்துக்காட்டுக்கு எங்கேயோ வெளிநாட்டைத் தேடவேண்டியதில்லை. வடக்கில் உள்ள மாநிலங்களைவிடத் தெற்கில் உள்ள மாநிலங்களில்… ஐ.நா சபையின் மனிதவளக் குறியீடு, பெண்களுக்கான அன்றாடச் சுதந்திரம் ஆகியவை மேம்பட்டே உள்ளன. எடுத்துக்காட்டாக, வடக்கில் பெரும்பாலான பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் முடிக்கப்படுகிறது. தெற்கில் உள்ள சில மாநிலங்களில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதைப்போலவே பெண்களின் கல்வியறிவு, வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் வடக்கைவிடத் தெற்கு வெகுவாக மேம்பட்டிருப்பதைக் காணமுடியும். (வடக்கில் வேலைக்குச் செல்லும் பெண்கள் 36 சதவிகிதம், தெற்கில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம்.) இத்தகைய முக்கியமான பொருளாதார, சமூக வேறுபாடுகளுக்குக் காரணமாக, மையமாக அமைவது என ‘வடக்கு – தெற்கு வேறுபாடு’ என நாம் கருதலாம். இப்படிப்பட்ட வியப்பைத் தரும் வேறுபாட்டுக்குப் பின்னால்… ஆரம்பப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத பெரியார் ஈ.வெ.ரா-வின் பங்களிப்பு மகத்தானதாக இருக்கிறது.

பெரியார், இந்தியா முழுக்கப் பார்ப்பன எதிர்ப்புச் செயல்பாட்டாளராக, பகுத்தறிவாளராக, கேட்டார் பிணிக்கும் தகைமை கொண்ட சொற்பொழிவாளராக அறியப்பட்டார். காந்தியின் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்த பெரியார், பின்னர் வாழ்நாள் முழுக்கக் காந்தியை எதிர்ப்பவராக மாறினார். அடக்குமுறைகளுக்கு அஞ்சாத, பிம்பங்களை, மூடநம்பிக்கைகளை விடாமல் தகர்ப்பவராக அவர் இயங்கினார். 1920-களில் பெரியார் திராவிடச் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அவரின் தொண்டர்கள் ஈ.வெ.ரா-வை, ‘பெரியார்’ என அழைத்தனர். மகத்தான மனிதர் எனப் பொருள் தரும் அந்தப் பட்டம், ‘மகத்தான ஆத்மா’ எனப் பொருள் தரும், ‘மகாத்மா’ எனும் காந்தியின் பட்டத்தைத் தாக்கும் நோக்கத்தோடு, ஈ.வெ.ரா-வுக்கு வழங்கி வந்தது. எப்போதும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றாலும், நவீன தமிழ் அரசியலில் தன்னுடைய ஆழமான முத்திரையைப் பெரியார் பதித்திருக்கிறார். அவரின் இயக்கத்தை அடியொற்றி வந்த கட்சிகளே தமிழகத்தை அரை நூற்றாண்டு காலமாக ஆள்கின்றன. தேசிய அளவில், தமிழ் மொழியைத் தூக்கிப் பிடித்து, இந்தி திணிப்பை எதிர்த்த அவரின் அரசியலின் நீட்சியாக விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவின் மொழிப்பன்மையைக் காக்கும் சட்டங்கள் அமைந்தன. சாதி குறித்த அவரின் பார்வை, இந்திய விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் இடஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்துக்கு உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. தன்னுடைய சமகால அரசியல் தலைவர்களில் இருந்து வேறுபட்டு, பெண் விடுதலைக்கான குரலை ஆணாதிக்கத்தின் எந்தச் சுவடும் இல்லாமல்… அவர், கம்பீரமாக எழுப்பினார். பெண்களின் எழுச்சியை அடக்கி ஒடுக்கும் இந்தியக் குடும்பங்களின் ஆணாதிக்கப் போக்கைக் கடுமையாக அவர் சாடினார்.

பெரியார், ஆண்களின் கால்களுக்குக் கீழே கிடந்து தன்னையே தியாகம் செய்யும் பெண்களைக் கற்புக்கரசிகளாகக் கொண்டாடும் வடமொழிக் காப்பியங்களின் முட்டாள்தனத்தைச் சாடினார். பெண் கல்வி, காதல் திருமணங்கள், திருமண உறவு பொருந்தி வராவிட்டால் விவாகரத்து, பெண்களின் சொத்துரிமை எனப் பலவற்றுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண் தன்னுடைய அக வாழ்க்கை, குழந்தை பெறுதல் ஆகியவற்றில் சுயமாக இயங்க வேண்டும் என வலியுறுத்தினார். ‘ஆண்மை அழியவேண்டும்’ என முழங்கிய கட்டுரையில், இப்படி எழுதினார்: ‘எங்காவது, பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, நரிகளால் கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா; எங்காவது, வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா; எங்காவது, பார்ப்பனர்களால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா என்பதை யோசித்தால்… இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால், ஏதாவது ஒரு சமயம்… மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்’.

பெரியார் இயங்கிய பகுதியின் கலாசாரப் பின்புலம், வடக்கைவிட மேம்பட்டதாகப் பெண்கள் சார்ந்து இருந்தது. எண்ணற்ற வீர மங்கைகள், சக்திமிகுந்த பெண் தெய்வங்கள், குறைந்த இனப்பெருக்க அளவு, சில சமூகங்களில் நிலவிய குடும்பக் கட்டுப்பாட்டுக் கலாசாரம் என வடக்கைவிடச் சாதகமான சூழல் தமிழகத்தில் நிலவியது. இவை வடக்கும், தெற்குமான வேறுபாட்டில் முக்கியப் பங்காற்றின எனலாம். என்றாலும், பெரியார் என்கிற முரட்டுத்தனம் மிக்கச் சிலை உடைப்பாளரை, குத்திக் கிழிக்கும் நாவன்மை கொண்டவரை, தகிக்கும் அறிவு கொண்டவரைப் பற்றி மென்மேலும் வாசிக்கையில், என் மனதில் ஒரு கேள்வி சூழ்கிறது. இந்தியாவின் பிற பகுதிகளில் பெரியாரைப் போன்ற தலைவர்கள் எழுந்திருந்தால்… அதே நாட்டில் பெண்களின் நிலைமை இன்னமும் மேம்பட்டதாக இருந்திருக்குமே என்கிற ஆதங்கமே அது.

‘கடவுள் இல்லை… கடவுள் இல்லை…
கடவுள் இல்லவே இல்லை!
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்…
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்…
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!’

– என்கிற வரிகளோடு தன்னுடைய சுயமரியாதை கூட்டங்களைத் தொடங்குவதைப் பெரியார் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரியார் கருஞ்சட்டையில், அடங்காத வெண்தாடியோடு, தூய வெண் மண்டை சுரப்போடு காட்சியளிக்கும் காணொளியைக் காண்கிறேன். அதில், அவருக்கு அருகில்… ஒரு சிறிய நாய் அமர்ந்திருக்கிறது. பிராமணர்கள், நாயை தூய்மையற்ற ஒன்றாகக் கருதுவார்கள். அவர்களை விரட்டுவதற்காக… பெரியார், நாய் ஒன்றை அருகில் வைத்திருப்பதைப்போல எனக்குத் தோன்றுகிறது. பெரியார் எல்லையில்லாத ஆற்றலைப் பல தளங்களில் கொண்டவராகத் திகழ்ந்தார் என்றாலும், அவர் விளங்கிக்கொள்ள முடியாத, குழப்பும் மொழியில் மக்களிடம் உரையாடியவர் இல்லை. எவையெல்லாம் பகுத்தறிவுக்கு எதிரானது என அவர் நம்பிய அனைத்தையும் அவர் கடுமையாகச் சாடினார். சாதி, மதம் என எதுவும் அவரின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

பெரியார், காந்திக்குப் பிறகு 10 வருடங்கள் கழித்துப் பிறந்தார். அவர், ஆடை உற்பத்திக்கு பெயர் பெற்ற கோவை மாவட்டத்தின் ஈரோட்டில் வளர்ந்தார். அவரின் சாதி… விவசாயிகள், வியாபாரிகள் நிரம்பிய இடைநிலை சாதியாகும். செல்வவளம் மிகுந்த வியாபாரியான அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்த பெரியார்…. நல்ல வீடு, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் வேலைக்காரர்கள் என்று செழிப்பான சூழலில் வளர்ந்ததால், இளம்வயதில் பெரிதாக அவமானங்களை எதிர்கொள்ளவில்லை. என்றாலும், அவர் சற்றே புரட்சிகர மனப்பான்மை கொண்டவராக அப்போதே திகழ்ந்தார்.

தனக்கு வடமொழி சொல்லித்தர அப்பாவால் நியமிக்கப்பட்ட சாதுக்கள், பிராமணக் குருக்கள் ஆகியோரை அவர் கேள்விகளால் துளைத்து எடுப்பார். பெரியாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வீட்டுக்கு வருவதையே அவர்கள் நிறுத்திக்கொண்டார்கள். அவர்களின் போதனைகள் பெரியாரை ஈர்க்கவில்லை. எனினும், ஓர் இந்துவாகப் புண்ணியத்தலமாகக் கருதப்பட்ட காசிக்கு அவர் யாத்திரை போனார். 30 வயதை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருந்த பெரியாருக்கு தெளிவையும், திறப்பையும் தரும் காசியின் நிகழ்வுகள் அமைந்தன. அங்கு நடந்தவை குறித்து அவர் அடிக்கடி எழுதவும், பேசவும் செய்தார். தன்னுடைய தந்தை, பிராமணர்களுக்கு என்று நடத்திய பிரமாண்ட விருந்தை எதிர்த்ததால் ஏற்பட்ட பிணக்கில்… அவர் காசிக்குப் போனார். பணம் பிடுங்கும் காசியின் புரோகிதர்களின் போக்கும், பிராமணர் அல்லாதவர் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பும் அவரைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கின. பெரியாரின் சாதியின் காரணமாகக் காசியின் எந்த மடத்திலும் அவருக்கு ஒரு வாய்ச் சோறுகூடக் கிடைக்கவில்லை. பிதிர்க்கடனுக்கு இடப்பட்ட உணவு இலைகளை வழித்துத் தின்னும் கொடிய நிலைக்கு அவர் காசியில் ஆளானார்.

அந்த அனுபவம், பரவலாக நம்பப்படுவதற்கு மாறாக… உடனே பெரியாரை மாற்றிவிடவில்லை. பிராமணர்கள் மீது தீப்பொறிபோல ஒரு தனிப்பட்ட கோபத்தை, அது பெரியாரின் மனதில் விதைத்தது. தென்னிந்தியா குறித்துச் சிறப்பான ஆய்வுகளை மேற்கொண்ட கேம்பிரிட்ஜ் பேராசிரியரான டேவிட் வாஷ்ப்ரூக் ஒன்றை கவனப்படுத்துகிறார். 1880-களில் இருந்தே சென்னையின் ஆளுமைகள்… இந்து மத நம்பிக்கைகளை நவீனம், அறிவியல் பார்வையோடு இணைக்க முடியுமா என்று தொடர்ந்து விவாதித்தனர். அன்னிபெசன்ட்டின் தியாசபிகல் இயக்கம், அதற்கான வாய்ப்பை வழங்கியது; கிறிஸ்தவ மிஷனரிக்களின் மதமாற்ற முயற்சிகளைத் தர்க்கரீதியாக அது எதிர்கொண்டது; பிராமணிய இந்து மதத்துக்கு அறிவியல் விளக்கத்தை அந்த இயக்கம் தந்தது; இது, தெற்கின் ஆதிக்க சாதி ஆட்களுக்குக் கடவுள் காட்டிய வழியாகத் தோன்றியது; தங்களுடைய சாதி, மத நம்பிக்கைகளை நவீனப்போர்வையில் மறைத்துக்கொள்ள வசதியான வாய்ப்பாக அன்னிபெசன்டின் இயக்கம் அமைந்தது. ஆதிக்கச் சாதியைச் சேராத பெரியாருக்குக் காப்பாற்றிக்கொள்ள எந்தச் சாதிப் பெருமையும் இல்லை. ஆகவே, முன்முடிவுகள் இல்லாமல் பகுத்தறிவோடு இயங்கினார். ‘எனக்குக் கடவுளோடு எந்தத் தகராறும் இல்லை. அவரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை எனப் பெரியார், எள்ளல் ததும்பப் பேசுவார்’ என்கிறார் தமிழகத்தின் மிக முக்கியமான பண்பாட்டு வரலாற்று ஆசிரியரான ஆ.இரா.வேங்கடாசலபதி. பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றை தற்போது சலபதி எழுதிக்கொண்டிருக்கிறார்.

பெரியார் தொடர்ந்து பகுத்தறிவோடு இயங்குவதற்கு அவரின் பொருளாதாரச் சூழலும் உதவியது. மகாவீரர், புத்தர் போலப் பெரியாரும் பிராமணியத்தைக் கடுமையாக எதிர்த்தார். அவர்களைப்போலப் பெரியாரும் செல்வவளம் மிகுந்த குடும்பத்தில் இருந்தே எழுந்தார். பெரியாரும் புத்தர், மகாவீரரைப்போல மேல் சாதி அடுக்கில் இருந்து எழுந்து மக்களைப் பிளவுபடுத்தும் இந்தியாவின் பழைமையான சாதி அமைப்பைச் சாடினார். பெரியாரைப்போலப் பிராமணர்களை, அவர் காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் சாடியிருந்தால் ஆதிக்கச் சாதியினர் கொன்றிருப்பார்கள்.

1920 – 1930-களில் பெரியார் தெருக்களில் இறங்கி, எதிர்க்குரல் எழுப்பும் தலைவராக இருக்கவில்லை; காசியில் இருந்து திரும்பியதும் விடுதலைப் போராட்ட அலையில் அவர் ஈர்க்கப்படவும் இல்லை. மாறாக, திருமணம் செய்து குடும்பஸ்தரான பெரியார், கோவைப் பகுதியில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக, தன்னுடைய குடும்பத் தொழிலை… தன்னுடைய தொழில் திறமையால் மாற்றிக் காட்டினார். நிர்வாகத் திறமைக்குப் பெயர் பெற்றிருந்த பெரியார், 1918-ல் ஈரோடு மாநகராட்சியின் தலைவராகச் சிறப்பாகச் செயலாற்றினார். இந்தியாவில் சமூகரீதியாக மிகவும் முன்னேறிய பகுதிகளில் கேரளாவின் கோட்டயம் மாவட்டம் முதன்மையானதாகும். கல்வியறிவு 90 சதவிகிதத்தைத் தாண்டிய மாவட்டமாக அது உள்ளது; புகையிலை அற்ற மாவட்டமாகத் தன்னைச் சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிவித்துக் கொண்டது. இந்த மாவட்டத்தின் வைக்கம் எனும் நகரில், சாலைகள் சந்திக்கும் பகுதியின் மத்தியில்… மரத்தூண்களால் ஆன ஒரு சிவன் கோயில் உள்ளது. இதை நம்பூதிரி பிராமணர்கள் கட்டுப்படுத்தி வந்தார்கள். இந்தச் சாலைகளே, 40 நெருங்கிக் கொண்டிருந்த பெரியாரை அரசியலை நோக்கி செலுத்தியது.

ல நூறு ஆண்டுகளாகத் தீண்டத்தகாதோர் எனக் கருதிய மக்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர் ஆகியோரை மகாதேவா ஆலயத்துக்குள்ளும், அதைச் சுற்றியிருக்கும் சாலைகளிலும் நுழையவிடாமல் நம்பூதிரிகள் தடுத்தார்கள். 1920-களில், ‘எல்லாக் கோயில்களையும் அனைத்து இந்துக்களுக்கும் திறந்துவிட வேண்டும்’ என்று திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரிடம் ஒடுக்கப்பட்ட சாதியினர் போராடினார்கள். தங்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் கிறிஸ்தவ – இஸ்லாம் மதங்களுக்கு மாறிவிடுவதாக அவர்கள் அச்சுறுத்தினர். இந்தப் போராட்டங்களின் குவிமையமாக வைக்கம் ஆலயம் மாறியது. 1924-ல் இந்தப் போராட்டத்தை நோக்கி காந்தி ஈர்க்கப்பட்டார். முதன்முறையாகத் தீண்டாமைக்கு எதிரான முழுமையான பொதுக் கிளர்ச்சியைக் காந்தி வைக்கத்திலேயே தொடங்கினார்.

இதே காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பிராமணர் அல்லாத தலைவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. காங்கிரஸ், பிராமணர்கள் கட்சி என்கிற வாதத்தை எதிர்கொள்ள…. பிராமணர் அல்லாத தலைவர்களை அந்தக் கட்சி தேடிக்கொண்டு இருந்தது. செல்வவளம் மிகுந்த, நம்பிக்கை, சாமர்த்தியம் கைவரப்பெற்ற பெரியாரை வைக்கம் போராட்டத்துக்கு முன்னால்… காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்கள் அந்தக் கட்சியின் தலைவர்கள். வைக்கம் போராட்டத்தை வழிநடத்த பிராமணர் அல்லாத ஒரு தலைவர் தேவைப்பட்டார். பெரியார், ‘வைக்கம் வீரர்’ ஆனார்.

பெரியார், தேசிய அரசியலில் நம்பிக்கையோடு களம் புகுந்தார். தன்னைப்போலவே இடைநிலை சாதியான காந்தி காங்கிரஸ் கட்சியினைக் கட்டுப்படுத்தும் பிராமணர்களை எதிர்க்கும் தன்னுடைய திட்டத்தில் கைகோப்பார் என பெரியார் நம்பினார். விடுதலையுணர்வும், சமத்துவமும் இணைந்த போராட்டமாகக் காங்கிரஸின் போராட்டம் மாறும் என்று அவர் கனவு கண்டார். பழைமை மிகுந்திருந்த கேரளா முழுக்கப் பயணம் செய்த பெரியார், ‘கோயில் தெருக்களை மட்டும் இப்போதைக்குத் திறந்தால் போதும்’ எனும் காந்தியின் கருத்தை ஏற்க மறுத்தார். போராட்டக்காரர்களின் கோரிக்கையான கோயில் கதவுகளை அனைவருக்கும் திறந்துவிட வேண்டும் என்பதை அவர் தீவிரமாக ஆதரித்தார். கோயில்களில் வழிபடுபவர்கள் மூடர்கள் என்று சொன்னாலும் அவர்களின் சமத்துவ உரிமைக்காகப் பெரியார் குரல் கொடுத்தார்.

பெரியார் சிறைப்பட்டு இருந்தபோது, நம்பூதிரிகளோடு காந்தி மென்மையாகச் சமரசம் பேசினார். ஒடுக்கப்பட்ட சாதியினர், ‘தங்களின் கர்ம வினைப் பயனை அனுபவிக்கிறார்கள். ஆகவே, அவர்களைக் கோயிலுக்குள் விட வேண்டாம்’ என்று ஒரு நம்பூதிரி சொன்னபோது, ‘கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு அவர்களுக்குத் தண்டனை தர நாம் யார்’ என காந்தி வினவினார். 1925-ல் ஒரு சமரசத்துக்குத் திருவிதாங்கூர் மகாராணி ஒப்பினார். கோயிலைச் சுற்றியிருக்கும் சில சாலைகள் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குத் திறக்கப்படும். அதே சமயம், கோயில் வளாகம், உட்பிரகாரம் ஆகியவற்றுக்குள் அவர்களுக்கு அனுமதி இல்லை என்பதே அது. கோயில் நுழையும் கனவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 1936-ல்தான் கிட்டியது.

காங்கிரஸ் கட்சிக்கு வைக்கம், சத்தியாக்கிரகம் மாதிரி போராட்டம் ஆனது. பழைமையின் கதவுகளைக் கட்டுடைத்த போராட்டம் அது எனக் காங்கிரஸ் மகிழ்ந்தது. மேல்மட்டத்தில் மக்களை மோசம் செய்யும் பணி அது என்பது பெரியாரின் கருத்து. காந்தி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை விட்டுகொடுத்துவிட்டார் என பெரியார் கருதினார். அடுத்த இரண்டு வருடங்களில்… தன்னுடைய வாழ்நாள் எதிரியாக மாறப்போகும் காந்தி, காங்கிரஸ் ஆகியவற்றை விட்டு விலகினார். குடும்பப் பணத்தைக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தைத் திராவிட மொழிகள் பேசப்படும் தெற்குப் பகுதியில் தொடங்கினார். அவரின் கொள்கைகள், செயல்கள் பெரும்பாலும் காந்திக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

காந்தியும், அவரின் தொண்டர்களும் வெள்ளை உடையை அணிந்தார்கள் என்றால்… பெரியார், தன்னுடைய தொண்டர்களைக் கருஞ்சட்டை அணியச் செய்தார்; காந்தி, தன்னுடைய தொண்டர்களின் மத நம்பிக்கைகளைக் கருத்தில்கொண்டே பேசினார்; பெரியார், தன்னுடைய பேச்சை கேட்பவர்களை முட்டாள் என்று அழைத்தார்; அவர்களின் நம்பிக்கைகள், சாதிச் சடங்குகள் ஆகியவற்றை அவமானப்படுத்தினார்; அந்த மக்களின் கடவுள், சிலைகள் ஆகியவற்றைச் செருப்பால் அடிப்பதாக மிரட்டினார். காந்தி, ஒரு தேசிய இயக்கத்துக்குக் கனவு கண்டார் என்றால்… பெரியார், தனித் திராவிட நாட்டைத் தனது இலக்காகக் கொண்டார்.

சுயமாக எழும் எண்ணற்ற தலைவர்களைப்போலப் பெரியாரின் கருத்தாக்கங்களுக்கான வேர்களைத் தேடுவது வீணானது. பெரியாரின் கடிதங்கள், குறிப்புகள் ஆகியவற்றோடு பல ஆண்டுகளைச் செலவிட்ட பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி, பெரியார் தன்னுடைய சொந்த கருத்துக்கள் அல்லாதவற்றைக் குறிப்புகளோடு வெளியிட்டதைக் கவனப்படுத்துகிறார். ‘பெரும்பாலான கருத்துக்கள் பெரியாரின் அசலான சிந்தனைகள்’ என்கிறார், அவர். பெண்ணுரிமையில் தீவிரத்தன்மை கொண்டவராக இருக்க… ஒரு புத்தகமே பெரியாருக்கு தூண்டுகோலாக அமைந்தது. 1927–ல் வெளிவந்த, புத்தகம் ஒன்றால் பெரியாரின் சிந்தனை செதுக்கப்பட்டது. காந்தியும், காங்கிரஸ் கட்சியும் வெறுத்த கேத்தரின் மேயோவின், ‘மாதர் இந்தியா’ நூல் அது.

அந்த நூல் எப்படி இந்திய வாழ்க்கை முறை, குறிப்பாக இந்து பாரம்பர்யம் பெண்களைச் சுரண்டுகிறது என மேயோ விளக்கினார். மேயோ, தன்னுடைய மறுப்பு எழுப்ப முடியாத வாதத்துக்கு ஆதரவாகக் குழந்தைத் திருமண எண்ணிக்கை, பாலியல் வியாதிகள், விதவைகள் நடத்தப்படும் விதம், 14 வயதுக்கு முன்னால் திருமணம் செய்வதை நியாயப்படுத்தும் பெண்ணின் பெற்றோர் எனப் பலவற்றைக் குறித்து அவர் பதிவுசெய்தார். சமூகச் சீர்திருத்தத்தைச் சில காங்கிரஸ் தலைவர்கள் வேகமாக முன்னெடுத்தபோது மெதுவாகப் பயணிக்கலாம் எனச் சில தலைவர்கள் கருதினார்கள். மேயோ, பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு வேலை பார்த்தார் என்று இப்போதுதான் தெரியும். பெண்களைக் கண்ணியமாகக் காக்கும் மதம் இந்து மதம் என்று காங்கிரஸ் தலைவர்கள் மேயோவின் புத்தகத்தைத் துச்சமாகக் கருதினார்கள்.

பெரியார், ‘மதர் இந்தியா’ நூலின் கருத்துகளை வேறு விதமாக அணுகினார்; பெரியார், இந்து மதத்தின் மீதான இத்தகைய தாக்குதலில் ஆனந்தமடைந்தார்; அதே சமயம், ஐரோப்பாவில் எழுந்த பெண்ணிய இயக்கங்களைக் குறித்துக் கவனமாக பெரியார் தெரிந்துகொண்டார். அதன் விளைவாக, பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்த அவரின் புரிதல் விரிவடைந்தது. 1920-களில் இருந்தே சுய மரியாதை இயக்கத்தின் பரப்புரையில் இந்தியப் பெண்களின் உரிமைகள் முக்கியமான இடத்தைப் பெற்றன. ஒளிவு மறைவில்லாத, வெற்று அலங்காரங்கள் அற்ற, கொந்தளிப்பை பெருக்கெடுக்கச் செய்யும் தன்னுடைய உரைகளாலும், ‘விடுதலை’ இதழ் எழுத்துகளாலும் பெண்ணுரிமையைப் பெரியார் உயர்த்திப் பிடித்தார்.

 

நூற்றாண்டுகளாக வழங்கிவந்த தமிழ் நாட்டுப்புறப் பாடல்களில், சமயங்களில் பெண்கள் ஆண்களின் ஏவலுக்கு இயங்கும் அடிமைகளாக, அவர்களின் குழந்தைகளை வளர்க்கும் ஆயாக்களாக மட்டும் தாங்கள் பார்க்கப்படுவதை எதிர்த்துப் பாடினார்கள். மணமான பெண்கள், கைம்பெண்கள் ஆகியோருக்குச் சொத்தில் உரிமையில்லாத கொடுமையைப் பல்வேறு பாடல்கள் பதிகின்றன. (காளைபோல மகன் ஒருத்தன் கருப்பையில பூத்திருக்கலாம்… கண்மணியே, கட்டிவெச்ச சொத்தெல்லாம் கலையாம வந்திருக்கும், மதுரை மன்றத்தில நியாயம்தானே கிடைச்சிருக்கும் கண்மணியே). இத்தகைய மோசமான அடக்குமுறைகளின் பின்னணியில் ஓரளவுக்குத் திருமணத்துக்குப் பங்கிருப்பதைப் பெரியார் கண்டார்; திருமணங்கள் பெண்களை அடிமைப்படுத்தும் அயோக்கியமான வேலையைச் செய்வதை அவர் சாடினார்; ஒரே சாதியின் மூத்தோர்களிடையே நிகழும் அன்புக்கு இடமில்லாத பண்டமாற்று என இவற்றைப் பார்த்தார். இந்தத் திருமணங்களில் பெண்களின் (பெரும்பாலும் பெண் குழந்தைகள்) கருத்து, கனவுகளுக்கு இடமில்லை.
பெரியாரின் அசரவைக்கும், போலிப் பூச்சுகள் இல்லாத மேடைப்பேச்சு அவரின் இயக்கத்தை நடுத்தர வர்க்கத்தைத் தாண்டி அடித்தட்டு மக்களிடமும் கொண்டுபோய்ச் சேர்த்தது. நடுத்தர வர்க்கம் அவரின் பகுத்தறிவுக் கொள்கைகளை எளிதில் உள்வாங்கியிருக்கும். எனினும், பெரியார் அடித்தட்டு மக்களை நோக்கி தன்னுடைய அரசியலை கவனப்படுத்தினார். தமிழகத்தில் 1928 அல்லது 1929-ல் தொடங்கி… பெரியாரின் ஆசியோடு ஊரகப் பெண்கள், ஆண்கள் செய்த கலப்புத் திருமணங்கள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகின. இந்தத் திருமணங்கள் ஐயர் இல்லாமல், வடமொழி மந்திரங்கள் இல்லாமல் நடந்தேறின. பல நாட்கள் நடக்கும், அயர்ச்சியைத் தரும் பாரம்பர்ய திருமணங்களைப்போல அல்லாமல் விரைவாக, எளிமையாகப் பெரியாரின் வழிகாட்டுதலில் இந்தத் திருமணங்கள் நடைபெற்றன. தேவையில்லாமல் திருமணம் என்கிற சடங்குக்கு வாரியிறைக்கும் பணத்தைத் தம்பதிகளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளின் கல்விக்குச் செலவு செய்யலாம் என பெரியார் வலியுறுத்தினார். அதே சமயம், இந்தச் சுயமரியாதை திருமணங்கள், கணவன் – மனைவி இடையேயான கலவி என்பது வெறும் பிள்ளைப்பேறுக்காக மட்டுமே எனப் போலியாகப் பேசவில்லை.

அதிகாரப்பூர்வமாகச் சுயமரியாதை இயக்கத்துக்கு ஐந்து குறிக்கோள்கள் இருந்தன: கடவுள் ஒழிய வேண்டும்; மதம் ஒழியவேண்டும்; காந்தி ஒழியவேண்டும்; காங்கிரஸ் ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழியவேண்டும். ஆணாதிக்கத்தை ஒழிப்பது இரண்டாம்பட்சமாக ஆரம்பகாலத்தில் இருந்தது. காலப்போக்கில், மணப்பெண் – மணமகன் இருவரின் சமத்துவமும் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்ட சுயமரியாதை திருமணங்கள் அந்த இயக்கத்தின் அடையாளங்கள் ஆகின. பிராமணர்கள் நடத்திய குடும்பச் சடங்குகளின் மீது கட்டமைக்கப்பட்டு இருந்த இந்து மதச் சமூகத்தின் அடித்தளத்தை இவை அசைத்துப் பார்த்தன. இந்தத் திருமணங்கள் பெரியாரின் கொள்கைகளைக் கிராமங்கள்தோறும் பரப்பின; விளக்கின. இவருடைய பகுத்தறிவு விவாதங்கள், ஆண் – பெண் இடையே ஒளிவுமறைவற்ற உரையாடல்கள் ஆகியவற்றுக்கும் உதவின.

பெரியாரின் பார்வையில் சாதியை நிலைநிறுத்தும், ஏற்பாட்டுத் திருமணங்கள் பெண்களிடையே நிலவும் பரவலான கல்வியறிவு இன்மையைப் பலப்படுத்தி, நீடிக்கச் செய்தன. அறியாத அயலாரிடம் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த பெரியவர்கள்… தங்களுடைய பெண் முட்டாளாக, உதவாக்கரைகளாக இருப்பதில் கவனமாக இருந்தார்கள் என்பதை பெரியார் சுட்டிக்காட்டினார். இதற்கு மாறாகப் பெண்கள் கல்வியிலும், விளையாட்டிலும் தேர்ச்சிப் பெறவேண்டும் என அவர் முழங்கினார். ‘மணப்பந்தல்களில் பெண்களை அடைக்காமல்… மைதானங்களில் அவர்களை இயங்கவிட வேண்டும்’ என்றார். பெண்கள் வளர்ந்த பின்பு, தங்களுக்குப் பிடித்தமான ஆணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்; அதேபோல, தாங்கள் எப்போது குழந்தை பெறவேண்டும் என்பதைத் தாங்களே முடிவு செய்ய வேண்டும் என்று பெரியார் அறைகூவல் விடுத்தார். பெரியார் விடுத்த அறைகூவல்… இன்றைக்கு இருக்கும் கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு பிரசாரங்கள் போன்றது அல்ல. அவர்… பெண்கள், ஆண்களின் விடுதலை சார்ந்து பேசினார். பாலியல் வாழ்க்கை, வாழ்வின் பிற அங்கங்களில் ஆணும், பெண்ணும் தங்களுக்கான விடுதலைவெளியை கொண்டிருக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அவர் இயங்கினார்.

தமிழ்ப் பத்திரிகைகள், ஒழுக்கக்கேட்டை வளர்ப்பதற்காகப் பெரியாரைச் சாடின. பெரியார், ஒரு திருமணத்தில் பேசியபோது, அசராமல் இப்படிப் பதில் தந்தார்: ‘மனைவி, கணவனை மதிக்க வேண்டும் என்றால்… ஏன் கணவன், மனைவியை மதிக்கக் கூடாது? மனைவிதான் புகுந்த வீட்டின் உறவுகளை மதிக்க வேண்டுமென்றால்… ஏன் மனைவி வீட்டு உறவுகளை, கணவன் மதிக்கக் கூடாது? மனைவி, கணவனுக்குச் செய்வதை… கணவன், மனைவிக்குத் திருப்பிச் செய்ய முடியாது என்றால்… பெண் என்பவள் வீட்டு வேலைக்கும், உடல் சுகத்துக்கும் மட்டுமே ஆனவள் என்று ஆகவில்லையா? இப்படிப்பட்ட திருமணங்கள் நாட்டில் அரை நொடிகூட நீடித்திருக்க அனுமதிக்கக் கூடாது’.

1920-களில் சோவியத் ரஷ்யாவில் நிகழ்ந்த சமூகச் சோதனைகளில் பெரியார் ஆர்வம்கொண்டார். 1931-ல் ஐரோப்பாவுக்கு பெரியார் பயணம் செய்தார். அங்கே, ஒரு வருடகாலம் செலவழித்த பெரியார்… மைய அரசியலைவிட்டு அப்போது விலகியிருந்தார். பெரியார், பெர்லினில் உள்ள நிர்வாண கிளப்களில் ஆனந்தமாக நேரத்தைச் செலவழித்தார். தன்னுடைய அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றில் அந்தப் படங்கள் இடம்பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அது ஏற்கப்படவில்லை. ஐரோப்பிய பயணத்துக்குப் பின்னர், பெரியார்… அறிவியல், தொழில்நுட்பம், கருத்தடை ஆகியவை இந்தியர்களின் முன்னேற்றத்துக்குத் தேவை என்கிற தன்னுடைய நிலைப்பாட்டில் மேலும் உறுதிபூண்டார்.

சோவியத் அரசின் விவாகரத்துச் சார்ந்த சட்டங்கள், குழந்தைகளுக்கு அரசு தரும் நிதியுதவி ஆகியவை எப்படிக் குடும்பத்தின் பண்பை மாற்றுகின்றன; அவை, எப்படிக் குடும்பத்தின் மீதான சார்பைக் குறைக்கின்றன என்பனவற்றைப் பற்றிக் குறிப்பாக ஆர்வம் கொண்டார். தொழிலாளர்களுக்கு நிறுவனத்தில் பங்கு தரும் திட்டங்கள், கூட்டு நிறுவனங்கள் முதலிய சோவியத் பொருளாதாரக் கருத்தாக்கங்களால் பெரியார் ஈர்க்கப்பட்டார். தன்னுடைய குடும்பத் தொழில்களில் அவற்றை அமல்படுத்தினார். தொழிலாளிகளுக்குச் சம்பளம் தருவதற்குப் பதிலாக லாபத்தில் பெரியார் பங்கு தந்தார்.

அரசியல் பதவிகளுக்கு ஆசைப்படாமல் சமூகத்தின் மனப்போக்கை மாற்றி, பொதுப் புத்தியை செழுமைப்படுத்தும் முயற்சிகளில் பெரியார் தன்னுடைய வாழ்நாள் எதிரியான காந்தியை பின்பற்றினார். 1948-ல் பெரியார், தன்னைவிட மிகவும் இளையவரான மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டபோது… அவரின் தொண்டர்கள் படை பெருமளவில் குறைந்தது. சில சுயமரியாதை இயக்கத்தினர், பெரியாரின் திருமணத்தைச் சுற்றி ஒரு சூழ்ச்சியைக் கட்டமைத்து, திராவிடர் கழகத்துக்கு மாற்றாக… தி.மு.க-வை ஏற்படுத்தினார்கள். பின்… அதிலிருந்து பிரிந்து, அ.தி.மு.க உருவானது. இந்த இரண்டு கட்சிகளும் அரை நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் கோலோச்சுகிறது.

எனினும், பெரியார் விடுதலைக்குப் பிந்தைய இந்தியத் தேர்தல் அரசியலில் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கைச் செலுத்தினார். பல ஆண்டுகளுக்கு வேட்பாளர்களுக்கு நட்சத்திர பரப்புரையாளராக அவரே திகழ்ந்தார். அவரின் வெகுமக்கள் ஈர்ப்பு… அவரை, ‘கிங்மேக்கராக’ வைத்திருந்தது. ஆகவே, அரசின் மீதும், சட்ட உருவாக்கத்திலும் குறிப்பிடத்தகுந்த செல்வாக்கை அவர் எந்தப் பொறுப்புமின்றிச் செலுத்த முடிந்தது அவருக்கு ஏற்றதாக இருந்தது.
டாக்டர் அம்பேத்கரைப்போலப் பிராமணியம் மீதான தன்னுடைய விமர்சனத்தை இந்தியா முழுமைக்கும் உரியதாகப் பெரியார் முன்வைக்கவில்லை. மாறாக, அவரின் அரசியல் திராவிடப் பண்பாட்டில் ஊறியதாக இருந்தது. தமிழ்ப் பண்பாட்டில் அவரின் கருத்துக்கள் பரவ ஆரம்பித்த பின்பு… புனிதங்களைப் பொசுக்கிய பெரியாரே, புனிதப் பசுவாக மாற்றப்பட்டுவிட்டார். பெரியாரை, 20 வருடங்களுக்கு முன் ஓரங்கட்டப் பார்த்த அரசியல்வாதிகளே, அதற்குப் பின்னால்… வேறு வகையில் நடந்துகொண்டார்கள். பெரியார் 1973-ல் மரணமடைந்தார். பேராசிரியர் டேவிட் வாஷ்ப்ரூக், ‘பெரியாரின் வழித்தோன்றல்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் அவர் வெறுக்கக்கூடிய செயல்களையே மேற்கொள்கிறார்கள்’ என்கிறார்.

தெற்கில், பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட பெரியாருக்கு, அவரின் பங்களிப்பை மிஞ்சிய புகழ்மாலை சூட்டப்படுவதாக விமர்சிக்கிறார்கள், மக்களியல் அறிஞர்கள் மற்றும் அறிவியல் – மருத்துவ வரலாற்று ஆசிரியர்கள். அவர்களின் கவலை நியாயமான ஒன்றே ஆகும். தென்னிந்தியப் பெண்களின் உடல்நலம், மேம்பட்ட வாழ்க்கை ஆகியவை பெரியார் பிறப்பதற்கு முன்பே நிலவிய காரணிகளின் பங்களிப்பாலும் எழுந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம், உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில்… தமிழகத்தில், பெண்கள் ஈன்றெடுத்த குழந்தைகளின் விகிதம் குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்திருந்ததை தரவுகள் காட்டுகின்றன. இதற்குப் பெரியாரின் களப்பணியும், குடும்பக் கட்டுப்பாடு சார்ந்த பரப்புரையும் முக்கியப் பங்காற்றின என உறுதியாகச் சொல்லலாம். வேறு எந்தப் பங்களிப்பையும் அவர் தரவில்லை என்று விமர்சகர்கள் சொன்னாலும், பெரியார் மக்களைப் புரட்சிகரமான கருத்துகளால் எதிர்கொண்டு, அவர்களின் மனப்போக்கை மாற்றினார். 50 வருடங்களாகப் பெருமளவு மக்கள் செல்வாக்கை நகர் மற்றும் கிராமப் புறங்களில் பெற்ற பெரியாரின் செயல்பாட்டுக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் தொடர்பே இல்லை என்று வாதிடுவோருக்கு பெரியாரின் வார்த்தையிலேயே பதில் சொல்லலாம். ‘வெங்காயம்!’

தமிழகத்தில் பெண்களின் சமூக வளர்ச்சி தேக்கமடைந்துவிட்டதாகத் தெரிகிறது. அதன் மகத்தான கடந்தகாலச் சாதனைகளைத் தாண்டி தற்போது தொய்வைச் சந்தித்திருக்கிறது. காலங்காலமாக ஏழ்மையில் உழன்ற வட கிழக்கு மாநிலமான சிக்கிம், கடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், பெண்கள் கல்வியறிவில் தமிழகத்தைக் முந்தியிருக்கிறது. 2007 முதல் ஆண்களைவிடப் பெண்கள் அதிகளவில் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். ஆண் – பெண் வேறுபாடு குறைவது, பள்ளிக்குச் செல்லும் ஆண் – பெண் விகிதாச்சாரம் மேம்படுவது ஆகியவற்றுக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. எனினும், அவற்றில் முக்கியமானது நீடித்த, ஓய்வில்லாத, தீரா வேட்கை கொண்ட பரப்புரைகளும் ஆகும். பெண்ணுரிமைகளுக்காக இயங்குபவர்கள் தேர்தல்கள் வருகிறபோது மட்டும் உரிமை முரசம் கொட்டாமல் தொடர்ந்து பெரியார்போல மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். நீடித்த உரையாடல், பரப்புரை உடனே வெற்றியைத் தராது என்றாலும்… அது. காலப்போக்கில் இந்தியப் பெண்கள் குடியரசில் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.’’

நன்றி விகடன் இணையதளம்

You may also like...