தேசியக் கொடியை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொண்டதா?
தேச பக்திக்கு தாங்களே முழு உரிமையாளர்கள் என்று பாஜகவினர் நாடகம் போட்டார்கள். ஆனால், இவர்களின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் தேசியக்கொடியை ஏற்றுக் கொண்டதா ? வரலாறு என்ன ? ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1) காங்கிரஸ் கட்சி நடுவில் கை இராட்டினம் உடைய மூவர்ணக் கொடியை ஏற்றுக் கொண்டது. 1929 -இல் இலாகூரில் கூடிய காங்கிரஸ், “ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதியை சுதந்திர நாளாகக் கொண்டாடி, மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டும்”என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் ஆர்.எஸ்.எஸ், “அதை ஏற்க முடியாது, அது இந்துக்களின் கொடி அல்ல” என்று பகிரங்கமாக அறிவித்தது. அதன் தலைவர் ஹெட்கேவர், ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் “பஹவா ஜந்தா” என்ற காவிக் கொடியைத் தான் ஏற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு 1930 ஜனவரி 21 இல் சுற்றறிக்கை அனுப்பினார். ஆதாரம் (ஹெட்கேவர் கடிதங்கள்.வெளியீடு அர்ச்சனா பிரகாசன், இந்தூர் 1981.பக்கம் 18) இந்த சுற்றறிக்கை இதுவரை திரும்பப் பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2) 1946 ஜனவரி 14 இல் ஆர்.எஸ்.எஸ் குரு பூர்ணிமா விழாவில் பேசிய அதன் தலைவர், “பாரதிய கலாச்சாரத்தின் முழுமையான அடையாளம் காவிக் கொடி மட்டுமே. அது கடவுளின் சின்னம். தேசம் முழுவதும் காவிக் கொடியை வணங்கும் நாள் வந்தே தீரும்” என்று பேசினார். (ஆதாரம் கோல்வாக்கர்-குருஜி சம்ஹார் தர்சன் தொகுப்புகள். பாரதிய வித்யா பவன் வெளியீடு. )
3) 1947 சுதந்திர நாளில் நேரு செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றவிருந்த தருணத்தில், ஆர்.எஸ்.எஸ் ஆங்கில ஏடான ‘ஆர்கனைசர்’துர்திஷ்ட வசமாக அதிகாரத்திற்கு வந்துவிட்ட காங்கிரஸ் நமது கையில் தேசியக் கொடியை இன்றைக்கு தந்திருக்கலாம். இதை இந்துக்கள் மதிக்கப் போவதில்லை. ஏற்கவும் மாட்டார்கள்’ என்று எழுதியது. (ஆர்கனைசர், ஆகஸ்டு 14, 1947)
4) 1947 ஆகஸ்டு 17 இல் இதே ஆர்கனைசர் ஏடு “இந்த மூவர்ணக் கொடி முட்டாள் தனமானது, ‘ளுhநநச சூடிளேநளேந’. இங்கே இந்துஸ்தானம் என்ற ஒரே தேசம் தான் இருக்கிறது. அது இந்துக்களின் தேசம். பிற சமூகத்தினரை திருப்தி படுத்தக் கூடிய ஒரு கொடியை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம்” என்று எழுதியது.
5) கோல்வாக்கர் தனது “சிந்தனைக் கொத்து” (Bunch of Thoughts) நூலில்,”நீண்ட பழம் கலாச்சாரத்திற்கு உரியவர்களான நமக்கென்று ஒரு கொடி இல்லாமல் இருந்திருக்குமா ? நிச்சயம் நமக்கு இருந்தது. பிறகு எதற்கு தேசியக் கொடி?” என்று எழுதினார். (Bunch of Thoughts, சாகித்ய சிந்து பிரகாசன் வெளியீடு. பெங்களூர். பக்கம் 237,238)
6) 1941 செப்டம்பர் 22 இல் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சாவர்க்கர், ‘இந்து மகா சபையின் கொடி சுவஸ்திக் கொடி. அது இந்து இனத்தின் குறியீடு. இந்த மூவர்ண தேசியக் கொடியை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும்’ என்று பகிரங்கமாக அறிக்கை விடுத்தார்.
இப்படி தேசியக் கொடியை ஏற்க மறுத்தவர்கள், எற்க மறுத்த அறிக்கையை இன்று வரை திரும்பப் பெறாதவர்கள் இப்கோது தேச பக்தி நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
தகவல் : இந்து ஆங்கில நாளேடு (ஆகஸ்டு 26,2022 இல் வெளியிட்ட கட்டுரை.)
பெரியார் முழக்கம் 01092022 இதழ்