செஞ்சட்டைப் பேரணி மாநாட்டில் கொளத்தூர் மணி உரை கொள்கை எதிரியை அடையாளம் கண்டு விட்டோம்; கொள்கை அணியை உருவாக்குவோம்!

தி.க. கொடியை உருவக்கிய பெரியார், நடுவில் உள்ள சிவப்பு வட்டம் பெரிதாகி, சிவப்புக் கொடியாக மாறும் என்று கூறியதை நினைவு கூர்ந்தார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.  மதுரை செஞ்சட்டை பேரணிக்குத் தலைமை யேற்ற கழகத் தலைவர் மாநாட்டில் ஆற்றிய உரை:

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் நோக்கத்தை ஒருங்கிணைப்பாளர் பொழிலன் விளக்கியிருக்கிறார். இந்த மூன்று பேரணிகள் நடந்ததும் இதன் முதன்மை மாந்தர்களாக காட்டப்படுகிற பெரியாரும், அம்பேத்கரும், மார்க்சும் எளிய வஞ்சிக்கப்பட்ட மக்களை இலக்காக கொண்டு தத்துவங்களை உருவாக்கிப் போராடியவர்கள். இந்த மண்ணில், சுரண்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்கள் இன்னும் இருக்கிறார்கள். அந்த சூத்திரர்களும், பஞ்சமர்களும் தான் உழைப்புச் சுரண்டல்களுக்கு உள்ளானவர்களாக இருக் கிறார்கள். இந்த மூன்று பேரின் நோக்கமும் ஒன்று தான். ஆனால், தனித்தனியாக இயங்கி வந்திருக் கிறோம். இது இயங்கக் கூடாது என்ற கருத்து 30’களில் தோன்றியிருந்தாலும், இடையில் பிரிவு, உறவு இரண்டும் நடந்திருக்கின்றன. ஆனால், இந்த வேளையில், இந்த நாட்டில் வடபுலத்தில் தலைவிரித்தாடிய மதவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம், தமிழ் மண்ணில் அதன் அரசியல் பிரிவை நுழையவிட்டு அதற்கு பின்னால் இந்த சித்தாந்தத்தை நிறுவ விரும்புகிறார்கள். களத்தில் அவர்கள் வெற்றி பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், சித்தாந்தத்தை உள் நுழைத்தலில் அவர்கள் வெற்றி பெற்றுதான் இருக்கிறார்கள். அவர்கள் மெல்ல மெல்ல நம்மையும் இந்துக்களாக மாற்ற முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது நடைமுறையில் வெற்றி பெற்று விடக்கூடும் என்ற சூழலில் தான், நாம் இணைந்து நின்று செயல்பட வேண்டிய நேரத்தில் இந்த பேரணிகளில் இணைந்து நின்றோம். அவர்களை அரசியலில் இருந்து மட்டுமல்ல, சித்தாந்த ரீதியிலும் முறியடிப்போம் என்ற ரீதியில் தான் இந்த பேரணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பெரியார் இயக்கம் கண்ட போது அதன் கொடியை திராவிடர் கழகத்திற்கு உருவாக்குகிற போது, கருப்பு நடுவிலே சிவப்பு வட்டம் என்று கூறினார். அதோடு பெரியார் விட்டுவிடவில்லை, இந்த சிவப்பு வட்டம் விரிவடைந்து சிவப்பு கொடியாக மாறும் என்று கூறினார். இப்போது அதன் தேவை அதிகமாக இருக்கின்றது. பேரணிக்கான ஒற்றுமை என்று கருதாமல், இது கொள்கை ஒற்றுமை, ஒற்றுமையாக இருக்க வேண்டியவர்கள் பங்காளிகளாக ஆங்காங்கே செயல்பட்டு வருகிறோம்; இது கொள்கை அணியாக மாற வேண்டும்.

கொள்கை ஒற்றுமை கொண்ட நாம், கொள்கை எதிரியை அடையாளம் கண்டிருக்கிறோம். ஆனால், வீழ்த்துவதற்கான நெறிமுறைகளை, வழிமுறைகளை, போராட்டங்களை எடுப்போம். பெரியார் திருச்சி உறையூரில் 1972 இல் “கம்யூனிசம்” என்ற தலைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார். அவர் மறைவதற்கு முன்பு 1973 அக்டோபரில் “சமதர்மம்” என்ற கட்டுரையை எழுதுகிறார். அதில் பொதுவுடைமையின் தேவையை வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

ஆனால், பெரியாரியிலர்களாகிய நாம் தான் அதை சரியாகப் பின்பற்றவில்லை. அந்த களங்கத்தையும் நீக்கிக் கொள்வோம். அனைவரும் இணைந்து, வர்க்க பேதமற்ற, வர்ண பேதமற்ற சமுதாயத்தை படைப்பதில் ஒன்றிணைவோம், ஒன்றிணைந்து போராடுவோம் என்று கூறிக் கொள்கிறேன்.

 

பெரியார் முழக்கம் 02062022 இதழ்

You may also like...