கழகத் தோழர்களுக்கு இணையதள பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணையதள பயிலரங்கம் திருச்சி டான் போஸ்கோ மீடியா அரங்கில் 22.07.22 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தொடங்கி கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  முன்னிலையிலும் நடைபெற்றது.

முதல் நிகழ்வில் கழக சமூக ஊடக பொறுப்பாளர் பரிமளராசன் அறிமுக உரையாக பெரியார் காலத்தில் இருந்த பரப்புரை வடிவங்களும், காலமாற்றத்தில் பரப்புரை வடிவங்களின் மாற்றங்களும், தற்போதைய சூழலில் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாக்கங்கள் குறித்தும், சமூக ஊடகங்களில் கழகத் தோழர்கள் பணியாற்றுவது குறித்தும் பேசினார்.

பயிலரங்கின் சிறப்பு அழைப்பாளரான ‘யூடர்ன்’ வலைத்தளத்தின் உரிமை யாளரும், பத்திரிக்கையாளர், குறும்பட தயாரிப்பாளர் ‘யூ டியுபர்’ அயன் கார்த்திகேயன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பும் செய்திகளின் உண்மை தன்மைகளை எப்படி கண்டறிவது மற்றும் செய்திகளை  போலியாக உருவாக்கி எப்படி கட்டமைக்கிறார்கள் என்பது குறித்தும் இவற்றை நாம் எவ்வாறு அடையாளம் கண்டு பிரித்துப் பார்ப்பது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கழகத்தின் இணையதள பொறுப்பாளர் விஜயகுமார் காணொளி வடிவில் ட்விட்டர் செயல்பாடு குறித்தும் கழகத்தின் இணையதளத்தில் உள்ள விபரங்கள், புத்தகங்கள், காணொளிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். பங்கேற்ற தோழர்களுக்கு புதிய டிவிட்டர் கணக்கை துவங்கி அதில் பதிவிடுவது குறித்து நேரடியாக செயல்முறையுடன் விளக்கினார்.

தொடர்ந்து கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் மணியமுதன். மா.பா. புதியதாய்  ‘யூடியூப்’  ஆரம்பிப்பது எப்படி என விளக்கினார். பின்  ‘யூடியூப்’  இயங்கும் விதம் குறித்தும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் அதில் உள்ள தொழில்நுட்ப விபரங்களை காணொளியின் மூலம் விரிவாக எடுத்துக் கூறினார். அலைபேசியிலேயே மீம்ஸ் உருவாக்குவது, படங்களை எடிட் செய்வது குறித்தும் அதற்கான மென்பொருட்கள் குறித்தும் விளக்கினார்.

தோழர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பரிமளராசன், விஜயகுமார், மணியமுதன் ஆகியோர் விளக்கங்கள் அளித்தனர்.

நிறைவாக கலந்து கொண்ட தோழர்கள் கருத்தரங்கு குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். தோழர்கள் இக்கருத்தரங்கு புதிய பல தகவல்களை அறிந்து கொள்ள உதவியது என்று கூறினார்கள்.

முடிவில் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இக்கருத்தரங்கில் கழகத் தோழர்கள் 54 பேர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 28072022 இதழ்

You may also like...