உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேச்சு சாதியம் – ஆணாதிக்கம் – தகுதி திறமை சமூகத்தை ஒடுக்கும் கட்டமைப்புகள்
இந்தியாவின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி.ஒய். சந்திரசூட், சாதியம்-ஆணாதிக்கம், தகுதி திறமைக் கோட் பாடு ஆகியவை சமூகத்தை ஒடுக்கும் கட்டமைப்புகளாக இருக்கின்றன என்று கூறியுள்ளார். தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் கடந்த சனிக்கிழமை (அக்.15, 2022) பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று அவர் பேசினார்.
“நாம் இப்போது சட்டம் ஆட்சி செய்யும் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மை வழி நடத்தும் இந்த சட்டங்களின் இலக்கு எத்தகையதாக இருத்தல் வேண்டும்? நிச்சயமாக சட்டத்தின் விதிகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டு அதன் உள்ளடக்கத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக இருக்க முடியாது. நம்முடைய அரசியல் பண்பாடு, குடிமக்களின் பழக்கங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறை வழக்கறிஞர்களிடம் இந்தக் கண்ணோட்டம் வரவேண்டும்.
நாம் இப்போது சட்டத்தின் ஆட்சி நடக்கும் சமூகத்தில் வாழ்கிறோம். இந்தச் சமூகம் – சாதியம், ஆணாதிக்கம் – தகுதி திறமைக் கோட்பாடுகளைப் (யடெநளைஅ) பேசி, சமூக ஒடுக்குமுறைக் கட்டமைப்புகளாக மாற்றி வைத்துள்ளது. இந்த சமூகச் சூழலைப் புரிந்து சட்டத்தை நாம் முறையாகப் பயன் படுத்தினால், ஒடுக்கும் கட்டமைப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். சட்டம இத்தகைய இலக்கு நோக்கியதாக நடைபோட வேண்டும் என்பதே நமது விருப்பம். இதை நீங்களோ, நானோ தனி நபராக சாதிப்பது சாத்தியமற்றது. அந்த இலக்கை நோக்கி சட்டத்தைப் பயன் படுத்துவதில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு என்பதை உணர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
டி.ஒய். சந்திரசூட், உச்சநீதிமன்ற நீதிபதி யாக இருந்து பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர். அடுத்த இரண்டு ஆண்டு காலத்துக்கு அவர் தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். இவரது தந்தையும் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
டி.ஒய். சந்திரசூட், அண்மையில் திருமண மாகாத பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமை உண்டு என்ற புரட்சிகர தீர்ப்பை வழங்கினார். இராணுவத்தில் பெண்கள் நிரந்தரமாக உயர் அதிகாரிகளாக வரலாம்; தன்பால் உறவுக்கான உரிமை போன்ற தீர்ப்புகளும் அவர் தலைமை ஏற்ற அமர்வுகள் வழங்கியவையேயாகும். இந்தத் தீர்ப்புக்குப் பிறகு தான் திருநங்கைகள் விமானப் பணிப் பெண்களாக நியமிக்கப் பட்டனர். அயோத்தி ராமன் கோயில் வழக்கில் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய 5 நீதிபதி களடங்கிய அமர்வில் இவரும் இருந்தார். அதற்குப் பிறகு வாரணாசி மசூதி – ஒரு காலத்தில் கோயிலாக இருந்தது என்று தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமியர்களை தொழுகைக்கு அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையை இவரது தலைமையிலான அமர்வு நிராகரித்து விட்டது.
மருத்துவக் கல்லூரி மேல் பட்டப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தி.மு.க. ஆட்சி தொடர்ந்த வழக்கில் இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற புரட்சிகரமான தீர்ப்பை வழங்கியது டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தான்.
பெரியார் முழக்கம் 20102022 இதழ்