ஆளுநர், தமிழ்நாட்டை விட்டு வெளியேறட்டும்!
ஆளுநர் ரவிக்கு என்ன ஆயிற்று என்றே புரியவில்லை, பழமொழி ஒன்றை கிராமத்தில் கூறுவார்கள், ஆற்றின் மீது கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போய் விட்டானாம் ஒருவன், அதைப்போல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் ஆற்ற வேண்டிய உரைக்கு ஜனவரி ஏழாம் தேதி ஒப்புதல் அளித்து விட்டு சபைக்கு உரையாற்ற வருகின்ற போது அதில் அவருக்கு கசக்கின்ற வார்த்தைகளை உச்சரிக்கவே மறுத்து விட்டார். ஆளுநரின் செயலை தமிழக சட்டமன்றம் ஏற்காத நிலையில் அவரே வெளி நடப்பு செய்து விட்டார். அதுவும் ‘தேசிய கீதத்தை’ப் புறக்கணித்து வெளி நடப்பு செய்துள்ளார். அவருக்கு ஒவ்வாமையாக அமைந்து போன, அவர் வெறுக்கின்ற வார்த்தைகள் என்ன தெரியுமா?
திராவிட மாடல், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, திராவிட மாடல் இத்தனைக்கும் மேலாக அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராசர், கலைஞர், இவை அனைத்தும் உச்சரிப்பதற்கு அவர் வாய் மறுத்து விட்டது. உரையில் அடங்கியிருக்கிற இந்த சொற் றொடர்களை அவர் பேச மறுத்து அதற்கு பதிலாக வேறு கருத்துக்களை அவர் முன் வைத்திருக்கிறார். அவருக்கு பிடித்ததெல்லாம் சனாதனம், பாரதம், ஆரியம், வேதம், ஆர்.எஸ்.எஸ். தான்.
அரசு தயாரித்த உரைக்கு ஒப்புதல் அளித்து விட்டு அதை சட்டப்பேரவையில் படிக்காமலே போகின்ற ஒரு ஆளுநர் அரசியலமைப்பு கடமையைத் தான் செய்கிறாரா? ‘திராவிட மாடல்’ என்பதே தேச விரோதம் என்று பேசியவர்கள் இப்பொழுது தேசிய கீதத்தையே தேச விரோதப் பட்டியலில் சேர்த்து விட்டார்கள் போல. தமிழக முதல்வர் தமிழக சட்டசபை யின் இறையாண்மையையும் சுயமரியாதை யையும், ஆளுநரைத் துணிவுடன் எதிர் கொண்டு காப்பாற்றி, வரலாற்றில் மேலும் ஒரு புகழ் மகுடத்தைச் சூடிக் கொண்டிருக் கிறார்.
அரசு தயாரித்த அதிகாரப்பூர்வ உரையை மட்டுமே சட்டசபைக் குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும். அரசு தயாரித்த உரையின் பல பகுதிகளை ஆளுநர் ஏற்க மறுத்துள்ளது வருத்தமளிக்கிறது என்று ஆளுநர் முன்னிலையிலேயே தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக அவையை ஏற்கச் செய்துள்ளார். இது முதல்வர் தீர்மானம் மட்டுமல்ல, தமிழர்களின் ஒருமித்த உணர்வு!
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் இத்தகைய ‘மன நோயாளிகளை’ ஆளுநர்களாக அனுப்பி வைத்து அங்கே பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் உருவாக்குவதே தனது அரசியல் சட்டக் கடமை என்று கருதிக் கொண்டிருக்கிறது சனாதனம் பேசிக் கொண்டிருக்கிற ஒன்றிய ஆட்சி. எதையும் நியாயப்படுத்துவதற்கு அவர்கள் தொண்டர்கள் எப்படியோ வருவார்கள் விவாதங்களில் அவர்கள் இப்படி கூட பேச முடியும் ஏழாம் தேதி தான் ஆளுநர் ஒப்புதல் அளித்தார். 9ஆம் தேதி அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றெல்லாம்கூட பேசி ஆளுநரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதற்கு ஒரு கூட்டம் இங்கே தயாராகிக் கொண்டு இருக்கிறது.
அரசு தயாரித்த உரையை சட்டமன்ற அவைக் குறிப்பில் பதிய விடாது நீக்கும் உரிமையை அவருக்கு யார் தந்தது? எந்த சட்டப் பிரிவில் அதற்கு இடமிருக்கிறது?
2016இல் அருணாசலப் பிரதேசத்திலிருந்து ஒரு வழக்கு உச்சநீதிமன்றம் வந்தது (நபம் ரெபியா எதிர் துணை சபாநாயகர்) அந்த வழக்கில் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் தெரிவித்த வழிகாட்டும் கருத்துகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளது.
“ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் 163ஆவது சட்டப் பிரிவு மாநில அமைச்சரவை அளிக்கும் அறிவுரைக்கு உட்பட்டது. அமைச்சரவை அறிவுரை இல்லாது செயல்பட அதிகாரம் இல்லை. அதற்கு எதிராக செயல்படும் தனித்த அதிகாரமும் ஆளுநருக்கு இல்லை” என்று திட்ட வட்டமாக தெளிவுபடுத்தியிருக்கிறது. ஏதோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி போல் தமிழ்நாட்டுக்கே அன்னியரான ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, ஆளுநர் என்ற அதிகாரப் போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு ‘நாட்டாண்மை’ செய்வதை தமிழ்நாடு ஏற்காது; ‘ஆளுநரே! வெளியேறு!!’ என்ற முழக்கம் தமிழ்நாடு தழுவி ஒலிக்கட்டும்!
பெரியார் முழக்கம் 12012023 இதழ்