திருமகன் ஈவெரா துயர முடிவு: கழகம் ஆழ்ந்த இரங்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மரணமடைந்து விட்டார் என்ற செய்தி தாங்க முடியாத ஒரு துயரமாகும். உண்மையிலேயே இது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அவரது தந்தை காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு தேசிய இயக்கத்தின் முன்னணி தலைவராக இருந்தும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், இப்போதும் தன்னை ஒரு பெரியாரியவாதியாக, பகுத்தறிவாதியாக, பெரியார் குடும்பத்தைச் சார்ந்தவராகப் பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அதேபோலத் தான் தன்னுடைய மகன் திருமகன் ஈவெரா அவர்களையும் வளர்த்தார். திருமகன் ஈவெரா அவர்களும் தலைச்சிறந்த ஒரு பெரியாரியவாதியாகவே வாழ்ந்தார்; பகுத்தறிவுவாதியாகவேத் திகழ்ந்தார். சென்னையில் திருமகன் ஈவெரா திருமணம் புரட்சிகரமாக நடந்தது. பதிவாளரை நேரில் அழைத்து அதில் மணமக்கள் கையொப்பம் பெற்று சில நிமிடங்களில் மணவிழா புரோகித மறுப்புடன் நடந்து முடிந்தது.
இந்த இழப்பு உண்மையிலே தாங்கிக் கொள்ள முடியாத ஒரு இழப்பு. 46 வயது இளைஞர், துடிப்பு மிக்க சட்டமன்ற உறுப்பினர், எத்தனையோ பணிகளுக்காக தமிழ்நாடு அவருக்காகக் காத்திருந்தது, கொடுமையான அந்த மாரடைப்பால் அவர் விடை பெற்றுக்கொண்டார் என்பது வேதனையிலும் வேதனையான செய்தி.
இந்த துயரத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார் என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால் காலம் தான் அவருடைய உள்ளத்தில் ஏற்பட்ட இந்த ஆறாப் புண்ணுக்கு மருந்தாக மாறும். இதிலிருந்து அவர் மீண்டு வர வேண்டும் என்பதே நமது விருப்பமாகும்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை மீண்டும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரியார் முழக்கம் 12012023 இதழ்