திருப்பூர் மாஸ்கோ நகரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா
சிறுவர் சிறுமியர் விளையாட்டுப் போட்டிகள் – கலை நிகழ்ச்சி – தமிழிசைப் பாடல்கள் – பொதுக் கூட்டம் என ஒரு நாள் நிகழ்சியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்திலும் அப்பகுதி வாழ் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 13ஆவது ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ஆகியவை 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு வரை நடைபெற்றது. விழாவிற்கு மாநகரச் செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார்.
முதல் நிகழ்வாக காலை 10.00 மணிக்கு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கும் நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கழகப் பொருளாளர் துரைசாமி, மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, தெற்கு பகுதி கழகச் செயலாளர் இராமசாமி, சரசு, பகுதி கழகத் தோழர் கோமதி, அய்யா இராமசாமி ஆகியோர் பொங்கல் வழங்கி சிறப்பித்தனர்.
அடுத்த நிகழ்வாக சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. விளையாட்டுப் போட்டிகளை திருப்பூர் மாநகர மேயர் கே.என். தினேசுகுமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தும், வரும் காலங்களில் திவிகவின் பணிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளித்தார். அவ்வமயம் மாவட்டத் தலைவர் முகில் இராசு, மாநகரச் செயலாளர் நீதிராசன் ஆகியோர் உடனிருந்தனர். விளையாட்டுப் போட்டிகள் மாலை 5.00 மணி வரை நடைபெற்றன.
மாலையில் முதல் நிகழ்வாக குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அடுத்த நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர். பகுத்தறிவு இசைக் குழுவின் தமிழிசை, கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் பொள்ளாச்சி பாடகர் கண்ணையா, நஜ்முன்னிசா ஆகியோர் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர். மேடை நிகழ்வாக சரியாக 9.00 மணிக்கு துவங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா குறித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து கழகப் பொருளாளர் துரைசாமி, தலைவர் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாவட்டத் தலைவர் முகிர் இராசு, கோவை மாவட்டக் கழகத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியருக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் மதிமுகவின் மாவட்டச் செயலாளர், மாமன்ற உறுப்பினர் ஆர். நாகராஜ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். முடிவில் பகுதி கழகத் தோழர் கோமதி நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.
பெரியார் முழக்கம் 02022023 இதழ்