இளைய தலைமுறையின் எச்சரிக்கை மணி – சேலத்தில் ஒலிக்கப் போகிறது

திராவிட இயக்க வரலாற்றுப் பக்கங்களில் சேலம் பல முத்திரைகளைப் பதித்து நிற்கிறது. 1944இல் நீதிக் கட்சி – திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்றது சேலத்தில் தான்.

1971இல் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், இந்தியா முழுதும் பேசும் பொருளாகியது. இராமன் உள்ளிட்ட வேத மதக் கடவுள்களை ஊர்வலத்தில் அவமதித்ததாகக் குற்றச்சாட்டு; பெரியார் அஞ்சவில்லை. ஆம்; அப்படித்தான் செய்தேன்; சூத்திரனாக இருக்க மாட்டேன் என்ற உணர்ச்சியுள்ள ஒவ்வொருவரும் இதைத் தான் செய்வார்கள் என்றார் பெரியார். அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் இப்பிரச்சினையை முன்வைத்து காங்கிரசாரும் பார்ப்பனர்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தீவிரமாக செயல்பட்டனர். ஆனால் 184 இடங்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடியது. “நீங்கள் உலகப் புகழ் பெற்று விட்டீர்கள்; என் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியது” என்று பெரியார், கலைஞருக்கு தந்தி மூலம் பாராட்டினார்.

தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடு; வேத மரபு எதிர்ப்பு மாநாடுகளை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தியதும் இதே சேலம் நகரில் தான். அதே சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம்  மாநில மாநாட்டை ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடத்துகிறது.  மாநாட்டின் வெற்றிக்காக கழகத் தோழர்கள் பெண்களும் ஆண்களும் சுழன்று சுழன்று களப்பணியாற்றுகிறார்கள். கழகத்தின் பெண்கள், கம்பீரமாக கழகக் கொடிகளை ஏந்தி வணிக நிறுவனங்களிடம் மாநாட்டு துண்டறிக்கைகளை வழங்கி நன்கொடை திரட்டுவதைப் பார்த்து பலரும் வியப்பையும் மகிழ்வையும் வெளிப்படுத்துகிறார்கள். மாற்று சிந்தனை கொண்டவர்களிடமும் பக்குவமாகப் பேசி ஆதரவு திரட்டுவது குறித்து வரும் செய்திகள் வியப்பூட்டுகின்றன. “நான் பா.ஜ.க. பொறுப்பில் இருக்கிறேன்; என்னிடம் நன்கொடை கேட்கிறீர்களே” என்று ஒருவர் கேட்டபோது, “அது உங்கள் உரிமை; ஆனால் உங்கள் மகனும் மகளும் கல்வி பெறுவதற்கு இடஒதுக்கீடு உரிமையைப் பெற்றுத் தந்தது பெரியாரும் திராவிடர் இயக்கமும் தானே” என்று பதிலளித்தபோது உடனே மகிழ்ச்சியுடன் நன்கொடை தருகிறார், அந்த பா.ஜ.க. தலைவர்.

தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களில் தோழர்கள் உழைப்பால் தீட்டப்பட்ட மாநாட்டு விளம்பர சுவரெழுத்துகள் பல இலட்சம் மக்களிடையே மாநாடு குறித்த சேதிகளைக் கொண்டு போய் சேர்த்துள்ளன. கழகத் தோழர்கள் தனிப் பேருந்துகள், வேன்களில் குடும்பம் குடும்பமாக சேலம் திரள தயாராகி வரும் செய்திகள் உற்சாகமூட்டுகின்றன.

இணையதள பொறுப்பாளர் விஜயகுமார் முயற்சியில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட கழக வெளியீடுகள் மாநாட்டுக்காக தயாராகி வருகின்றன. மாநாட்டில் பார்ப்பனிய மோடி ஆட்சியின் மக்கள் விரோதக் கொள்கைகள்; அதானிகளின் ஆபத்தான வளர்ச்சி; திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பாதைகளை விளக்கும் குறும்படங்கள் தயாராகி வருகின்றன. இதற்காக கொளத்தூர் ‘கபிலன் ஸ்டூடியோ’ முன்னெடுப்பில் கழகத்தின் ஆற்றல் மிக்க ஒரு இளைஞர் குழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறது.

மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ள கருத்தரங்கம், ஆய்வரங்கம், வரலாற்று அரங்குகளில் விவாதிக்கப்படும் தலைப்புகளை ஆதரவாளர்கள் பாராட்டி மகிழ்கிறார்கள். நாங்கள் மாநாட்டுக்குக் கட்டாயம் வருவோம் என்று பூரிப்புடன் கூறுகிறார்கள்.

காலத்தின் தேவைகளுக்கும் அறைகூவல்களுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது, நமது திராவிடர் விடுதலைக் கழகம். ஏராளமான கழக இளைஞர்கள் சமூக – அரசியல் புரிதலோடு பெரியாரியத்தைப் பயின்று வருவதும் மேடைகளில் பேசுவதும்  கழகத்தின் வலிமையான அடித்தளத்தைப் பறைசாற்றுகிறது.

கருத்தரங்குகளில் நமது கழக இளைஞர்கள் பங்கேற்றுப் பேசுவதைப் பார்த்த பலரும் திராவிடர் விடுதலைக் கழகம் அறிவாயுதங்களை தயார் செய்து வருவதைப் பாராட்டி வரவேற்கிறார்கள். அது நமக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தருகிறது.

அரசியல் கட்சிகளுக்குப் போனால் பொருள் ஈட்டலாம்; பதவி பெறலாம்; அதிகாரங்களில் மூழ்கிக் கிடக்கலாம்; அத்தனையும் புறந்தள்ளிவிட்டு பெரியார் – அம்பேத்கர் – சமூகப் புரட்சி இலட்சியங்களுக்காக இளைஞர்கள் செயல்பட முன் வருவதே மாபெரும் அதிசயம் தான். அந்த அதிசயத்தை நமது பாசறையில் நாம் பார்க்கிறோம். பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் நம்மை கூர்ந்து கவனித்து வருகின்றன. “திராவிடர் விடுதலைக் கழகமா? அற்புதமான செயல்வீரர்களைக் கொண்ட இளைஞர்களின் பாசறையாக அது பாய்ச்சலுடன் களத்தில் நிற்கிறதே” என்ற பெருமையோடு நமது கழகத்தைப் பார்க்கிறார்கள்.

தலைமைக்கும் தோழர்களுக்கும் இடைவெளி இல்லாத இயக்கத்தின் சொந்தக்காரர்கள் நாம். பெண்களும் ஆண்களும் பாலினத் தடைகளைத் தகர்த்து களப்பணியில் செயல்படும் பெருமைக்கு  சொந்தம் கொண்டாட நமக்கு முழு உரிமை உண்டு.

ஆம்; கருத்து மாறுபாடுகளை உதறிவிட்டு கழகத்தின் கொள்கைக் குடும்பமாக உணர்வுகளோடு சங்கமித்து நிற்கிறோம். பெரியாரியம் கொள்கை மட்டுமல்ல; அது வாழ்க்கை நெறி என்ற புரிதல் நமக்கு இருக்கிறது.

ஜாதி மறுப்புத் திருமணத்தையே இலட்சியமாகக் கொண்டு அதை வாழ்க்கையில் நிகழ்த்திக் காட்டும் இளைஞர்களின் எண்ணிக்கை, எந்த இயக்கத்தையும் விட நமது கழகத்தில் தான் அதிகம் என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறலாம்.

எச்சரிக்கை மாநாடு என்று தலைப்பை தேர்வு செய்துள்ளீர்களே; அதற்குத் துணிவு வேண்டும்; அதற்காகவே பாராட்ட வேண்டும் என்று மாநாட்டு அழைப்பிதழைப் பார்த்து தங்கள் கருத்துகளை உணர்வோடு பதிவு செய்தவர்களும் உண்டு.

கருத்துச் செறிவான கொள்கை வெளிச்சத்தை வெளிப்படுத்தும் தீர்மானங்கள் கழகத்தின் அடுத்த செயல் திட்டங்கள் மாநாட்டில் நமது கழகத் தலைவர்களால் அறிவிக்கப்பட இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கருப்பு சீருடையுடன் பெண்களும் ஆண்களுமாக மிடுக்கோடு கொள்கைகளை முழக்கமிட்டு வரும் பேரணியை கற்பனையில் நினைத்தால்கூட மெய்சிலிர்க்கிறது.

ஆம், பேரணி நமது கட்டுப்பாட்டை இலட்சிய உறுதியை நிச்சயமாக பறைசாற்றும்; கொள்கை எதிரிகளுக்கு எச்சரிக்கையாக ஒலிக்கும்.

பெரியாரைப் பார்த்திடராத இளைஞர்கள் அவர் முடிவெய்தி 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் போட்டுத் தந்த இலட்சியப் பாதையில் பயணிக்க தயாராக இருப்பது அதிசயமானது அல்லவா? எத்தனையோ தத்துவங்கள் காலத்தின் மாற்றங்களுக்கு முகம் தர முடியாமல் மறைந்து போய் விட்டன. செல்வாக்கு இழந்து விட்டன.  ஆனால் பெரியாரியம் மட்டும் உயிர்த்துடிப்புடன் நிற்கிறது. தலைமுறை தலைமுறைகளாக அது கடத்தப்பட்டு வருகிறது.

வேத பார்ப்பனிய எதிர்ப்பு – சமூக நீதி – பெண்ணுரிமை – தமிழ்நாட்டின் தனித்துவம் என்ற கொள்கைகளை உள்ளிழுத்து நிற்கும் திராவிடம் தான் இன்று சனாதனத்தை வீழ்த்தும் வலிமையான ஆயுதம்.

‘கருப்பு – சிவப்பு – நீலம்’ என்ற அடையாளங்களைக் கொண்ட பெரியார் – மார்க்ஸ் – அம்பேத்கர் சிந்தனைகள் இன்று ஒரே புள்ளியில் மய்யம் கொண்டு நிற்பதைப் பார்க்கிறோம். இதுதான் தமிழ்நாடு!

அந்த அணி திரட்டலுக்கு கட்டியம் கூறும் மாநாட்டில் பங்கேற்பது நமது கடமை என்ற உணர்வோடு சேலத்தில் திரளுவோம்.

இளைய தலைமுறையின் சனாதன எதிர்ப்பை எச்சரிக்கையாக முழங்குவோம்; வாருங்கள் தோழர்களே!

– ‘இரா’

பெரியார் முழக்கம் 27042023 இதழ்

You may also like...