சாமியாடுவது அற்புத சக்தியாம்? எட்வின் பிரபாகரன்

உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்ரமணியத்தின் போலி அறிவியல் வாதங்களுக்கு  ஆணித்தர மறுப்பு (9)

‘நிமிர்வோம்’ மாத இதழில் 2020 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ள கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடுகிறோம்.

புதிர் 15: 1995ஆம் ஆண்டு, செப்டம்பர் 21ஆம் நாள், தெற்கு புது டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் விநாயகர் சிலை, தும்பிக்கையின் மூலம் பாலை உறிஞ்சி விட்டதாக ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவியது. நாடெங்கும் பல விநாயகர் கோயில்களிலும் இதே சம்பவம் நடந்ததாக மக்கள் பரவசத்தோடு கொண்டாடினர். அறிவியலாளர்கள் அளித்த விளக்கம் என்னவென்றால், விநாயகர் சிலைகளில் உள்ள மிக நுண்ணிய துளைகளின் மூலமாக, தந்துகி எழுகை முறையால் (Capillary Rise Method), பால் உறிஞ்சப்படுகிறது என்பதேயாகும். அன்று மாலைக்குள், இந்த விளக்கம் பிடிக்காததாலோ என்னவோ, விநாயகர் சிலைகள் பால் குடிப்பதை நிறுத்திவிட்டன.

தந்துகி எழுகை முறையில் இது நடக்குமானால், ஏன் இதற்கு முன் அப்படி நடக்கவில்லை என்ற கேள்விக்கும், அன்று மாலைக்குப் பின், ஏன் அது தொடரவில்லை என்பதற்கும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. பெண்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாகப் போகும்போதும், கூழூத்தும்போதும், பலருக்கு ஆவேசம் வருவதையும், சாமியாடுவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இப்படி எந்த புறக்காரணிகளும் இல்லாமல், ஒரு கூட்டத்தினரின் கற்பனையில் உருவாகி, அதை அவர்கள் உண்மை என்று நம்புகிற அளவுக்கு உடலில் மாற்றங்கள் ஏற்படும் நிகழ்வுகளுக்கு அறிஞர்கள், குழு இசைவு நோய் (Mass Hysteria) என்று பெயரிட்டுள்ளனர். இந்நோயின் தாக்கம், ஒரு உடலில் இருந்து எப்படி பல உடல்களுக்கு பரவுகிறது என்பதற்கும், சிறிது நேரம் கழித்து உடல் தானா கவே எப்படி இதிலிருந்து விடுபடுகிறது என்பதற்கும், அறிவியலால் இன்று வரை விடை காண முடியவில்லை.

விடை: விநாயகர் சிலை பால் குடிப்பதற்கு தந்துகி எழுகை முறையை காரணமாக கூறினாலும், இந்த ஒன்று மட்டுமே காரணமல்ல. மேற்பரப்பு இறுக்கம், ஒரு செய்தியை உறுதிபடுத்துவதில் இருக்கும் ஒருசார்புத் தன்மை ஆகியவையும் பெரும் பங்காற்றியுள்ளன. மக்கள் தாங்கள் எது நடந்தது என்று நம்ப நினைக்கிறார்களோ, அதுவே நடந்ததாக சாதிக்கின்றனர். இதுவே ஒரு ஒட்டுமொத்த குழுவினரின் நம்பிக்கையாக இருக்கும்போது, அது அந்த குழுவையே நம்பிக்கை அடிப்படையில் உண்மைக்கு புறம்பான முடிவை எடுக்க வைக்கிறது.

சிலை பால் குடிக்கும் என்று குழுவாக நம்பி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது, கூட்டத்தை பார்த்தால் சாமியாடுவது, இத்தகைய குழு மனநோய்க்கான விளக்கத்தை 2002ஆம் ஆண்டு வெளியான British Journal of Psychiatry ஆய்விதழில், பார்தலொமியூ, சைமன் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், “Protean nature of mass sociogenic illness” என்ற கட்டுரையில் கூறியுள்ளனர். “இத்தகைய “கூட்ட வெறி” என்பது ஒத்திசைவுள்ள குழுவினருக்குள் வேகமாக  நோய் அறிகுறிகளை உருவாக்கும். இது உருவாகுவதற்கு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் உற்சாகம், இழப்பு, பயன்பாட்டின் மாற்றம் ஆகியவையே காரணங்களாகும். இதனால் உடல்ரீதியாக ஏற்படும் தற்காலிக மாற்றங் களுக்கு குறிப்பிட்ட எந்த காரணமும் இல்லை. இடம் பொருள் ஏவலுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு குழுவின் செயல்பாடு களிலும் தற்காலிக மாற்றங்கள் தோன்றி மறையும்” என்று இகக்கூர்மையான விளக்கத்தை, மனித மனங்களை ஆராய்ந்து கூறியுள்ளனர். எனவே மக்களின் இந்த மூடநம்பிக்கை செயல்கள் அறிவியல் விளக்கத்துக்கு அப்பாற்பட்டவையல்ல.

இன்னும் சில புதிர்கள் “அறிவியலுக்கு அப்பால்” நூலில் கூறப்பட்டுள்ளன. இவற்றுக்கும் தெளிவான அறிவியல் விளக்கங்கள் உள்ளன. அதுவும் இந்த நூல் எழுதப்பட்ட 2014ஆம் ஆண்டுக்கு முன்பே இந்த புதிர்களுக்கு முறையான பதில்கள் கிடைத்துவிட்டன. அவற்றையெல்லாம் கவனித்து இருந்தால், இந்த நூலை எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காது.

(கட்டுரையாளர் கழக செயல்பாட்டாளர்)

பெரியார் முழக்கம் 02062022 இதழ்

You may also like...