திலீபன் மீது கொலை வெறித் தாக்குதல் வேலூரில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

திலீபன் மீது காவலர்கள் முன்னிலையில் கொலை வெறித் தாக்குதல் நடத்திய ராமமூர்த்தி தலைமையிலான வன்முறை கும்பலை கைது செய்! திலீபன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறு! எனும் கோரிக்கைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் முன்பு 08.05.2023 திங்கள் காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் பெரப்பேரி திலீபன், தன் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு எதிராக ஊர் கட்டுப்பாடு போட்டதை எதிர்த்து போராடியதற்காகவும், தன் கிராமத்தில் பொது வழிப் பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான ஆணையைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் அதனை பொறுத்துக் கொள்ள முடியாத கிராமத்தைச் சார்ந்த ராமமூர்த்தி தலைமையிலான கட்டப்பஞ்சாயத்து கும்பல் இரண்டு முறை கொலை முயற்சி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் திலீபன் அவர்களுடைய இல்லம் சேதப் படுத்தப்பட்டது மற்றும் அவருடைய இருசக்கர வாகனம் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது. இத்தாக்குதலில் திலீபன் மற்றும் அவர் குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இச்சம்பவங்களை கண்டித்தும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் திவிக மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சிவா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழக தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் நீல சந்திரகுமார், விசிக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

மேலும் மக்கள் தமிழகம் கட்சி,தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சேலத்தில் இருந்து காவை ஈஸ்வரன் தலைமையிலும், விழுப்புரம் இளையரசன் தலைமையிலும், சென்னை உமாபதி தலைமையிலும் கழகத் தோழர்கள் வந்திருந்து பங்கேற்றனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர் பேரணாம்பட்டு, ஆற்காடு, குடியேற்றம் வேலூர், நெமிலி ஆகிய பகுதியிலிருந்து பெருந்திரளாக கழகத் தோழர்கள் மற்றும் பரப்பேரி கிராம பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெரப்பேரி திலீபன் மீது பாதுகாப்பிலிருந்து காவலர்கள் முன்பே கொலை முயற்சி தாக்குதல் நடத்தியும் அவர்களின் உடமைகளை சேதப்படுத்திய ராமமூர்த்தி தலைமையிலான வன்முறை கும்பலைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரியும், திலீபன் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து ஆர்ப்பாட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமமூர்த்தி தலைமையிலான வன்முறைக் கும்பலை உடனடியாக கைது செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

 

பெரியார் முழக்கம் 25052023 இதழ்

You may also like...