வினா விடை

• புதிய வரி விதிப்பு முறையை நிறுத்திவிட்டோம்; வரி செலுத்துவோர், எது நன்மை பயக்கும் என்று நினைக்கிறார்களோ, அந்த முறையை தேர்வு செய்து கொள்ளலாம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அப்படியா, வரி செலுத்தாமல் இருப்பதுதான் எங்களுக்கு நன்மை பயக்கும் திட்டம், ஓகே வா?

• தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்போம் – ஓ பன்னீர்செல்வம்

கட்சி, சின்னத்தை மீட்க முடியல, இப்போ கச்சத்தீவுக்கு வந்துட்டீங்க, சென்னை உயர்நீதிமன்றத்துல அடுத்த வழக்குக்கு தயாராகிட்டீங்க..

• சுங்கக் கட்டண உயர்வை திடீரென ஒன்றிய ஆட்சி நிறுத்தம் – செய்தி

‘ஓட்டு’க்காக ‘கேட்டு’ திறக்குதுன்னு ‘நாட்டுக்கு’ தெரியும்.

• இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு என்ற ‘பிஞ்சு போன செருப்பை’ இப்போதும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். – அண்ணாமலை
இப்படியே பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சமாதி கட்டுவதை விரைவுபடுத்துங்க.

• இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் 30 ஊர்களுக்கு சீன அரசு சீன மொழியில் பெயர் சூட்டியுள்ளது – செய்தி

கொஞ்சம் பொறுங்க… சீனாவுக்கு அமலாக்கத்துறை – வருமான வரித்துறையை அனுப்பி மீட்டுக் கொண்டுவருவோம். இதுக்கு ‘நாங்க கேரண்டி’

• கலைஞர் நினைவிடத்தை தேர்தல் ஆணையம் மூட வேண்டும், அங்கே கலைஞர் வரலாறு ஒளிபரப்பாகிறது. – தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

எங்கள் ஆட்சியில் அனுமதி மறுத்த அந்த இடத்தை இப்போதாவது மூடி வைத்து பார்க்கலாம் என்ற அற்ப ஆசை தான்.

• என் இரண்டு பிள்ளைகளையும் ஆங்கில வழிக் கல்வியில் தான் சேர்த்துள்ளேன். தகுதியான தமிழ்ப்பள்ளி இங்கே எங்க இருக்கு – சீமான்

சரி விடுங்க.. கேட்டா எங்க அண்ணன் பிரபாகரன் எனக்கு இப்படித்தான் ஆணையிட்டார்னு சொல்லிடுவார்.

• கச்சத்தீவு வரலாறுகளை அண்ணாமலை ‘ஆர்.டி.ஐ’ மூலம் பெற்றார் – செய்தி

சர்வதேச பிரச்சனைகளை எல்லாம் கேட்டு வாங்கிடலாம். ஆனா ‘தேர்தல் பத்திரம்’ ‘பிரதமர் கேர்’ போன்ற தேசப் பாதுகாப்பு பிரச்சனைகளைத் தான் ‘ஆர்.டி.ஐ’ மூலம் கேட்க முடியாது!

• ஆளுநரின் சுகபோக வாழ்க்கையை விட்டுவிட்டு இப்போது தேர்தலில் நின்று சாலை ஓரக்கடைகளில் உணவு அருந்துகிறேன் – தமிழிசை பிரச்சாரம்

காந்தி, பகத்சிங் தியாகத்தையும் மிஞ்சிட்டீங்க மேடம்; கவலைப்படாதீங்க, மக்கள் உங்களை மீண்டும் சுகபோக வாழ்க்கைக்கு திருப்பி அனுப்பிடுவாங்க…

• பாமகவை அதிமுக கடுமையாக தாக்கி பிரச்சாரம் – செய்தி

இது பாமகவுக்கான எங்கள் கூட்டணி தர்மம், பாஜகவுக்கு வேறு தர்மம்; பண்பாடு கருதி எதிர்க்க மாட்டோம், கூட்டணி தர்மத்தை நாங்க கூறு போட்டு வெச்சிருக்கோம்! ஒற்றை விரலில் ஓங்கி அடிங்க…
• ராமன் கோயில் திறப்பு தேதியை ராம பகவான் தான் முடிவு செய்தார் – மோடி பேட்டி

தேர்தல் தேதி – வேட்பாளர் – தொகுதி – தேர்தல் அறிக்கை எல்லாவற்றையும் ஸ்ரீ ராம பகவான் தான் முடிவு செய்திருப்பார் போல. பாவம் அவருக்குத்தான் ஓட்டு இல்ல..

பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

You may also like...