தலையங்கம் தொடர்வண்டித் துறையில் ’நவீனத் தீண்டாமை’
ஒடிசா இரயில் விபத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. மிகக் கொடூரமான இரயில் விபத்தாக இது அமைந்துவிட்டது. 300க்கும் மேற்பட்ட உயிர்கள் இதுவரை பலியாகி விட்டன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர்வண்டி சமூகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. சமூகத்தினுடைய மக்களின் அசைவியக்கங்களை அது துரிதப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் சாதி, மத, வர்ணாசிரம பேதம் இல்லாமல் அனைத்து சாதியினரையும் அனைத்து மதத்தினரையும் சுமந்து செல்கின்ற ஒரு வாகனமாக அது மாறியது.
பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய தொடர் வண்டி மற்றும் நவீன தொழிற்சாலைகள் காரணமாக இந்தியாவில் தேக்கமுற்றுக் கிடந்த சமுதாயம் உடையத் தொடங்கியது என்றார் காரல் மார்க்ஸ். தேக்கமுற்ற சமுதாயம் என்பதை விளக்க வேண்டுமானால் பார்ப்பன அதிகார கட்டமைப்பு சமுதாயம் உடையத் தொடங்கியது என்பதே ஆகும். இந்த பார்ப்பன அதிகார கட்டமைப்பு சமுதாயத்தினால் உலகில் ஏனைய நாடுகளில் நிகழ்ந்ததைப் போல இங்கே நில உடமை முதலாளித்துவ சமூகங்கள் உருவாகவில்லை. மார்க்சிய மொழியில் கூற வேண்டுமானால் உற்பத்தி உறவுகள் பார்ப்பனர்களுக்கு சாதகமாகவே இருந்தன, இதுவே சமூக மாற்றத்தை தேங்க வைத்தது. தொடர்வண்டி அஞ்சல் துறை மற்றும் நவீன தொழில் சாலைகளை பிரிட்டன் அறிமுகப்படுத்திய போது தான் இந்த தேக்கம் உடைய தொடங்கியது. தொடர் வண்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது பார்ப்பனர்கள் தங்களுக்கென்று தனிப்பெட்டிகளை சேர்க்க வேண்டும் என்று பிரிட்டிஷாரிடம் மனு கொடுத்தனர், அதை பிரிட்டிஷார் ஏற்கவில்லை. தொடர்வண்டி நிலைய உணவு விடுதிகளில் பார்ப்பனருக்கு தனி சாப்பாட்டு அறைகள் நீண்ட காலம் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டது, பெரியார் நடத்திய போராட்டத்தினால் தான் இந்த பேதம் ஒழிக்கப்பட்டது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ”நல்ல தம்பி” திரைப்படத்தின் கிந்தன் கதை உரையாடலை இணைத்தார். அதில் மரக்கட்டையான தொடர்வண்டி சாதி, மதம் பார்க்கவில்லை. அனைவரையும் ஏற்றிச் சென்றது, மனிதர்கள் தான் பார்க்கிறார்கள் என்ற கருத்தைப் பாடலாக பாடுவார்.
ஆனால், சமத்துவத்தைக் கொண்டு வந்த அந்த இரயில் பிற்காலத்தில் சமத்துவதற்கு எதிரான பேதங்களை உருவாக்குகிற ஒரு கட்டமைப்பாக மாறிப் போய் விட்டது. இராஜஸ்தானின் சதாப்தி விரைவு இரயில்கள் வி.ஐ.பி என்ற அந்தஸ்தைப் பெற்று இருக்கின்றன. ஏனைய எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கு இத்தகைய அந்தஸ்து கிடையாது. இந்த அந்தஸ்தைப் பெற்ற இரயில்களுக்கு எல்.எச்.பி என்ற நவீன பாதுகாப்புக் கட்டமைப்பு உண்டு. இரயில்கள் தடம் புரண்டாலும் அதனுடைய தாக்கத்தை உள்வாங்கி பயணிகளை காப்பாற்றுகின்ற கட்டமைப்பு இந்த வி.ஐ.பி எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கு மட்டுமே இருக்கிறது.
இந்த இரயில்கள் புறப்படுவதற்கு முன்பு கட்டாயமாக தண்டவாளங்கள் சோதனையிடப்படுகின்றன. ஆனால், ஏனைய எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கு இந்த வாய்ப்பு வசதிகள் மறுக்கப்பட்டு வருகிறது. அதைப்போல் கவாச் என்று சொல்லப்படுகின்ற ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பம் இரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய இந்த தொழில்நுட்பம் தமிழில் சொல்லவேண்டும் என்றால் கவசம் என்ற பொருளைக் கொண்டது. அது கவாச் என்று இந்தி மொழியில் அழைக்கப்படுகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மம்தா பேனர்ஜி இரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது இந்த பாதுகாப்பு திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் வழியாக இரண்டு இரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்கிற ஆபத்துகள் உருவாகிற போது 380 மீட்டருக்கு முன்பே இரயில் எஞ்ஜின்கள் தானாகவே நின்றுபோய் விடும். இந்த பாதுகாப்பு அனைத்து இரயில் பாதைகளிலும் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். 70,000 கி.மீ இரயில் பாதையில் இதுவரை 1,500 கி.மீட்டருக்கு மட்டும் தான் இந்த பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒடிசா இரயில் விபத்துக்கு உள்ளான இரயிலும் இப்படியொரு பாதுகாப்பு அமைப்பு இருக்குமென்று சொன்னால் இந்த விபத்துகளை நிச்சயமாக தவிர்த்து இருக்க முடியும். நேருக்கு நேர் மோதிக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
இதற்கு பெரும் தொகை செலவிடப்பட வேண்டியிருக்கிறது என்று ஒன்றிய ஆட்சி கூறுவதில் எந்த நியாயமும் இல்லை. மக்களுடைய உயிர்களை பாதுகாப்பதை விட அரசுக்கு செலவு செய்வதற்கு வேறு என்ன வேலை இருக்கிறது. அண்ணாமலை, பழனிசாமி போன்றவர்கள் நடத்துகிற அற்ப அரசியலைப் போல் அல்லாமல் தமிழக முதலமைச்சர் உடனடியாக தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை மீட்கின்ற பணியில் துரிதமாக ஈடுபட்டு இருக்கிறார். அமைச்சர்கள் குழு ஒன்றையும், அதிகாரிகள் குழு ஒன்றையும் அமைத்து ஒடிசா முதல்வரிடம் பேசி அவர்களை தமிழ்நாட்டிற்கு மீட்டுக் கொண்டு வருகிற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறரே தவிர இதை அரசியல் ஆக்குகின்ற எந்தவொரு கருத்தையும் அவர் முன்வைக்கவில்லை.
சாதி,மத, வர்ண தீண்டாமையை ஒழிக்க வந்த இரயிலின் கட்டமைப்பில் இப்படி வி.ஐ.பி அந்தஸ்து, வி.ஐ.பி அல்லாத அந்தஸ்து என்ற இரு பிரிவினை உண்டாக்கி சில பிரிவுகளுக்கு மட்டும் பாதுகாப்புகளை ஏற்படுத்துவதும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை அனைத்து இரயில் பாதைக்கும் செய்து முடிக்காமலும் இருப்பது மற்றொரு வர்ணாசிரம கொள்கைதான் என்று நாம் கூறவேண்டி இருக்கிறது. எதிர்காலத்திலாவது இந்த முறைகள் அகற்றப்பட்டு மக்களுடைய உரிமைகள், உயிர்கள் பாதுகாக்கப்படும் என்று நம்புவோமாக
பெரியார் முழக்கம் 08062023 இதழ்