திருப்பூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்
திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 26.1.23 அன்று திருப்பூர் மங்கலம் சாலை கே ஆர் சி மஹாலில் மாலை 5.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.
அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அறிமுக உரையாற்றினார். கழக நிர்வாகிகள் உடுமலை மற்றும் பல்லடம் பொறுப்பாளர்கள், மாநகர பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா வசூல் மற்றும் பரப்புரைக்கான பல்வேறு ஆலோசனைகளை பேசினார்கள்.
தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் மகிழவன், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, இணையதளப் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத் தலைவர் முகில் ராசு, தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், கழகப் பொருளாளர் துரைசாமி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
நிறைவாக பேசிய கழகத் தலைவர், கழகம் கொள்ளவிருக்கிற அடுத்தகட்ட செயல்பாடுகள், பரப்புரைக்கான யுக்திகள், தெருமுனைக் கூட்டத்தின் வடிவங்கள், கருத்தரங்கம் நடத்துவது, அமைப்பின் கட்டுமானத்தை விரிவாக்குவது போன்றவை குறித்து தோழர்களிடம் விரிவாகப் பேசினார். கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
- தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவை பொதுச் செயலாளர் சந்திரபோஸ், மறைந்த தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பால்ராஜ், ஈரோடு கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா, த.பெ.தி.க பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் இணையர் தோழர் வசந்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
- பாஜக அரசின் சனாதன கொள்கைகளை விளக்கியும், பறிபோகும் நம் கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை பொதுமக்களிடம் விளக்கும் விதமாக கிராம பகுதிகள் மற்றும் நகரங்களில் புதிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது;
- பயிற்சி வகுப்புகளை நடத்துவது;
- பெரியார் முழக்க சந்தாக்களை விரைந்து முடித்து தலைமைக்கு அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிறைவாக மாநகர செயலாளர் முத்து நன்றியுரை கூற நிகழ்வு மாலை 8.30 மணி அளவில் ஆலோசனைக் கூட்டம் நிறைவுற்றது.
செய்தி : பரிமளராசன்
பெரியார் முழக்கம் 09022023 இதழ்