தமிழ்நாட்டு “ஆவினை” குஜராத் அமுல் விழுங்க சதித் திட்டம்
தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக ஆட்சி, தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஆவின் பால் நிறுவனத்தை சீர்குலைத்து – குஜராத் “அமுல்” பாலை விற்க சதித்திட்டம் தீட்டிவருகிறது. தமிழக முதல்வர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆவினில் தயிர் பெயரை ‘தஹி’ என்று மாற்றுவதற்கு ‘நஹி’ என்று கூறி எதிர்ப்பு தெரிவித்ததால், புதிய வழியில் குஜராத்தின் அமுல் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேநேரத்தில், கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் அமுல் பால் (தூத்) தொழில் தொடங்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலை நீடித்தால் கிராம பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஊரக பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாநிலத்தில் உள்ள நுகர்வோர்களுக்கு சரியான விலையில் தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு லிமிடெட் (TCMPF) 1.2.1981ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
இது ஒரு வணிக நிறுவனமாக மட்டுமல்லாமல் சமூக இயக்கமாகவும் இயங்கி வருகிறது. ஆவின் நிறுவனம் தலைமை கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில், ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ், 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அச்சங்கங்கள் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலினை 4.5 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்து வருகிறது. அதை இந்த ஆண்டு 70 லட்சம் லிட்டராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் லாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அமுல் பாலை விற்பனை செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக குஜராத் சொசைட்டியின் கீழ் இயங்கக்கூடிய அமுல் நிறுவனம், தமிழகத்தில் வந்து பால் கொள்முதல் செய்கிறார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் குளிரூட்டும் மையம் மற்றும் பதப்படுத்தப்படும் நிலையம் நிறுவியுள்ளது. மேலும் தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள், சுய உதவி குழுக்கள் மூலமாக பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.
அமுல் உற்பத்தியாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். அதிக விலை கொடுத்து வாங்கினால் அதிக விலைக்கு தான் விற்க வேண்டும். குறைந்தது ரூ.10 முதல் ரூ.20 வரை விலையை உயர்த்தி விற்பார்கள். அதையும் வாங்க பலர் உள்ளனர். லாபம் அதிகரிக்கும்போது அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்கின்றனர். இதனால் அமுலை நோக்கி பால் உற்பத்தியாளர்கள் போக ஆரம்பிப்பார்கள். இங்குள்ள கூட்டுறவு சொசைட்டிகள் அழிவுக்கு இது காரணமாகி விடும். மேலும், பால் உற்பத்தியை பெருக்க தமிழ்நாடு அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் மாடு வாங்க சலுகைகள் வழங்குகின்றன.
பல நலத்திட்டங்கள் வழங்கும்போது மாடுகளையும் இலவசமாக வழங்குகின்றனர். ஆனால் அரசின் சலுகையால் பெறப்படும் கறவை மாடுகள் மூலம் வரும் பால் அமுலுக்கு செல்லும் நிலை உருவாகும். இதுவும் கூட்டுறவு சொசைட்டிகளின் அழிவுக்கு ஒரு காரணமாகி விடும். அதேநேரத்தில் பால் கொள்முதலை அதிக விலை கொடுத்து வாங்கினாலும், குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்ற சேவை மனப்பான்மை என்பது தான் ஆவினின் கொள்கை. அந்த எண்ணமே முற்றிலும் பாதிக்கப்படும். அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2, ரூ.4 என்று அதிகம் கொடுத்து பாலை கொள்முதல் செய்வதாக சொல்கிறார்கள்.
இதனால் பால் கொள்முதல் செய்பவர்கள் அவர்கள் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் எந்த லாப நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றி வரும் ஆவின் சேவை என்பது மிகவும் பாதிக்கப்படும். அப்படி செயல்படும் பட்சத்தில் ஆவின் நிறுவனம் அழிவை சந்திக்கும். அவ்வாறு ஆவின் நிறுவனம் அழிந்தால், குறைந்த விலைக்கு பால் கிடைக்காது. இதனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் மற்ற மாவட்டங்களில் பால் விற்பனை பாதிக்கும். மற்ற மாவட்டங்களில் கொள்முதல் பாதித்தால் அங்கும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
இதனால் மாநிலங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மக்களுக்காக நடத்தப்படும் நிறுவனங்கள் மற்ற மாநிலங்களில் தொடங்கக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால் அந்த கோட்பாட்டை மீறி, குஜராத் நிறுவனம் தமிழகத்தில் கால் பதித்துள்ளது. இது தமிழகத்தின் கிராம பொருளாதாரத்தை முற்றிலும் அழித்து விடும் செயல் என்பதால் பல்வேறு எதிர்க்கட்சிகள் இதை கண்டித்து வருகின்றனர். ஆவின் தயிர் பாக்கெட்டில் தயிர் என்ற வார்த்தையும், curd என்ற ஆங்கில வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது.
இதில், ஆங்கில வார்த்தையை நீக்கி விட்டு ‘தஹி’ என்ற இந்தி வார்த்தையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் முதல் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தஹிக்கு ‘நஹி’ என்று கூறி விட்டது. இதனால், நீங்கள் ஆவின் மூலம் பெயர் போடாவிட்டால் என்ன? குஜராத்தில் தயாரிக்கப்படும் அமுலை கொண்டு வந்து இந்தியில் பெயரிட்டு நாங்கள் விற்பனை செய்வோம் என்று மறைமுகமாக இதுபோன்ற செயல்களில் குஜராத் நிறுவனம் இயக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அந்த பால் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அமுல் விற்பனையை தொடங்கியதால் அங்கு எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் இதை தேர்தல் பிரசாரமாகவே செய்தார்கள். இதனால் மக்கள் பாஜகவை எதிர்த்து ஓட்டு போட்டார்கள். இதனால், தற்போது அமுல் பால் கர்நாடகாவிலும் நுழைய முடியாத சூழ்நிலை உள்ளது. கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியதால் தமிழகத்தில் நுழைய பார்க்கிறார்கள்.
பெரியார் முழக்கம் 01062023 இதழ்