இந்துத்துவா மாடல் – இப்படி
திராவிட மாடல் ஆட்சி என்றாலே, அதை குறை கூறுகிறார்கள், பாஜகவினரும், இந்துத்துவத்தினரும், பார்ப்பனர்களும். ஆனால் இந்துத்துவ மாடல் ஆட்சி எப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு ஏடுகளில் வந்திருக்கிற ஒரு செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
உத்திரகாண்ட் மாநிலத்திலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அரசு ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கிறது. உத்திரகாண்ட் மாநிலத்தில் அங்கு உள்ள ஒரு சிறையில் ஒரு நாள் ஒரு இரவு பொழுது தங்கிவிட்டு திரும்பினால் தோஷம் கழிந்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு சிறையில் அடைப்பதற்காக அரசே ஏற்பாடுகளை செய்து இருக்கிறது. ஒரு இரவுக்கு 500 ரூபாய் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு இரவுக்கு 500 ரூபாய் செலுத்தி சிறையில் இருந்துவிட்டு வரலாம் என திட்டம் இருக்கிறது. இப்போது உத்திரகாண்ட் அரசும் அதே திட்டத்தை பின்பற்றப் போவதாக அறிவித்து இருக்கிறது.
ஜாதகப்படி தங்கள் மீதுள்ள தோஷம் இப்படி ஒரு நாள் இரவு சிறையில் தங்கிவிட்டு வந்தால் கழிந்து விடும் என்று மக்கள் நம்புகிறார்களாம். அதற்காக அரசே இப்படி ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. ‘ஹாத்துவானி’ பகுதியில் உள்ள ஒரு சிறையில் சிறைத்துறை அதிகாரியாக இருக்கும் ‘சதீஷ் சடிஜா’ என்பவர் கூறும் போது, தோஷம் என்று கூறி வருபவர்களுக்கு 500ரூபாய் கட்டணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு கைதிகளின் உடைகளை வழங்குகிறோம். சிறையில் உள்ள உணவுகளை வழங்குகிறோம். ஒரு நாள் முழுதும் இரவு சிறையில் தங்க வைக்கின்றோம். பிறகு அடுத்த நாள் காலை விடுதலை செய்கின்றோம் என்று தங்களுடைய அரசு திட்டத்தை பெருமையோடு அறிவித்து இருக்கிறார்.
நாளைக்கு சுடுகாட்டில் போய் பிணமாக படுத்திருந்தால் சாவு தோஷத்தில் இருந்து விலக்கு தங்களுக்கு கிடைக்கும் என்று நம்பினால் அதற்கும் இந்துத்துவா ஆட்சி ஏற்பாடு செய்தாலும் ஆர்ச்சர்யப்படுவதற்கு இல்லை. இது தான் இந்துதுவ மாடல் ஆட்சி.
‘சனாதன சன்ஸ்தா’ ஏன் தடை செய்யப்படவில்லை?
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு அதன் துணை அமைப்புகளும் ஐந்தாண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஒன்றிய இந்துத்துவ ஆட்சி இந்த அறிவிப்பை இப்போது வெளியிட்டு இருக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.
இஸ்லாமியர்கள் என்றால் அவர் இந்தியாவினுடைய விரோதிகள். பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற ஒரு பிம்பத்தை இவர்கள் கட்டமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எத்தனையோ இந்து தீவிரவாத அமைப்புகள் இந்த நாட்டில் வன்முறையை கையில் எடுத்துக்கொண்டு கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கின்றன. அவைகளெல்லாம் சுதந்திரமாக செயல்படுவதற்கு இந்துதுவ மோடி ஆட்சி அனுமதித்துக் கொண்டு இருக்கிறது.
“சனாதன் சன்ஸ்தா” என்ற ஒரு இந்துத்துவ அமைப்பு கோவாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பினர் தபோல்கரை 2013ஆம் ஆண்டிலும், பன்சாரேவை 2015ஆம் ஆண்டிலும், கல்புர்க்கியை 2015ஆம் ஆண்டிலும், கௌரி லங்கேஷை 2016ஆம் ஆண்டிலும் பட்டப் பகலில் சுட்டுக் கொலை செய்தனர். கொலை செய்தவர்கள் சனாதன சன்ஸ்தா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு அவர்கள் மீதான விசாரணை வேண்டுமென்றே 2013லிருந்து காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
ஒரு பயங்கரவாத அமைப்பு குறிப்பிட்ட பெயர் கொண்ட அமைப்பு இத்தனை படுகொலை செய்தது என்பது சி.பி.அய். விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகும் கூட அந்த அமைப்பை இன்னும் அவர்கள் தடை செய்யவில்லை. இந்தியாவை இந்து இராஷ்ட்ரமாக மாற்றுவதற்கு இஸ்லாமியர்களை விரோதிகளாக கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இஸ்லாமிய சமூகம் இன்றைக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றது. வடநாட்டில் இஸ்லாமியர்கள் வாழ்வதற்கு உரிய உரிமைகள் கூட இல்லாமல் அச்சத்தோடு வாழ்கின்ற ஒரு நிலையை உருவாக்கி விட்டார்கள்.
குஜராத்திலே மிகப் பெரிய இனப் படுகொலையை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தினார்கள். தண்டிக்கப்பட்டவர்கள் இப்போது விடுவிக்கப்பட்டு வருகின்றார்கள். உ.பி.யிலே மிகப்பெரிய இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தை நடத்தினார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. மத மாற்ற தடைச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் மாநிலத்திற்கான தனி உரிமை பறிப்பு, முத்தலாக் எதிர்ப்பு என்று படிப்படியாக இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தி வருகிறார்கள்.
பெரியார் முழக்கம் 06102022 இதழ்