ஆலோசனைகள் இலவசம்

நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது,

சில யோசனைகளை இலவசமாக முன் வைக்கலாமே என்று மனது துடித்தது, அதனால் சில இலவச யோசனைகள்…..

  • தீவிரவாதிகள், விமானத்தைக் கடத்தப் போகிறார்கள்; ரயிலைக் கவிழ்க்கப் போகிறார்கள்;பெருநகரங்களுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தப்போவதாக செய்திகள் வருகின்றன. எனவே, நாடு முழுதும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பயணிகள் சோதனை செய்யப்படுகிறார்கள். விடுதிகளில், சோதனை சாலைகளில், வாகனங்கள் விடிய விடிய சோதனை;இப்படி ஒவ்வொரு முறையும் ‘குடியரசு’, ‘சுதந்திர நாள்’ வரும் போதெல்லாம் மக்களே அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்.

எனவே அரசுக்கு ஒரு ஆலோசனையை முன் வைக்கிறோம். இத்தகைய பயங்கரவாத அச்சுறுத்தல் வரலாம், சட்டம் ஒழுங்கு பாதிப்பு வரலாம் என்று கூறி, காவல்துறையினர், பல நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தருவதில்லை. அதேபோல் நாட்டின் பயங்கரவாதத்தைத் தடுக்க, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற – சுதந்திர நாள், குடியரசு நாளையும் காவல்துறை ரத்து செய்து விட்டால், மக்கள் அச்சமின்றி நிம்மதியாக, அன்றாட வாழ்க்கையை கவனிப்பார்களே!

  • தமிழ்நாட்டில் 17 நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துவிட்டதால், பதறிப் போய் நிற்கும் வேந்தர், துணைவேந்தர்களுக்கு அடியேனின் ஆலோசனை!

நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை வேண்டுமானால் தாராளமாக ரத்து செய்யுங்கள், பரவாயில்லை. அதற்கு மாற்றாக எங்கள் கல்லூரி வளாகப் பகுதியை சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவித்து விடுங்கள் ! என்ற கோரிக்கையை முன் வைக்கலாமே!

கல்லூரி வளாகத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக்கிவிட்டால், கல்வி வியாபாரம் சிறப்பாக நடக்கும். அரசின் சட்டங்களோ, இடஒதுக்கீட்டுக் கொள்கைகளோ கட்டுப்படுத்த முடியாது;மாணவர்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து ரூபாய்க்கு பதிலாக டாலரில் வர்த்தகம் நடத்தலாம். அன்னியச் செலாவணியும் அதிகரிக்கும். வருமானவரி அதிகாரி சோதனை, தாண்டன் குழு அறிக்கை, கபில்சிபல் கெடுபிடி என்று எந்தத் தொல்லையும் நெருங்க முடியாது. இந்த நல்ல ஆலோசனையை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தினர் பரிசீலிக்கலாம். எல்லாம் உங்கள் நலனுக்குத்தான்!

  • தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெண் சிசுக் கொலையைத் தடுப்பது தொடர்பாக – மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பத்திரிகைகளில் முழுப் பக்க விளம்பரங்களை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் மன்மோகன், சோனியாகாந்தி படங்களுக்கு, அடுத்ததாக பாகிஸ்தான் விமானப்படை முன்னாள் தளபதி தன்வீரர் முகம்மது என்பவரின் படம் வெளியிடப்பட்டுள்ளது. விசாரித்தபோது, இந்திய விமானப் படை தளபதி படத்துக்கு பதிலாக, பாகிஸ்தான் விமானப்படை தளபதி படம் தவறுதலாக வெளியிடப்பட்டுவிட்டதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்தத் தவறுக்கு சமாதானமாக கீழ்க்கண்ட விளக்கத்தை, துறையின் இணை அமைச்சர் தந்துள்ளார்.

“விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள புகைப்படம் ஒரு அடையாளம் மட்டுமே. அதில் அடங்கியுள்ள செய்திதான் முக்கியம். எனவே விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள புகைப்படத்தைப் பார்க்காமல்,அதில் இருக்கும் வாசகங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

சரிதான்; அப்படியே ஏற்று செயல்படுகிறோம். இனிமேல் மத்திய அரசு வெளியிடும் விளம்பரங்களில் உள்ள படங்களைப் பார்க்க மாட்டோம். அதில் உள்ள கருத்துகளை மட்டுமே பார்க்கிறோம். இனி மன்மோகன் படத்துக்கு பதிலாக, சூடான் நாட்டு அதிபரைப் போட்டாலும் சரி,சோனியாவுக்கு பதிலாக சானியா மிஸ்ரா படத்தைப் போட்டாலும் சரி, படங்களைப் பார்க்காமல்,கருத்துகளை மட்டுமே பார்க்கிறோம், அய்யா!

அதேபோல், விளம்பரங்களில் வெளியாகும் கருத்துகளில் தவறு வந்துவிட்டதாக வைத்துக் கொள்வோம்; அப்போது படங்களை மட்டும் பாருங்கள், கருத்துகளைப் பார்க்கக் கூடாது என்று,அமைச்சர்கள் கூறினால், அதையும் பின்பற்ற தயாராகவே இருக்கிறோம். ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம். கருத்தை மட்டும் பாருங்கள்; அல்லது படத்தை மட்டும் பாருங்கள்; அல்லது இந்த விளம்பரத்தில் அடங்கியுள்ள கருத்து, படம் இரண்டையுமே பார்க்க வேண்டாம்; படிக்க வேண்டாம் என்று ‘கறாராக’ விளம்பரப்படுத்தி விடுங்கள்.

அப்போதுதான் அரசு பெரும் தொகை செலவிட்டு செய்துள்ள விளம்பரத்தின் சிறந்த பயன் மக்களுக்குத் தெளிவாகப் போய்ச் சேரும் என்பது அடியேனின் தாழ்மையான ஆலோசனை.

கோடங்குடி மாரிமுத்து

பெரியார் முழக்கம் ஜனவரி 2010 இதழ்

You may also like...

Leave a Reply