விடுதலை இராசேந்திரன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன முதல்வர் நேரில் மரபுரிமைத் தொகை வழங்கினார்
கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய 59 நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியது. அதற்கான மரபு உரிமைத் தொகையாக ரூ.15 இலட்சத் துக்கான காசோலையை தமிழக முதல்வர் நேரில் வழங்கினார்.
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆசிரியர், பெரியாரியலை தன் வாழ் வியலாக்கி, கழகத்தை குடும்பமாக்கி, பெரியாரிய பத்திரிக்கையாளராக 50 ஆண்டுகளைக் கடந்தும் எழுதிக் கொண்டிருக்கும் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நூல்களை தமிழ்நாடு அரசு 59 நூல்களை நாட்டுடமையாக்கியது.
22.12.2022 பகல் 11 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டுடமையாக்கப் பட்டதற்கான மரபு உரிமை காசோலையை வழங்கினார். அப் போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் இணையர் பேராசிரியர் சரசுவதி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் உடனிருந்தனர்.
தொடர்ந்து, இலாயிட்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவிக்க தோழர்கள் முழக்கம் எழுப்பினர். அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று இராயப் பேட்டை பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தோழர்கள் முழக்க மிட்டனர்.
விடுதலை இராசேந்திரன் எழுதிய புத்தகங்களின் அட்டைப் படம் ‘டி- சட்டைகளாக’ அச்சடிக்கப்பட்டு தோழர்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர். கழகத்தின் இணையதள பொறுப்பாளர் விஜயகுமார் மற்றும் திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்இராசு ஆகியோர் இணைந்து இந்த முயற்சியை செய்தனர்.
வரவேற்புரையைத் தொடர்ந்து வி.எம்.தெரு பெரியார் படிப்ப கத்தில் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரை, “தமிழ்நாடு அரசு பெரியாரிய சிந்தனைகளை அரசு வழியாக அங்கீகரித்திருக்கிறது. இது எனக்கு கிடைத்த சிறப்பை விட, பெரியார் கொள்கைக்கு கழகத்துக்கே கிடைத்த ஒரு சிறப்பு ஆகும். பெரியார் இயக்கத்தில் இருந்தவர்களின் நூல்களை அரசுடமையாக்குவதும் இது தான் முதல் முறை. இந்த நூல் களை அரசுடமையாக்க வேண்டும் என்று விவாதம் நடைபெற்ற போது, குழுவில் இருந்த சில தமிழ் அறிஞர்கள், ‘வழக்கமாக இலக்கியம் சார்ந்த நூல்களைத் தானே தேர்ந்தெடுப்போம். விடுதலை இராசேந்திரன் அவர்களின் நூல்கள் இலக்கியம் சார்ந்தவை அல்லவே. இதற்கு எப்படி வழங்குவது?’ என்ற விவாதம் எழுந்துள்ளது. அந்தக் குழுவிலே இருந்த பெரியாரியல் வாதிகள், ‘இலக்கியமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சமூகவியலைப் பற்றி எழுதியதற்கும் நாம் நாட்டுடமை யாக்குவதற்கு வாய்ப்புண்டு. பெரியாரியல் சிந்தனை என்பது சமூகவியல் சிந்தனை. அதற்கும் அந்த உரிமை உண்டு’ என்று வாதாடி, அதற்கு ஒப்புதல் தந்துள்ளார்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு இதற்கான தேர்வுப் பட்டியலைத் தேர்வு செய்தார். இதில் பல நூல்கள் ஒன்றிய அரசுக்கு எதிரானவையாகும். ஆனாலும் கருத்துரிமை அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நூலகங் களிலும் பயன்படுத்தலாம் என்பது அவ்வளவு சாதாரணமான செய்தி இல்லை. திராவிட இயக்க உணர்வு உள்ள ஆட்சியால் மட்டும் தான் இதைச் செய்ய முடியும்.
இந்த நூல்களெல்லாம் என்னைப் பொறுத்தவரை அவ்வப்போது சமூக – அரசியல் சூழலின் தேவைகளுக்காக எழுதப்பட்டவை. காலத்தின் சூழல் கருதி எழுதிய நூல்கள் தான் இவை. அந்தந்த காலகட்டத்தில் இப்படிப் பட்ட கருத்துரைகளை தெளிவுரை களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், எதிரிகளின் வாதங்களை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னால் கடுமையாக உழைத்து எழுதப்பட்டவை. இப்படி 60 நூல்களின் எண்ணிக்கை வந்துள்ளது. நாட்டுமையாக்கப்பட உள்ளது என்று கேள்விப்பட்டவுடன் அதை நான் மிக இயல்பாகத்தான் எடுத்துக் கொண்டேன். எனக்கு கிடைத்த மகிழ்ச்சி என்பதைவிட இயக்கத் தோழர்களுக்கு இதில் கிடைத்த மகிழ்ச்சிதான் எனக்கான உண்மையான மகிழ்ச்சி என்று கருதுகிறேன். நமது தோழர்கள் ஒவ்வொருவரும் இது இயக்கத்திற்கு கிடைத்த சிறப்பு என்று கருதுகின்றனர்.
தமிழக முதலமைச்சருடன் சந்திப்பு மிகவும் மகிழ்வாக இருந்தது. மிகுந்த மகிழ்வோடு உரையாடிக் கொண டே இருந்தார்.
விருது வாங்கும் முன் முதலமைச்சர், ‘சமூக ஊடகங்களில் நீங்கள் கொடுத்து வரும் பதிலடிகளை தொடர்ச்சியாக நான் கண்காணித்துக் கொண்டு வருகிறேன். நீங்கள் அதை நிறுத்திவிடக் கூடாது, தொடர்ச்சியாக நீங்கள் அதை செய்து கொண்டே இருக்க வேண்டும்’ என்ற ஒரு வேண்டுகோளையும் அவர் விடுத்தார். நிகழ்வுகள் முடிந்த பிறகு கழகத் தலைவரையும் என்னையும் காத்திருக்கச் சொல்லி 20 நிமிடம் வரை பல்வேறு சமூக அரசியல் நிகழ்வு களைச் சுட்டிக் காட்டி தனியே பேசி அதற்கான நேரம் ஒதுக்கினார். தமிழ் நாட்டில் அரசு சார்பில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சிலையை நிறுவ வேண்டும். அதை ஒரு சமூக நீதி விழாவாகக் கொண்டாட வேண்டும், இந்தியாவில் அவருக்கு எங்கேயும் சிலை இல்லை. என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். ‘பரிசீலிக்கிறேன்’ என்றார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அரசாங்கத்தின் கல்வித் துறையின் பல செயல்பாடுகளைப் பற்றி முதலமைச் சரிடம் எடுத்து கூறினார். தொடர்ந்து கல்வித் துறை, நிர்வாகத் துறைப் பற்றியும் கூறினார். தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களையும் சந்தித்தோம். காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் தொழில்துறைகள் வளர்ச்சி எதுவும் இல்லை அதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ‘நானும் ஜெயரஞ்சனும் அதைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தோம், செயல் படுத்துவோம்’ என்று கூறினார். இங்கே ஒரு செய்தியைக் குறிப்பிட வேண்டும். நாட்டுமையாக்க வேண்டும் என்றால் நூலாசிரியரின் வேண்டுகாள் கடிதம் ஒன்று பெறப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று நான் கூறி விட்டேன். அதன் நியாயத்தைப் புரிந்து கொண்ட அமைச்சர் தென்னரசு அந்த விதியையே நீக்கியது குறிப்பிடத் தக்கது.
நமது தோழர்களின் கற்பனைத் திறனைப் பார்த்து நான் ஆச்சரியப் படுகிறேன். எனதுநூலின் ஒவ்வொரு அட்டைப் படத்தையும் ஒவ்வொரு
பனியன் சட்டையாக வடிவமைத்து தோழர்கள் அதை அணிந்து வரிசையாக நின்று, முழக்கங்களும் நூலின் அடிப்படையிலே எழுப்பி, நமது இளைஞர்களின் சிந்தனைத் திறன் வெளிப்படுத் தினார்கள். இப்படி சிந்திக்கும் இளைஞர்கள் என்பது ஒரு இயக்கத்திற்கு கிடைத்த சொத்து. பெரியாரியலை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் இளைஞர் சக்தி நம்மிடம் உள்ளது. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் புதிதாக வந்து கொண்டே உள்ளனர். புதிய இளைஞர்கள் எங்களைப் போன்ற வர்களைக் கடந்து சிந்தனைகளில் முன்னேறிச் சென்று கொண் டிருக்கின்றனர். அப்படி செல்வது தான் இயக்கத்தின் வளர்ச்சியாக இருக்க முடியும். எவ்வளவு இளைஞர்கள் அறிவுப் பூர்வமாக வளர்கிறார்களோ அப்போது தான் அந்த இயக்கம் வலிமை பெறும். எண்ணிக்கையில் மட்டும் இருந்து பயனில்லை. அதற்கு அடையாள மாகத்தான் தோழர்கள் அணிந்திருந்த பனியன் சட்டையைப் பார்க்கிறேன். இந்த மகிழ்வில் உங்களுடன் நானும் இணைத்துக் கொள்கிறேன். என் னுடைய மகிழ்ச்சியான தருணங்களில் முக்கியமானது என்னவென்றால் தோழர்களுடன் பயணிப்பது என்பதுதான். அதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என்றார் விடுதலை இராசேந்திரன்.
இணையதள பொறுப்பாளர் விஜயகுமார் சீரிய பணி
விடுதலை இராசேந்திரன் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் எழுதிய தலையங்கங்களை 6 தொகுதிகளாகத் தொகுத்தும் அவ்வப்போது கடந்த 20 ஆண்டுகளாக எழுதிய தொடர்களை நூல் வடிவாகத் தொகுத்தும் அதற்கான முழு உழைப்பு பொறுப்பை ஏற்று செயல்பட்டவர் – இணையதள பொறுப்பாளர் விஜயகுமார். 59 நூல்கள் உருவாக அடித்தளம் அமைத்த அவரை கழக சார்பில் பாராட்டுகிறோம்.
பெரியார் முழக்கம் 29122022 இதழ்