நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் வருகிறது ஜனநாயகத்தை இராமராஜ்யமாக்குகிறார்கள்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் ஒன்றிய அரசுக்கே முழு அதிகாரம்; உச்சநீதிமன்ற ‘கொலிஜியம்’ குறுக்கிடக் கூடாது என்று ஒன்றிய அரசு மோதலை உருவக்கி வருகிறது. மத்திய சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜு டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ். சோதி அளித்த பேட்டியை தனக்கு சாதகமாக வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றமே அதிகார மிக்கது என்றும், உச்சநீதிமன்றம், நீதிபதிகள் நியமனங்களில் தலையிட முடியாது என்றும் அவர் பேசியிருந்தார். இதற்கிடையே உச்சநீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒன்றிய அரசு ‘ஜனநாயக்’ நாட்டை ‘இராமராஜ்யமாக்க’ முயற்சிக் கிறது என்று ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா வெளிப்படையாகவே பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது உரையை சூழ்நிலை கருதி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.
இந்தியா ஒரு பாசிச நாடாக மாறி வருவதாகவும், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு உச்சநீதிமன்றம் தனது சுயத்தை இழந்து வருவதாகவும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா குற்றம் சாட்டியுள்ளார். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, நாடு முழுவதும் உள்ள மசூதிகளை வலதுசாரிகள் உரிமை கோருவதற்கான கதவுகளை திறந்துவிட்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு ஒன்றியத்தை ஆளத் தொடங்கியதில் இருந்தே அறிவிக்கப்படாத அவசர நிலை இந்தியாவில் இருப்பதாகவே செயல்பாடுகள் உள்ளன. எதிர்க் கட்சிகள் எந்த மாநிலத்தையும் ஆளவே இயலாத அளவுக்கு நெருக்கடி, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு அமைப்பே இல்லை, நீதிமன்றங்கள், நீதிபதிகளின் பிடியும் அவர்களின் கைக்குள். அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் களைத் திணித்து, சகலத் துறைகளையும் பலவீனப் படுத்தி, இந்திய அரசியலமைப்பை ஒவ்வொரு செங்கல்லாக அல்ல, சுக்குநூறாக ஒரே அடியாக உடைத்து நொறுக்கி, பெயரளவிலாவது இருக்கும் சனநாயகம் என்ற சொல்லை அர்த்தமிழக்கச் செய்து, இராமராஜ்ஜியமாக இந்த நாட்டை மாற்றுவதற்காக முழு மூச்சாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜனதாவின் பாசிசப் போக்கைக் கண்டித்தால் வழக்கு, எதிர்த்தால் சிறை… உச்சமாய் தபோல்கர், கவுரி லங்கேஷ், கல்புர்கி என படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல்களும் ஏராளம். ஆனால் அடக்குமுறைகளை ஏவியோ, சி.பி.அய்., அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ. போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டியோ, துப்பாக்கி முனையிலோ ஒருபோதும் எதிர்க்குரல்களை ஒடுக்கி விட முடியாது என்பதை காலம் அவ்வப்போது உணர்த்திக் கொண்டேதான் இருக்கிறது. நாடாளு மன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டே இருக்கும் வேளையில், பாரதிய ஜனதா ஆட்சியின் மீதான அதிருப்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என்ற வட்டத்தை தாண்டி, அதற்கு வெளியேயும் இத்தகைய எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கி விட்டன. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்கள், ஒன்றிய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர்கள், அரசு உயரதிகாரிகளாக இருந்த பலரும் பாரதிய ஜனதாவின் எதேச்சதிகாரப் போக்கை அம்பலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஒன்றிய ஆட்சி குறித்தும், உச்சநீதிமன்றத்தின் அறம் தவறிய தீர்ப்புகள் குறித்தும் கர்நாடகாவை சேர்ந்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கும் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கம், டெல்லி பத்திரிகையாளர் சங்கம், ஜனநாயக ஆசிரியர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து டெல்லி யில் ஜனவரி ஏழாம் தேதி அரசியலமைப்பைக் காப்போம், ஜனநாயகத்தைக் காப்போம் என்ற பெயரில் தேசிய மாநாட்டை நடத்தின. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய கோபால கவுடா, 2014ஆம் ஆண்டுக்கு பிந்தைய உச்சநீதி மன்றத்தின் விசாரணைகள், தீர்ப்புகளை கடுமையாக விமர்சித்தார். பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்ட ரஞ்சன் கோகாய் தலைமை யிலான உச்சநீதிமன்ற அமர்வு அனுமதி வழங்கி யதால், ஞானவாபி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மசூதிகளை வலதுசாரிகள் உரிமை கோருவதற்கான கதவுகளை திறந்துவிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால் சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களையும் அவர் விவரித்தார்.
பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகளில் அரசியலமைப்பு ஜனநாயகத்தை நிலைநிறுத்த ஒரே ஒரு நீதிபதிக்கு மட்டுமே தைரியமும் துணிவும் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், 4 நீதிபதிகள் பணமதிப்பழிப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பத்தளித்தனர். நீதிபதி நாகரத்னா மட்டும் தனது தீர்ப்பில், “நாடாளு மன்றம் இல்லாமல் சனநாயகம் தழைத்தோங்க முடியாது. எனவே இதுபோன்ற முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நாடாளு மன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது” எனக் குறிப்பிட்டார்.
2014ஆம் ஆண்டுக்கு முன்பு முக்கிய வழக்குகளின் விசாரணையின்போது, “சி.பி.அய். ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட கிளி” என்ற கருத்துக்களை கூட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தயங்காமல் முன்வைத்தனர். இதனை சுட்டிக்காட்டிய கோபால கவுடா, அப்படியெல்லாம் ஆவேசமாக கருத்துக்கூறிய உச்சநீதிமன்றத்தின் இன்றைய நிலை எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது என்பதையும் உணர்த்து வதற்கு சில வழக்குகளை எடுத்துரைத்தார். லோயா வழக்கில் என்ன நடந்தது என்பதே வெளிச்சத்திற்கு வராமல் ஒளிக்கப்பட்ட இருள் சூழ்ந்த பக்கங்கள். பீமா கோரேகான் வழக்கில் சமூக செயற்பாட் டாளர்கள் குறிவைத்து கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறைப்படுத்தப் பட்டனர். பாதிரியார் ஸ்டேன் சுவாமி சிறையில் உடல் நலிந்து, உச்சநீதிமன்றத்தால் பிணைகூட வழங்கப் படாமல் அலைக்கழிக்கப்பட்டு உயிரிழந்த கொடுமை யும் நடந்தது. கைது செய்வதற்கான ஆவணங்கள் கூட போலியாக அவர்களின் கணினிகளில் திணிக்கப் பட்டவை என்ற விவரங்கள் எல்லாம் இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளன. ஆனால் குஜராத் கலவரத்தின்போது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகளை குஜராத் மாநில பாஜக அரசு நன்னடத்தை அடிப்படையில் தண்டனைக் காலம் முடியும் முன்னரே விடுவித்தது. இதனை நீதிமன்றங் களும் நியாயப்படுத்தின. ரஃபேல் வழக்கு, ஆதார் அட்டை வழக்கு, உயர்ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு வழக்கு என பல வழக்குகளில் உச்சநீதி மன்றத்தின் செயல்பாடுகள் மக்கள் மன்றத்தில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகின. இவற்றையெல்லாம் பட்டியல் போட்டு அடுக்கிய கோபால கவுடா, 2014ஆம் ஆண்டுக்கு பிறகு உச்சநீதிமன்றம் தன் சுயத்தை இழந்து விட்டதையே இவை காட்டுவதாக சாடினார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பறித்து ஜம்மு, காஷ்மீர், லடாக் என 3 தனித்தனி பகுதிகளாக உடைத்து அமைதியை தொலைத்துவிட்டனர். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக அடிக்கும் பகல் கொள்ளை, பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் சிறு, குறு தொழில்துறையினர், ஏழை- எளிய மக்களை அல்லலுற வைத்த கொடுமைகள் என 8 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி அரங்கேற்றிய அவலங்கள் குறித்தும் கோபால கவுடா கவலைகள் தெரிவித்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியதே இந்திய அரசியலமைப்பு எனக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் தற்போது பிற்போக்குவாதிகளால் சூழப்பட்டிருப்பதாகவும், இந்துத்துவ பாசிச நாடாக இந்தியா மாறி வருவதாகவும் விமர்சித்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் அனைவருக்கும் சம உரிமையை வழங்கவில்லை என்பதே அதற்கு சரியான சான்று என்றும் அவர் கூறினார்.
மாநிலங்களுக்கான நிதி உரிமைகள் பறிக்கப் படுவது, ஆளுநர்களை வைத்து ஒன்றிய அரசு செய்யும் அடாவடி அரசியல், நவீன குலக்கல்வியாம் புதிய கல்விக்கொள்கை போன்றவை கூட்டாட்சித் தத்துவத்தை பாழ்படுத்துவதையும் கோபால கவுடா சுட்டிக்காட்டியுள்ளார். பாஜக ஆட்சியின் கீழ் தேர்தல் ஆணையம், ராணுவம், கணக்கு தணிக்கை யகம் போன்ற அரசு அமைப்புகளை ஒன்றிய அரசு கையாளும் விதம், ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் கோபலா கவுடா அதிருப்தி தெரிவித்தார். பாசிச சக்திகளின் பிடியில் இந்த நாடு எப்படி சிதைந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவே கோபால கவுடா வின் முழுப் பேச்சு அமைந்திருந்தது. இத்தகைய விமர்சனங்களால் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம், இந்துத்துவ பயங்கரவாத சக்திகளால் மிரட்டப்பட லாம் அல்லது அரசு நிறுவனங்களால் குறி வைக்கப் படலாம் என்ற அச்சம் இல்லாமல் உச்சநீதிமன்றத் தின் நீதிபதியாக இருந்த ஒருவரே இவ்வாறு துணிச்சலாக பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் கோபால கவுடாவின் பேச்சை பெரும் பான்மையாக வெகுசன ஊடகங்கள் புறக்கணித்து இருட்டடிப்பு செய்திருக்கின்றன. அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் என்ற எல்லைகளுக்கு அப்பாற் பட்டு ஒன்றிய ஆட்சியின் அவலங்கள், ஜனநாயகப் படுகொலைகளுக்கு எதிராக அனைத்து மட்டங் களில் இருந்தும் குரல்கள் எழ வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அத்தகைய குரல்களை எதைக் கொண்டும் ஒடுக்க முடியாது, எழுந்தே தீரும் என்பதை கோபால கவுடாவின் பேச்சு நமக்கு நம்பிக்கையூட்டுகிறது. – தமிழில் ர. பிரகாசு
பெரியார் முழக்கம் 26012023 இதழ்