வந்தே மாதரம் தேச பக்தி பாடலா ?
பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், தேசிய கீதத்துக்கும் (ஜன கன மண) தேசிய பாடலுக்கும் (வந்தே மாதரம்) ஒரே அந்தஸ்து வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், “தேசிய பாடலான வந்தே மாதரத்திற்கு எந்த அறிவுறுத்தல்களும் இல்லை. இருப் பினும் மக்கள் இரண்டு பாடல் களுக்கும் சம மரியாதை செலுத்த வேண்டும்” என்று பதில் மனுவில் கூறியுள்ளது.
வந்தே மாதரம் தேச பக்தி பாடலா? அது இந்திய ஒன்றியத்தின் பெருமையை கூறுகிறதா ?
பக்கிம் சந்திரா சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர் 1880இல் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற வங்க மொழி நாவலில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் அது. அப்போது ஆட்சி யிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி, முஸ்லிம் மன்னர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சென்னை, பம்பாய், கல்கத்தா நகரங்களில் காலூன்ற முயற்சித்த காலகட்டம் அது.
முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போர் மூலம் ஒழித்து விட்டு, இந்து – ஆங்கிலேய ஆட்சியை உருவாக்க வைணவ இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதே நாவலின் மய்யமான கருத்து. சத்யானந்தா என்ற கதை நாயகன், இந்து இளைஞர்களைத் திரட்டும் போது, அந்த கதாநாயகன் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’.
“நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கு இனம் – மதம் – பண்பாடு பெருமையைக் காப்பதற்கு, முஸ்லிம்களை ஒழித்தாக வேண்டும்; அவர்களை ஒழிக்காவிட்டால் நமது தர்மத்துக்கு எதிர்காலமே இல்லை; 7 கோடி இந்துக்கள் வாளேந்தி களத்தில் குதிப்போம்” என்பதே வந்தே மாதரம் பாடலின் கருத்து.
வந்தே மாதரம் பாடலைப் பாடி வைணவ இந்து இளைஞர்கள் முஸ்லிம்களை கொலைசெய்து, முஸ்லிம் பெண்களை ‘பாலியல்’ வன்முறைக்கு உள்ளாக்கி முற்றாக ஒழித்து விட்டு, காளி தேவி முன் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.
அப்போது கதாநாயகன் சத்யானந்தாவிடம், “நாம் தான் முஸ்லிம்களை அழிந்து ஒழித்து விட்டோமே; இந்து இராஜ்யம் வரவில்லையே; ஆங்கிலேயர்கள் தானே ஆட்சி செய்கிறார்கள்?” என்று கேட்கிறார்கள். அதற்கு கதையின் நாயகன் சத்யானந்தா, “இப்போது நமக்கு எதிரிகளே இல்லை; ஆங்கி லேயர்கள் நம்முடைய நண்பர்கள்; அவர்கள் தங்கள் அதிகாரங்களை நம்முடைய விஷ்ணு கடவுளுக்குத் தான் காணிக்கையாக்கியிருக்கிறார் கள்” என்று பதில் கூறுகிறார்.
இப்படி இஸ்லாமியர் ஒழிப்பையும் ஆங்கிலேயர் ஆதரவையும் கொண் டாடும் ‘வந்தே மாதரம்’ – மனுதர்ம கூட்டத்துக்கு தேசபக்தி பாடலாகி விட்டது. காந்தி ‘வந்தே மாதரம்’ பாடலை ஏற்பதற்கு மறுத்து விட்டார்.
1937இல் காங்கிரஸ், இப்பாடலில் இடம் பெற்ற இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துகளை ஏற்க மறுத்து விட்டது. தேசிய கீதமாக்க முடியாது என்று கூறி விட்டது.
2006இல் ‘வந்தே மாதரம்’ பாடலின் நூற்றாண்டாகக் கருதி, இந்தியா முழுதும் பள்ளிகளில் பகல் 11 மணிக்கு பா டலாம். அதில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் எதிர்ப்பு வரிகளைப் பாட வேண்டாம். விருப்பமில்லாத பள்ளிகள் வந்தே மாதரத்தைப் பாடத் தேவையில்லை என்று ஒன்றிய காங்கிரஸ் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
உண்மையில், 1996 – ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு நூற்றாண்டே அல்ல; 1870இல் எழுதப்பட்டு, 1882இல் ஆனந்த மடம் நாவலில் சேர்க்கப்பட்ட பாடலுக்கு 1996 எப்படி நூற்றாண்டு ஆக முடியும்?
‘வந்தே மாதரம்’ பாடலைப் பாட மறுப்பவர்களை தேசத் துரோகிகள் என்று அப்போது குற்றம் சாட்டியது பா.ஜ.க.! பா.ஜ.க. ஆளும் மாநிலங் களில் இப்பாடலை மதராஸாக்கள் (முஸ்லிம் பள்ளிகள்) உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் பாட வேண் டும் என்று கட்டாயப்படுத்தியது.
ஆக, ‘வந்தே மாதரம்’ தேசபக்தி பாடல் அல்ல; இஸ்லாமிய வெறுப் பையும் ஆங்கிலேயர் புகழ்ச்சியையும் கொண்டது. பாடலின் முதல் இரண்டு பத்திகள், ‘தாய் மண்ணைப் புகழ்கிறது’ என்பதாலேயே அது தேசபக்திப் பாடலாகி விடாது.
(விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்’ நூலிலிருந்து)
பெரியார் முழக்கம் 10112022 இதழ்