கல்வியில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு: உயர்நீதிமன்றம் பாராட்டு
கொரோனா பேரிடரால் பள்ளி செல்லாமல் இடைநின்ற 6 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கணக்கெடுத்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இல்லம் தேடி கல்வித்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு பதிலளித்தது. இடைநிற்றல் மிகப் பெரிய பிரச்னையாக இருப்பதாக கூறிய நீதிபதிகள், அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர். மேலும் தமிழ்நாடும், கேரளாவும் கல்வி அறிவில் சிறந்து விளங்குவதாகவும், இது
2 மாநில அரசுகளின் சாதனை என்றும் நீதிபதிகள் பாராட்டினர்.
பள்ளிக்கல்வியில் மட்டுமல்ல உயர்கல்வியிலும் தமிழ்நாடுதான் இந்தியாவின் முதன்மை மாநிலாமாக திகழ்கிறது என்பதை கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வரும் சிறந்த கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசை பட்டியல் வெளிக்காட்டுகிறது. 2 வாரங்களுக்கு முன்பு வெளியான இந்த ஆண்டுக்கான பட்டியலில் ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் 18 கல்லூரிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவை. பொறியியலில் 16 கல்லூரிகளும், ஆராய்ச்சியில் 10 கல்லூரிகளும், மேலாண்மையில் 11 கல்லூரிகளும், கலை அறிவியலில் 32 கல்லூரிகளும், மருத்துவத்தில் 8 கல்லூரிகளும் தமிழ்நாட்டில் இருந்து தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.
பெரியார் முழக்கம் 04082022 இதழ்