மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செய லாளர் மா.பா மணியமுதன் – மணிமேகலை ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழா 26.02.23 ஞாயிறு அன்று மதுரை மேலூர் ரஹ்மா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் துவங்கி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இணையேற்பு விழாவிற்கு ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். விழாவின் துவக்க நிகழ்வாக வானவில் இன உணர்வுப் பாடலைப் பாடினர்.

மணமக்களை வாழ்த்தி அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பசும்பொன் பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, கனியமுதன், தமிழ்மண் தன்னுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் பேசினர்.

தோழர்களின் வாழ்த்துரைகளுக்கு பின்பு கழகத் தலைவர் இணையேற்பு உறுதி மொழியை கூற தொடர்ந்து இணையர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இணையேற்பின் அடையாளமாக இணையர்கள் கரங்களைக் குலுக்கி, மாலைகளை மாற்றிக் கொண்டனர்.

நிகழ்வில் ராஜீவ் வழக்கில் விடுதலையான ரவிச்சந்திரன் மற்றும் தமுமுக, இந்திய முஸ்லீம் லீக், ளுனுஞஐ, வண்ணார் பேரவை, தமிழ்நாடு மருத்துவர் சங்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, சிபிஐ, சிபிஎம், ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம் , மே 17 இயக்கம் ஆகிய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த இணை ஏற்பு விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள்,  நண்பர்கள் மணமக்களின் உறவினர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை திராவிடர் விடுதலைக் கழகத்தில் மதுரை மாவட்ட கழகப் காப்பாளர் தளபதி ஒருங்கிணைப்பு செய்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, மேலூர் பொறுப்பாளர் சத்ய மூர்த்தி ஆகியோர் மேற் கொண்டனர். நிறைவாக மணமகன் மா. பா.மணி அமுதன் நன்றியுரையாற்றினார்.

ஜாதி இறுக்கம் நிறைந்த மதுரை மேலூர் பகுதியில் அறிவிக்கப்பட்ட முதல் ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் முழக்கம் 02032023 இதழ்

You may also like...