ஒன்றிய அமைச்சர் தேர்வு செய்த ஊடக அதிபர்களின் இரகசிய சந்திப்பு

தமிழ்நாட்டில், பாஜகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளிவந்து கொண்டிருப்பது தினமலர் நாளேடு. அந்த நாளேடு 30.07.2022 அன்று ஒரு செய்தியை வெளியிட்டது. தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். அப்போது மோடி, தமிழ்நாடு பாஜகவினரிடம் ஒரு கருத்தை எச்சரிக்கையாக கூறி இருக்கிறார்; ‘திராவிட முன்னேற்றக் கழகம், பாஜகவிற்கு சிந்தாந்த ரீதியாக எதிரான ஒரு கட்சி. அதே நேரத்தில் திமுகவை பாஜக எதிர்க் கின்றபோது, பாஜக தமிழ் மொழிக்கோ, தமிழ் கலாச்சாரத்திற்கோ எதிரான கட்சி என்று மக்கள் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்ள வேண்டும்’ என்று அவர் எச்சரிக்கை செய்ததாக அந்த செய்தி கூறுகிறது.

மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம், திருக்குறளின் பெருமையையும், தமிழின் பெருமையையும் ஏன் பேசி வருகிறார்?  அதன் பின்னால் உள்ள உள்நோக்கம் என்ன என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வேண்டுமானால், தமிழின் பெருமையையும், திருக்குறளின் பெருமையையும் பேசியாக வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் இதை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தான் மோடியின் கருத்து பிரதிபலிப்பதாக இருக்கிறது.

தினமலர் நாளேடு பாஜகவின் செல்வாக்குமிக்க நாளேடு. தமிழ்நாட்டில் நடைபெறும் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர், அனுராக் சிங் தாக்கூர், தினமலர் நிர்வாகி ஆ.ஆதிமூலம் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கே ஊடகத் துறையைச் சேர்ந்த, குறிப்பிடத்தக்க சிலரை மட்டும் அவர் சந்தித்து பேசியிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. குறிப்பாக ‘இந்து குழுமம், புதிய தலைமுறை, ராஜ், பாலிமர், நியூஸ் 7, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆனந்த விகடன்’ ஆகிய ஊடகங்களின் அதிபர்களை மட்டும் மத்திய அமைச்சர், தினமலர் நிர்வாகி ஆ.ஆதிமூலம் வீட்டில் சந்தித்து பேசியிருக்கிறார்.

ஊடக சந்திப்பு என்றால், அதில் அனைத்து ஊடகங்களும் பங்கேற்பதாக இருக்க வேண்டும். ஆனால், தேர்வு செய்யப்பட்ட சில ஊடகங்களை மட்டும் அமைச்சர் ஏன் சந்தித்திருக்கிறார் என்பதை சந்தித்த ஊடகத்துறையினர் தான் மக்களுக்கு வெளிச்சப்படுத்த வேண்டும். அத்தகைய செல்வாக்கு மிக்க தினமலர் நாளேடு தான் மோடியினுடைய இந்தக் கருத்தையும் வெளியிட்டிருக்கிறது.

 

பெரியார் முழக்கம் 04082022 இதழ்

 

You may also like...