செங்கோல் நாடகம்
டெல்லி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சோழர் கால செங்கோலை நிறுவி இருப்பதாக ஒன்றிய ஆட்சி கூறுகிறது. மோடி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒரு மதச் சடங்காக மாற்றி இருக்கிறார், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கூட அனுப்பப்படாமல் அவமானபடுத்தப்பட்டிருக்கிறார்.
அவர் ஏன் அவமதிக்கப்பட்டார் என்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று அவர் ஒரு பெண்; இரண்டு அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்; மூன்றாவது கணவனை இழந்தவர்; பார்ப்பனிய தர்மப்படி வேதச் சடங்குகளில் இவர் பங்கேற்க முடியாது எனவே தான் அவர் இந்த புறக்கணிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். திறப்பு விழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட நாள் சாவர்க்கர் பிறந்தநாள், சாவர்க்கர் மனுஸ்மிருதியை இந்தியாவின் புனிதமான இந்துக்களின் வழிகாட்டும் நூல் என்று பெருமைப்படுவதோடு எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்துள்ளார் (Women in Manushmirthi – Volume 4, Prabhat Publishers) மனுஸ்மிருதிப்படி ஒரு பெண் கணவனை இழந்தவர் குடியரசுத் தலைவராக இருந்தாலும் அதுவும் மனுநீதிப்படி வேத சடங்குகளில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் தான் என்பதை மோடி ஆட்சி இதன் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதோடு திறப்பு விழா மோடி என்ற இந்து மன்னருக்கு முடிசூட்டும் விழாவாக மாற்றப்பட்டுள்ளது. 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணித்து விட்டன, இந்த பிரச்சனைகளை திசை திருப்புவதற்கு செங்கோல் வழங்கும் நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளார்கள். அதற்கு புதிய கற்பனை கதைகளையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த செங்கோல் நாடகத்திற்கு தமிழ்நாட்டின் ஆளுநர் தனது மாளிகையில் கொண்டாட்டம் ஒன்றை நடத்தி இருக்கிறார். அதில் அவர் பேசுகிறபோது மவுண்ட் பேட்டனுக்கு செங்கோல் தன்னிடம் வழங்கப்பட்டது நன்றாகவே தெரியும். இது ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மவுண்ட் பேட்டன் வெளியேறியதற்கு பிறகு நம்மிடையே நடந்த சாதி, இன, மத மோதல்கள் காரணமாக அந்த ஆவணங்களை தொலைத்து விட்டோம் என்று ஒரு கதையை அவிழ்த்து விட்டு இருக்கிறார். செங்கோல் வழங்கப்பட்டது அவருக்கு நன்றாகவே தெரியும் என்பது ஆளுநருக்கு எப்படி தெரிந்தது? ஆளுநர் ரவியின் கனவில் வந்து சொன்னாரா? அப்பட்டமான பொய். இது குறித்து தீக்கதிர் நாளேடு விரிவான கட்டுரை ஒன்றை ஆதாரங்களுடன் வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் குறித்து Transfer of Power in India என்ற நூல் வி.பி.மேனன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தின் போது ஒவ்வொரு தருணமும் இதில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மவுண்ட் பேட்டன் எங்கிருந்தார், அவருடைய நிகழ்ச்சி நிரல் என்ன என்பதும் தெளிவாக விளக்கப்பட்டு இருக்கிறது.
அதிலிருந்து சில பகுதிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் ”பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சுதந்திரம் வழங்கப்பட இருந்த ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மவுண்ட் பேட்டன் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்து 1947 ஜூலை 10 அன்று முடிவு செய்யப்பட்டு விட்டது. பிரிட்டனின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் இது தொடர்பான ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன” ஆவணங்களின் படி மவுண்ட் பேட்டன் ஆகஸ்ட் 14 டெல்லியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 11:30 மணிக்கு கராச்சியை அடைந்தார். பாகிஸ்தானின் முதல் சுதந்திர தினத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு டெல்லி வந்தடைந்தார். அதன் பிறகு ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு தான் இந்திய சுதந்திர தின விழாவில் பங்கேற்கிறார். இடையில் இரவு 11:45 மணிக்கு செங்கோலைப் பெற்று புனித நீர் தெளித்து நேருவிடம் கொடுத்ததாக எந்த வரலாற்று தகவலும் இல்லை, ஆட்சி மாற்றத்தின் குறியீடாக பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது இதுதான் நடந்தது.
அதேபோல் ஆகஸ்ட் 22, 1947 இல் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருந்து வெளிவந்த டைம்ஸ் பத்திரிக்கை இது குறித்து விரிவான செய்திகளை பதிவு செய்து இருக்கிறது. அதிலும் ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக மவுண்ட் பேட்டனுக்கு செங்கோல் தரப்பட்டது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து வந்த மடத்தின் தூதுவர்கள் மற்றும் நாதஸ்வர வித்துவான் டி.என்.இராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர இசையுடன் ஊர்வலமாக சென்று நேரு வீட்டில் அவரிடம் செங்கோலை வழங்கினார்கள், நேருவின் நெற்றியில் விபூதி பூசினார்கள் என்றுதான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் (ஜூன் 29,2023) அருண் ராம் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். ராஜாஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தி ராஜாஜியின் சுயசரிதையை எழுதியவர். ராஜாஜியிடம் இப்படி ஒரு பணி ஒப்படைக்கப்பட்டது குறித்தோ ராஜாஜி தான் இந்த செங்கோலை வழங்குவதற்கு திருவாடுதுறை ஆதீனத்திடம் பேசினார் என்பதற்கோ ஆதாரங்கள் ஏதுமில்லை, அப்படிப்பட்ட தகவல் தங்களுக்கு தெரியாது என்று ராஜ்மோகன் காந்தி கூறுகிறார்.
ஆனால் ஆளுநர் ரவி போன்றவர்கள் கற்பனையாக சில கதையை உருவாக்குகிறார்கள் கடந்த 2022 ஏப்ரல் 19ஆம் தேதி ஆளுநர் திருவாடுதுறை மடத்திற்குப் போய் இந்த செங்கோல் பிரச்சனை குறித்து சில செய்திகளை சொல்லிவிட்டு வந்து இருக்கிறார். திருவாடுதுறை ஆதீனம் தற்போது இதுகுறித்து நூல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது அதில் ஆளுநர் தங்களை நேரில் வந்து சந்தித்ததை பதிவு செய்து இருக்கிறது. ஆளுநருக்கு ஆலோசர்களாக இருக்கிற சில பார்ப்பனர்கள் சொல்லிய கதையை மடத்திடம் கூறி இந்த திரைக்கதை வசனத்தை எழுதி தயாரித்து டெல்லிக்கு தந்தவர் தமிழக ஆளுநர் தான் என்பதும் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆதீனம் வெளியிட்ட இந்த நூலிலும் கூட மவுண்ட் பேட்டனிடம் செங்கோல் வழங்கப்பட்டது குறித்து எந்தவொரு புகைப்படமும் இடம் பெறவில்லை, தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு ஆளுநர் ரவி எத்தகைய அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார், எவ்வளவு பொய்யான வரலாறுகளையும் புனை சுருட்டுகளையும் உருவாக்கிக் கொண்டு இருந்திருக்கிறார் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
பெரியார் முழக்கம் 01062023 இதழ்