சனாதன சக்திகளுக்கு எச்சரிக்கை வரலாறு படைத்தது சேலம் மாநாடு ஆர்ப்பரித்து அணிவகுத்த கருஞ்சட்டைகள் வைக்கம் போராட்டம் முடியவில்லை
வைக்கம் நூற்றாண்டையொட்டி வைக்கம் போராட்டம் முடியவில்லை எனும் தலைப்பில் ஜாதி – தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்தவெளி மாநாட்டில் முன்மொழிந்த தீர்மானம்
வைக்கம் போராட்டம் முடிந்து 100 ஆண்டுகள்உருண்டோடிவிட்டன. வைக்கத்தில் மகாதேவன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தீண்டப்படாத மக்கள் நடமாடும் உரிமைக்காகத் தொடங்கிய போராட்டம் ஒரு வருடம் 7 மாதங்கள் நீடித்தது. பிற்காலத்தில் கோயில் நுழைவு உரிமைக்கும் வழிவகுத்த இந்தப் போராட்டத்தை பெரியார், டி.கே. மாதவன் உள்ளிட்ட தலைவர்கள் வழி நடத்தினார்கள். போராட்டத்தில் பங்கேற்றதற்காக கிரிமினல் சட்டப் பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டு இரண்டு முறை சிறை ஏகி கடுங்காவல் தண்டனைக்கு உள்ளாகிய ஒரே தலைவர் பெரியார்தான். வைக்கம் வீதிகளில் நடமாடும் உரிமை கிடைத்தாலும் நாடு முழுதும் வைக்கங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வளர்ச்சிப் பாதையில் வழிகாட்டும் தமிழ்நாட்டில் கிராமங்களில் ஜாதி தீண்டாமைக் கொடுமைகள் நீடிக்கவே செய்கின்றன.
ஜாதிய வர்ணாசிரமக் கட்டமைப்பு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சமூகத்தை அழித்துக் கொண்டிருக்கும் போது இதை எதிர்க்கும் போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டியது வரலாற்று கடமையாகிறது. வைக்கம் நூற்றாண்டு விழா காலகட்டத்தில் பெரியார் நடத்திய ஜாதி தீண்டாமைக்கு எதிரான சனாதன எதிர்ப்புப் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுப்பது என்று இம்மாநாடு முடிவு செய்கிறது.
முதல் கட்டமாக தேனீர்கடைகளில் இரட்டைக் குவளை, வைக்கத்தைபோல வீதிகளில் நடமாடும் உரிமைகளைத் தடுத்தல், கோயில் நுழைவு மறுப்பு என்று பல்வேறு வடிவங்களில் ஜாதி தீண்டாமை நிகழும் கிராமங்களைக் கண்டறிந்து பட்டியலை திராவிடர் விடுதலைக் கழகச் செயல்வீரர்கள் தயாரிப்பார்கள்.
அடுத்தக்கட்டமாக இந்தப் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் பழங்குடி ஆணையத்திடமும் அளித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்
மூன்றாவது கட்டமாக ஜாதி தீண்டாமை ஒழிப்புக் கொள்கைகளோடு உடன்படும் இயக்கங்களோடு இணைந்து போராட்டங்களை முன்னெடுப்பது என்றும் மாநாடு முடிவு செய்கிறது. மக்களின் சிந்தனையில் அவை ஆழமாக வேரூன்றி இருப்பதற்கு ஆணிவேராக இருப்பது வேத தர்மம் சாஸ்திரங்கள் கட்டமைக்கும் புனித நூல்களில் அடங்கியுள்ள சட்டவிரோதமான பாகுபாடு தீண்டாமைக் கருத்துகளை – எளிய மொழியில் துண்டு பிரசுரமாகவும் வெளியீடாகவும், தெருமுனைக் கூட்டங்களாகவும் பரப்புரை இயக்கங்களையும் இந்த தொடர் செயல்பாடுகளோடு இணைத்து “வைக்கம் போர் முடியவில்லை” என்ற தலைப்பில் முன்னெடுக்க இம்மாநாடு முடிவு செய்கிறது.
(மாநாட்டுத் தீர்மானங்கள் அடுத்த இதழில் இடம் பெறும்)
பெரியார் முழக்கம் 04052023 இதழ்