ஹிட்லர் வழியில் பாஜக
பாரதிய ஜனதா கட்சி ஒரு வகுப்புவாத கட்சி என்பதற்கு சான்றாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலம் அருவா மாவட்டத்தில் மவுரியா நகரசபைத் தலைவராக இருக்கும் யஷ்பால் பேனா, இவர் தனது மகள் ஒரு இஸ்லாமியரை காதலித்தார் என்பதை ஏற்றுக் கொண்டு இருவருக்கும் திருமணம் செய்வதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து இம்மாதம் 28ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. குடும்ப நிகழ்ச்சியான திருமணத்திற்கு அரசியல் கட்சியான பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது.
உத்தரகாண்டில் இந்து அமைப்பினர் இந்தத் திருமணத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாக தான் இருப்பதால் இந்தத் திருமணம் நடைபெறுவதை விரும்பவில்லை என்று கூறி தனது மகளின் திருமணத்தை ரத்து செய்து இருக்கிறார்.
பா.ஜ.க.வினர் அசைவம் சாப்பிடக் கூடாது; பா.ஜ.க.வினர் பிராமணனை வணங்க வேண்டும் என்றுகூட போராட்டம் நடத்தினாலும் வியப்பு இல்லை.
திருமணம் என்பது தனிமனித உரிமையைச் சார்ந்தது. இருவரும் காதலித்தார்கள்; இருவரும் திருமணம் செய்ய விரும்பினார்கள்; பெற்றோர்களும் அதை ஜனநாயகத்தோடு ஏற்றுக் கொண்டார்கள்.
ஆனால் தனி மனித உரிமையில் மதவெறுப்பை மதவாதத்தை திணித்து இந்தத் திருமணம் நடக்கக் கூடாது என்று பாஜகவினரே எதிர்ப்பு தெரிவிப்பது; பாஜகவை எதிர்த்து இந்து அமைப்புகள் அதற்கு போராட்டம் நடத்துவதும் இந்த அமைப்புகள் எவ்வளவு கொடூரமான பாசிஸ்டுகள் என்பதற்கு சான்றாகும்.
பாரதிய ஜனதா கட்சியில் உயர் மட்டத்தில் பல தலைவர்கள் இஸ்லா மியர்களை திருமணம் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக சொல்லப் போனால் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கிற ஜெய்சங்கரின் மனைவி குயாக்கோ ஜப்பான் நாட்டைச் சார்ந்தவர். ஜெய்சங்கருக்கு இது இரண்டாவது திருமணம்.
எதற்கெடுத்தாலும் இந்துத்துவம் பேசிக் கொண்டிருக்கும் சுப்பிரமணிய சாமியின் மகள் சுகாசினி நதிம் ஹைதர் என்ற இஸ்லாமியரைத் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இப்படி மேல்மட்ட பிரமுகர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இஸ்லாமியர்களைத் திருமணம் செய்து கொண்டிருக்கிற பல நிகழ்ச்சிகள் உண்டு. பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் ஹிட்லரின், முசோலினியின் பாசிச, நாசிச இனவெறிக் கொள்கைகளில் ஊறிப் போய் நிற்கிறார்கள் என்பதற்கு உத்தரகாண்ட் சம்பவம் ஒரு சரியான சான்றாகும்.
பெரியார் முழக்கம் 25052023 இதழ்